216. 'மற்றுநீ வன்மை பேசி வன்றொண்ட னென்னு
                                 நாமம்
 
  பெற்றனை; நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின்
                                 மிக்க
அர்ச்சனை பாட்டே யாகு; மாதலான் மண்மே
                              னம்மைச்
சொற்றமிழ் பாடு' கென்றார் தூமறை பாடும்
                               வாயான்.
70

     (இ-ள்.) வெளிப்படை. ‘நீ மறுத்து நம்மிடம் வலிந்து பேசியதால்
வன்றொண்டன் என்று பெயர்பெற்றாய். நமக்கு அன்பினாலே சிறந்த
அர்ச்சனையாவது நம்மைத் துதிக்கும் பாடல்களேயாம். ஆதலால்
இவ்வுலகத்திலே நம்மைத் துதித்துத் தமிழ்ப் பாட்டுக்களைப்
பாடுவாயாக!“ என்று மறைபாடும் தமது திருவாக்கினாலே நம்பிகளை
நோக்கிச் சொல்லியருளினார்.


     (வி-ரை.) வன்மைபேசி - ‘பித்தனோ மறையோன்'
என்பனவாதி வலிந்த பேச்சும் ஏச்சும் பேசிய காரணத்தால்
வன்றொண்டன் என்னும் நாமம் பெற்றனை - வன்றொண்டன் என்ற
பேரை நாம் தரப்பெற்றாய். இறைவன் தரப்பெற்றதால் - இப்பெயரை
விருப்புடன் ஏற்று நம்பிகள் பல இடங்களிலும்
எடுத்துப்பாராட்டியிருத்தல் காணலாம். ‘.........அடியேனைத்
தாமாட்கொண்டநாட் சபைமுன், வன்மைகள் பேசிட வன்றொண்ட
னென்பதோர் வாழ்வு தந்தார்.........' (நம்பிகள் தேவாரம் - திருநாவலூர்
- 2) முதலியவை காண்க. இதுபோலவே நம்பிகள் சரித நிகழ்ச்சிகள்
பெரும்பாலும் அவரது தேவாரத்திருவாக்குக்களாகிய
அகச்சான்றுகளாலே மிகத் தேற்றமாய் விளங்குதல் காணத் தக்கதாம்.
இவ்வாறே,


“பாவுற் றலர்செந் தமிழின் சொல்வளப் பதிகத் தொடைபா                                   டியபான் மையினால்
நாவுக் கரசென் றுலகே ழினுநின் னன்னா மநயப் புறமன் னுக“

என்று திருநாவுக்கரசருக்கு இறைவன் திருநாமஞ் சூட்டியதும்,
அவ்வாறே மாணிக்கவாசக சுவாமிகளுக்கு அருளியதும் காண்க. இவை
தீட்சாநாமம் எனப்பெறும். (ஆரூர்நம்பி என்பது பெற்றோர் இட்ட
பிள்ளைத் திருநாமம்).

     நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின்மிக்க அர்ச்சனை பாட்டே
- வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாத எமக்கும் யாம் விரும்பி
ஏற்றுக்கொள்ளும் பணிவிடையாவது எம்மைப் பாடும்
தோத்திரமேயாம்.

     அர்ச்சனை - இங்குத் தொண்டுசெய்யும் பலவகை
வழிபாடுகளையும் உட்கொண்ட பொதுப்பெயராய்நின்றது. ‘அருச்சனை
வயலுளன்பு வித்திட்டு' (திருவண்டப் பகுதி) என்ற திருவாசகம்
காண்க. அன்பிலிருந்து ஊறிப்பெருகியதும் அதனாலே சிறப்பின்
மிகுந்ததும் ஆகிய பாட்டு என இவற்றைப் பாட்டுக்கு
அடைமொழியாக்கி உரைக்க. என்னை வலிய ஆட்கொண்டது
மன்றுளீர் செயல் என்று தெளிந்த நம்பிகளுக்குத் தம்முடைய
பணியாவது இன்னதென்று காட்டியவாறு. அன்பு மிகுதியினாலே தாமே
மேல் எழுந்து வழியும் பாட்டே சிறந்ததாய் இறைவன் மகிழ்ந்து
அருளுவன் என்க.

‘கோழைமிட றாககவி கோளுமில் வாகவிசை கூடும்வகையால்
ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழு மீசன்“

                                  - திருவைகா - 1

என்பது திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்.

“உண்ணிறைந் தெழுந்த தேனு மொழிவின்றி யாரா வன்பிற்
றிண்ணனார் திருக்கா ளத்தி நாயனார்க் கினிய செய்கை
யெண்ணிய விவைகொலாம்.....“     - கண் - புரா - 110

என்ற திருப்பாட்டையும் நோக்குக.

     மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக
- இம்
மண்ணுலகிலே நாம் விரும்பி எழுந்தருளிய தானங்கள்தோறும் சொல்
தமிழ்ப் பாட்டுக்களால் நம்மைப் பாடுக.

     தூமறை பாடும் வாயான் - ஆன்மாக்கள் தம்மை யறிந்து
அடையும்பொருட்டு மறைகளைத் தாமே வகுத்துப்பாடிய
திருவாயினாலே. ஆன் - மூன்றாம் வேற்றுமையுருபு. வாயார் என்பது
பாடமாயின் வாயினையுடையார் என்றார் என்க மறைபடுவார் இவரது
தமிழ்ப் பாட்டை விரும்பினார் என இவற்றின் பெருமையையும்,
அதனினும் பார்க்கத் தமக்கு இவற்றில் மிக விருப்பமுடைமையையும்,
இவற்றின் பயன் மிகுதியையும் காட்டியவாறு. நால்வர்
நான்மணிமாலைக் கருத்துக்களை நோக்குக.

     நாம் மறை சொன்னோம். நீ அதனையே யொத்த
தமிழ்ப்பாட்டுக்களை உனக்குள்ளிருந்து சொல்லும் எமதுரையேயாக
உலகமுய்யப் பாடுக என்றபடி.

     ‘ஆரியந் தமிழோடிசையானவன்', ‘பாடலினோசையும்
மறையினோசையும்' என்பனவாதி தேவாரங்களிலே அப்பர் சுவாமிகள்
இவற்றைச் சேர்த்தி அருளியிருப்பதும் காண்க. ‘அளப்பில கீதஞ்
சொன்னார்க் கடிகடா மருளுமாறே' என்ற பயனுங் காண்க.

     வாயார் - என்பதும் பாடம். 70