217. தேடிய வயனு மாலுந் தெளிவுறா தைந்தெ ழுத்தும்  
  பாடிய பொருளா யுள்ளான் ‘பாடுவாய் நம்மை'
                                யென்ன
நாடிய மனத்த ராகி நம்பியா ரூரர் மன்றுள்
ஆடிய செய்ய தாளை யஞ்சலி கூப்பி நின்று.
71

     (இ-ள்.) வெளிப்படை. பிரமவிட்டுணுக்கள் தேடிக்காணாது
பின்னர்த் திருவைந்தெழுத்தைப் பாடித் துதித்துக் கண்ட
பொருளாயுள்ள இறைவன் இவ்வாறு ‘நம்மைப் பாடுக' என்றுசொல்ல,
அக்கட்டளைப்படி பாடும் வகையைக் சிந்தித்த மனத்தோடு
நம்பியாரூரர் சிதம்பரத்திலே சிற்சபையிலே திருக்கூத்தாடும்
சீபாதங்களை நினைத்துக் கைகூப்பி நின்று,

     (வி-ரை.) தெளிவுறாது - பாடிய - பொருள் - தேடிக்
காணாது நின்றபின், காண முடியாமையின் காரணத்தைத்
தெளியக்கூடாதவர்களாய் சீபஞ்சாக் கரத்தாலே துதிக்க அதற்குரிய
பொருளாய் வெளிப்பட்டு விளங்குபவர். ‘தெளிவுறா ஐந்தெழுத்து'
என்பது பாடமாயின் தெளிவுறாப் பொருள், பாடிய பொருள் எனப்
பிரித்துக் கூட்டியுரைத்துக்கொள்க. தெளிவுறாத எழுத்து என்று
உரைத்தலுமாம். “தேடிச் சென்ற இருவரும் காணாது மயங்கிச்
சீபஞ்சாக்கரத்தைப் பாடித்துதிக்க அப்பொழுது ஆங்கு வெளிப்பட்டருளிய அப்பஞ்சாக்கரப் பொருளாயுள்ளவன்; அல்லது
அகங்காரத்தால் தேடி முன் காணாது அலைந்தவர்கள் பின் அகந்தை
விட்டுத் துதித்தால் காணலாமென்று தங்களுள்ளே தெளிவுற்றுப்
பஞ்சாக்கரத்தைப் பாடித் துதிக்க எனினும் அமையும்.“ இது
இராமநாதச் செட்டியார் உரைக்குறிப்பு.

     தேடிய சரிதம் கந்தபுராணத்தும், இலிங்கபுராணத்
திருக்குறுந்தொகையினும் காண்க. இலிங்கத் திருமேனியின் தத்துவம்,
சீபஞ்சாக்கரத்தின் தத்துவம் முதலியவற்றை நல் ஆசிரியர்பால்
முறைப்படிக் கேட்டு உணர்க.

     பாடியபொருள் - பாடிய - துதித்த ஐந்தெழுத்துப் பாட்டாகி
உள்ள தன்மையை அவ்வெழுத்துக்களின் பொருள் எடுத்துரைக்கும்
திருமூலர் திருமந்திரம் - மெய்கண்ட சாத்திரங்கள் முதலிய ஞான
நூல்களிற் காண்க. அந்தப் பாட்டிற் குறிக்கப்பெற்ற வாச்சியப்
பொருள் சிவபெருமானே என்பதாம். அதனாற் றியானிக்கப் பெறும்
பொருள் அது குறிக்கும் பொருள் என்க. ‘சிவனெனு நாமந் தனக்கே
உடைய செம்மேனி எம்மான்' என்பது அப்பர் சுவாமிகள் தேவாரம்.

     உள்ளான்
- என்றும் எங்கும் உள்ளவன். சத்தாகி உள்ளவன்.

     பாடுவாய் நம்மை என்ன - ஆதிமந்திரமாகிய ஐந்தெழுத்தாற்
பாடப்பெற்ற பொருளாவான் ‘நம்மைப் பாடுக' என்றுகேட்டமையால்
இப்பாட்டின் இயல்பும் உயர்வும் தெரிவித்தவாறு.

     நாடிய - ‘நம்மைப் பாடுவாய் என்று பணித்தனரே! நாம் எதை
யறிந்து பாடுவோம்? என்று நாடுகின்ற' - என்பது
இராமநாதச்செட்டியார் உரைக்குறிப்பு. பாடுதற்குரிய சொல்லும்
பொருளும் நாடினார் என்பதும், அவர் வேண்டியவாறு அவற்றையே
இறைவன் அருளினார் என்பதும் பின்வரும் இரண்டு பாட்டுக்களாலும்
அறியலாம்.

     மன்றுள் ஆடிய செய்ய தாள் - மன்று - மெய்ஞ்ஞானம்.
விராட்புருடனது இதயத்தானம். ‘மெய்ஞ்ஞானமேயான அம்பலம்'
எனப் பின்னர்க் கூறுவது காண்க.

     ஆடிய தாள்
- மன்றினிடமாக உண்ணிறைந்ததோர் ஆனந்த
ஒரு பெருந்திருக்கூத்து'. செய்ய - செம்மையைத் தருகின்ற.
ஆடுகின்ற காலிற் சிலம் போசையே ஆன்மாக்களுக்கு இறைவனை
உணர்த்துகின்றது. உயிர்கள் எங்கிருப்பினும் அவைகளுக்கு
உண்மையறிவையூட்டுவது திருச்சிற்றம்பலத்தேயாடும்
தாள்களேயாதலின் திருவெண்ணெய்நல்லூரிற் பாடும்பரிசு நாடிய
நம்பிகள் மன்றுள் ஆடிய தாளை வணங்கினார்.

     தெளிவுறா வைந்தெழுத்து - என்பதும்; நம்மை யென்றான் -
என்பதும் பாடங்கள். 71