22. கையின்மான் மழுவர் கங்கைசூழ் சடையிற்
     கதிரிளம் பிறைநறுங் கண்ணி
 
  யையர்வீற் றிருக்குந் தன்மையி னாலும்
     அளப்பரும் பெருமையி னாலும்
மெய்யொளி தழைக்கும் தூய்மையி னாலும்
     வென்றிவெண் குடையந பாயன்
செய்யகோ லபயன் றிருமனத் தோங்கு
     திருக்கயி லாயநீள் சிலம்பு.
12

     (இ-ள்.) கையில் மான் மழுவர் - தமது இடதுகையில்
மானும், வலது கையிலே மழுவும் உடையவரும்; கங்கை சூழ் ... ஐயர்
- கங்கையைச் சூழ்ந்த கரை போலக் கட்டிய சடை மகுடத்திலே
ஒளிவீசும் இளம்பிறையாகிய மூன்றாம் பிறைச்சந்திரனையும், நறிய
மாலையையும் உடைய ஐயரும் ஆகிய சிவபெருமான்; வீற்றிருக்கும்
தன்மையினாலும் - விரும்பி எழுந்தருளியிருக்கிற
தன்மையுடைமையாலும்; அளப்பு அரும் பெருமையினாலும் -
அளவிடமுடியாத பெருமையுடைமையினாலும்; மெய் ... தூய்மையினாலும் - மெய்யினது ஒளி மேன் மேல் ஓங்கி வீசும்
தூய்மை உடைமையினாலும்; வென்றி ... ஓங்கும் - வெற்றி
பொருந்திய வெண்குடையுடைய அநபாயரும், செங்கோல் ஏந்திய
அபய சோழரும் ஆகிய அரசரது திருமனம்போல ஓங்குவதாம்;
திருக் கயிலாய நீள் சிலம்பு
- திருக்கயிலாயம் என்னும் நீண்ட
பெரிய மலை.

     (வி-ரை.) மழுவரும் ஐயருமாகிய பெருமான் வீற்றிருக்கும்
தன்மையினாலும், பெருமையினாலும், தூய்மையினாலும், அநபாயர்
திருமனம்போலத் திருக்கயிலாயச் சிலம்பு ஒங்கும் என்க.

     கையில் மான் மழுவர் - மானும் மழுவும் தாருகவனத்து இருடிகள் செய்த யாகத்திலே தோன்றிவந்தன. இவற்றை இறைவன்
கையில்தாங்கிய வரலாறுகள் கந்தபுராணம் முதலியவற்றிற் காண்க.
இவைகளைத் தாங்காத கோலமே சீகாழியில் உள்ள
தாணியப்பருடைய திருக்கோல மென்க. “எறிமழு வோடிள
மான்கையின்றி...
” என்பது தேவாரம். புகலியுந் திருவீழிமிழலையும்.

     கங்கை சூழ்சடை - கங்கைக்குக் கரைபோலச் சூழ்ந்த சடை. “நில்லாத நீர்சடைமேல் நிற்பித்தானை” முதலிய தேவாரங்கள்
காண்க.

     கதிர் இளம் பிறை நறுங் கண்ணி - பிறையும் கொன்றைக்
கண்ணியும் என உம்மை விரித்துரைத்துக் கொள்வதுமொன்று.

     அளப்பரும் பெருமை - கயிலைக்குப் பெருமை
உருவத்தாலும், மனத்துக்குப் பெருமை குணத்தாலும் கொள்க.
இரண்டும் பெரியனவற்றுள் ளெல்லாம் பெரிதாயுள்ளதொரு
பொருளைத் தம்மிடத்தே கொண்டிருத்தலாலும் ஒப்பாயின. மனத்தின்
பெருமை தஞ்சை இராசராசேச்சரம் அமைத்த இராசராசதேவர்
மனத்தின் பெருமையிலிருந்து கண்கூடாகக் கண்டுகொள்க. கோயிற்புராண வரலாறுகளும் பார்க்க.

     மெய் ஒளி தழைக்கும் தூய்மை - கயிலைக்கு வெண்மை
திருநீற்றின் தூய ஒளி என்றும், மனத்துக்குத் தூய சத்துவத்தின்
ஒளி என்றும் கொள்க. ஊழிக்காலத்தும், என்றும் திருநீற்றின்
ஒளியே மெய் ஒளி என்பதும், ஏனைய ஒளிகள் எல்லாம் அழிவன
என்பதும்,

“வெந்த சாம்பல் விரையென் பதுதம
தந்த மில்லொளி யல்லா வொளியெலாம்
வந்து வெந்தற ........”
- திருஞான - புரா - 829

என்ற இடத்து விளக்கியது காண்க.

     கயிலை - அநபாயர் திருமனம் போன்றது என்பது உவமை. மனத்து -மனம் போல. ஒங்கும் - வளரும். சிலம்பு மனத்து ஓங்கும்
எனக் கூட்டுக.

      மெய்ஒளி - சத் - உண்மை ஞானஒளி.

     அநபாயர் - இப்புராணம் இயற்றக் காரணரா யிருந்தமைபற்றி அவரை இப்புராணத்து வைத்தமை முன்னர்க் குறிக்கப்பெற்றது. ந +
அபாயர் - அபாயமில்லாமற் செய்பவர். அபயன் - பயமில்லாமற்
செய்பவன்.“பயமைந்துந் தீர்த்தறங்காப்பான்” 121. அபாயத்தையும் -
பயத்தையும் போக்குபவர் என்பார்.அநபாயர் - அபயன் என உடன்
கூட்டி யுரைத்தார். செய்ய கோல் - செங்கோல். செய்ய - செவ்விய;
கோணாத.

     “கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லது” என்பது தேவாரம்.

     திருமனம் - திரு - மோட்ச சாம்பிராச்சியமான ஐசுவரியம். “திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட” என்றபிரமாணத்துட்
காண்க. அசைதலே தன்மையாக் கொண்ட மனம் சிவபெருமானைப்
பதித்தபடியால் அசையாமல் நின்று அசலத்துக்கு ஒப்பாயிற்று.

     சிலம்பு - இயற்கையாலே அசையாதது சிறப்பன்று; சலிப்புள்ள மனம் தன் இயல்பிற்கு மாறாய்ச் சலிப்பில்லாமல் நிற்பது அதனிலும்
சிறப்பாம் என்பது குறிப்பு. தன்மை - பெருமை - தூய்மைகள்
இவ்விரண்டிடத்தும் பொதுத்தன்மைகளாம் என்க.

     ஒங்கும் - ஒங்கும் என நிகழ்காலத்தாற் கூறினார்.“வேந்தனு
மோங்குக
” என்றபடி. அநபாயரை வாழத்தியவாறுமாயிற்று.     12