223. அயலோர்தவ முயல்வார்பிற ரன்றேமண மழியுஞ்  
  செயலானிகழ் புத்தூர்வரு சிவவேதியன் மகளும்
உயர்நாவலர் தனிநாதனை யொழியாதுணர் வழியிற்
பெயராதுயர் சிவலோகமு மெளிதாம்வகை பெற்றாள்.
77

     (இ-ள்.) அயல்......பிறர் - பிறவாகிய தாமறிந்த தவங்களிலே
முயல்பவர் பிறர்; அன்றே......செயலால் - மணத்தொழல் தொடங்கிய
அன்றைக்கே அழியும் செயலினாலே; நிகழ்புத்தூர்.........மகளும் -
விளங்குகின்ற புத்தூரிலே வந்த சடங்கவி சிவாசாரியாரின் மகளாரும்;
உயர்.....பெயராது - உயர்ந்த நாவலவூரராகிய தமது ஒப்பற்ற
நாதரையே நீங்காது மனத்திலே தியானித்து வைத்திருக்கும்
வழியினாலே அவரையும் நீங்காது நின்றவராய்; உயர்......பெற்றாள் -
உயர்ந்த சிவலோகத்தை எளிதாயடையும் வகையையும் பெற்றார்.

     (வி-ரை.) அயல்ஓர் தவம் முயல்வார் பிறர் - இது
கவிக்கூற்று. நாயகனையற்ற பிறர் இவ்வாறு செய்தற்கயலாகிய ஓரோர்
பிற தவங்களைச் செய்வர். அவை கைமை நோன்பிற்கு உரியனவாய்
நூல்களில் விதித்த தவச் செயல்களாம். அவற்றை அவர் தம்
நாயகனை இழந்தாராகக் கருதி வருந்திச் செய்து பல காலங்கள்
கழித்துப் பல வேறு பலன்களை அடைவர். இவ்வம்மையாரோ,
அவ்வாறன்றித் தமது நாயகராகிய திருநாவலூர் நம்பிகளைத்
தம்மோடு இருப்பவராகவே கருதி இடைவிடாது சிந்தைக்குள்
வைத்தவகையாலே அவரையும் பிரியாதவராய், அவ்வழியாலே
சிவலோகமும் பெற்றார் எனக் குறித்தபடி. செயலால் - செயல்
காரணமாக, (உடனிருக்கமாட்டாதவராய்) உணர்வழியிற் பெயராது
என்க. அன்று - ஏ - என்பனவற்றை அசையாக்கி
ஒதுக்குவாருமுண்டு.

     மகளும்....பெற்றார் - நம்பியும் பெற்றார் - மகளும் பெற்றார்
என்க. உம்மை - எச்ச உம்மை. ஒழியாது - இடைவிடாது.
இடத்தினாலன்றி உணர்ச்சியாலும் காலத்தினாலும் நீங்காது என்க.
சிவலோகமும் - நாயகனைப் பெயராது பெற்றது மன்றிச்
சிவலோகமும் பெற்றார். உம்மை - எச்சவும்மை. சிறப்பும்மையுமாம்.
எவ்வுலகத்தையும் சேர ஒரு வழிவேண்டும்; இவ்வம்மையார் நாதனை
ஒழியாதுணர் வழியினாலே சிவலோகத்தை எளிதாகப் பெற்றார் என்க.

     உயர்நாவலர் தனிநாதனை ஒழியாதுணை ஒழியாதுணர் வழியில்
- நம்பிகளும் நாவலனாராகிய தனிநாதனை ‘மறவாதே
நினைக்கின்றேன்' என்று கூறியபடி ஒழியாதுணர்வழியாலே சிவவாழ்வு
பெற்றார். (நாவலனார்க்கிடம் - திருநாவலூர் (1) நம்பிதேவாரம்.)
அவர் நாயகியாரும் அவ்வாறே நாவலவூரராகிய தமது தனிநாதனை
ஒழியாதுணர்வழியிற் சிவவாழ்வினை எளிதிற் பெற்றார் என்ற
சிலேடைப் பொருளும் காண்க. மகளும் - நாதனை உணர்வழியிற்
பெயராது - சிவலோகமும் - எளிதாம் வகை பெற்றாள்;
அயலோர்தவம் முயல்வார் பிறர் - என்று கூட்டியுரைக்க.

     பின் வருபவை சூரியனார் கோயில் ஆதீனம் ஸ்ரீமத் -
முத்துக்குமாரத் தம்பிரான் சுவாமிகள் உபகரித்த உரைக்
குறிப்புக்கள்: -

     “அன்றே - மங்கலமான தரிக்கப்பெற்று மெய்யுறு கூட்டத்தாற்
பெயராதிருத்தற்கேதுவாகிய மாமறை மணத்தொழில் தொடங்கப்பெற்ற
அத்திருநாளிற்றானே.

     மணம் அழியும் செயலால் - துன்புறு வாழ்க்கை
தொடர்தற்குரிய மணத்தொழில் சிதைத்தற்கேதுவாகிய அநுக்கிரக
கிருத்தியத்தால். மணம் - ஈண்டுச் சடங்கை யுணர்த்தி நின்றது.
அழியும் என்னும் பெயரெச்சம் கருவிப் பொருள் கொண்டது.

     நிகழ் புத்தூர்
- நம்பிகளது திருச்சரிதம் விளங்கும்
எக்காலத்தும் எவ்விடத்தும் தானும் விளங்கும் புத்தூரின் கண்ணே.

     வருசிவ வேதியன் மகளும் - பண்டைப் பவத்திற்
றவஞ்செய்து பெற்ற திருவருளால் வீடுபெறவந்த அதற்குரிய
நற்சார்பாகிய சிவமறையோரான சடக்ஙவி சிவாசாரியார்
திருமகளாகும். வரு என்னும் நிலைமொழி அடையடுத்த மகள்
என்னும் பெயர் கொண்டு முடிந்தது. சிவவேதியன் - சிவ சிருட்டியில்
வந்த வேதியன். வேதியன் மகள் - நான்காவது வேற்றுமை
தொக்கது. உம்மை இறந்தது தழீஇய எச்சம்.

     உயர் நாவலர்
- மாதவஞ் செய்த தென்றிசைக்குத் தீதிலாத்
திருத்தொண்டத் தொகை தந்தவர் அவதரிக்கப் பெற்றமையால்
மேம்பாடுற்ற திருநாவலூராருக்கு; நான்காவது வேற்றுமை
விரித்துரைக்க.

     தனி நாதனை
- சம்புவின் அடித்தாமரைப் போதலால்
இறைஞ்சாதவராகிய உபமன்னிய முனிவராலும் இறைஞ்சப்பெறும்
சிறப்பு வாய்ந்த பரமாசாரியாராகிய ஆளுடைய நம்பிகளையே.
பிரிநிலை ஏகாரம் தொக்கது.

     ஒழியாதுணர் வழியிற் பெயராது - இடையறவின்றி உணர்தல்
வாயிலாகப் பிறிவறியாது முயங்கி, அது காரணமாக; இன் - ஏதுப்
பொருட்டு. பெயராது - காரியங் காரணமாக உபசரிக்கப்பட்டது.
இவ்வினையெச்சம் - ‘திருநடங் கும்பிடப்பெற்று' என்புழிப்போல
ஏதுப் பொருளில் வந்தது.

     உயர் சிவலோகம் எளிதாம் வகையும் பெற்றாள் - மாயா
புவனங்கள் அனைத்தினும் உயர்ந்த நித்திய மங்கலமாகிய
வீட்டுலகத்தை முயன்று வருந்தாது பெறும் உபாயமும்
பெற்றவரானார். உம்மை - வகை என்பதனுடன் கூட்டி உரைக்க.
உபாயமாவது தனி நாயனார் திருவுருவத்தை உள்ளப்புண்டரிகத்து
வைத்து வழிபடுதல்.

     பிறர் - அவ்வுபாயம் பெறுதற்குரிய முன்பு செய்தவமில்லாதார்;
அயல் ஓர் தவம் முயல்வார் - அதனின் வேறாகிய தாமறிந்ததொரு
தவத்தைச் செய்வார். ஓர்தல் - அறிதல்.“

     இப்பாட்டால் ஆசிரியர் இவ்வம்மையாரது பிற்சரிதங் கூறி
முடித்துக் கொண்டதுமன்றி, ஏனையோரைப்போல, இவ்வம்மையார்
தம் நாயகனை உடம்பு நாயகனாகக் கொள்ளாது
தியானப்பொருளாகிய உயிர்நாதனாகக்கொண்டு ஒழுகினமையால்
அவரையும் பிரியாது, பெறற்கரிய சிவலோக வழியும் பெற்றார் என்று
இவரது வாழ்க்கையினுயர்வையுங் காட்டினார். இவ்வாழ்வு பெற
உபகரித்து நின்றமையால் அம்மையாரைவிட்டு நீங்கினார் என்ற
சொல் நம்பிஆரூராரிடத்துச் சாராமையுங் காட்டியவாறு.
திலகவதியம்மையார் சரிதமும் இங்கு வைத்து உணர்தற்பாலதாம்.
இவ்வுண்மைகளை உணராது, ஒரு கணவனிறப்பவும், அல்லது
இருக்கவும், ஒன்றன்பின் ஒன்றாகப் பல மணங்களையும் நிகழ்த்தலாம்
என்று கூவும் நவீன உணர்ச்சிக்காரர்கள் இச்சரிதங்களை உய்த்து
ஓர்ந்து ஒழுகுவார்களாக.1

     நம்பிகளது தியானமே சிவலோகத்தைத் தரும்
சிவபுண்ணியமாம் என்பதும் இதனாற் காட்டியவாறு. பெருமிழலைக்
குறும்பநாயனார் சரிதமும் காண்க. 77

1சேக்கிழார் - 79-வது பக்கம் பார்க்க.