224. நாவலர்கோ னாரூரன் றனைவெண்ணெய்
                             நல்லூரின்
 
  மேவுமருட் டுறையமர்ந்த வேதியராட்
                        கொண்டதற்பின்
பூலவருந் தடம்பொய்கைத் திருநாவ லூர்புகுந்து
தேவர்பிரான் றனைப்பணிந்து திருப்பதிகம்
                             பாடினார்.
78

     (இ-ள்.) வெளிப்படை. திருநாவலூரராகிய நம்பிஆரூரர்
தம்மை வெண்ணெய் நல்லூரிலே திருவருட்டுறையிலே
எழுந்தருளியவர் வேதியராகி வந்து ஆட்கொண்டபின், பூக்கள்
மலர்கின்ற பொய்கைகளையுடைய திருநாவலூரிலே
போந்துதேவதேவனாகிய இறைவனைப்பணிந்து
தோவாரத்திருப்பதிகம்பாடினார்.

     (வி-ரை.) அருட்டுறை அமர்ந்த வேதியர் - வேதியராய்
வந்து திருவருட்டுறையிலே அமர்ந்தவர். அமர்தல் - விரும்பி
வீற்றிருத்தல். ‘பூவலரும் தடம் பொய்கைத் திருநாவலூர்' - ‘செய்யார்
கமலமலர் நாவலூர் மன்னன்' என்பது நம்பிகள் தேவாரம்.

     திருப்பதிகம் பாடினார் - இப்பதிகம் கிடைத்திலது. இப்போது
உள்ள “கோவல னான்முகன்“ என்ற இத்தலப்பதிகம் பின்னர்
ஒருமுறை எழுந்தருளியபோது அருளியது. ஏயர்கோன் - புரா - 170
- 3324 பார்க்க. எனினும் தலவழிபாட்டின் நினைவுக்காக அப்பதிகம்
ஈண்டும் தரப்பட்டுள்ளது.

     பதிகம் - (பண் - நட்டராகம்) - திருவெண்ணெய்நல்லூரும் -
திருநாவலூரும்

திருச்சிற்றம்பலம்

கோவல னான்முகன் வானவர் கோனுங்குற்
                                 றேவல்செய்ய
மேவலர் முப்புரந் தீயெழு வித்தவ னோரம்பினால்
ஏவல னார்வெண்ணெய் நல்லூரிலே வைத்தென்னை
                               யாளுங்கொண்ட
நாவல னார்க்கிட மாவது நந்திரு நாவலூரே. (1)
 
நாதனுக் கூர்நமக் கூர்நர சிங்க முனையரையன்
ஆதரித் தீசனுக் காட்செயு மூரணி நாவலூரென்
றோதநற் றக்கவன் றொண்ட னாரூர னுரைத்தமிழ்
காதலித் துங்கற்றுங் கேட்பவர் தம்வினை கட்டறுமே. (11)

திருச்சிற்றம்பலம்

     பதிகக் குறிப்பு - திருநாவலூரிலே எழுந்தருளிய இறைவனே
புத்தூரில் வேதியராகி வந்து வழக்கிட்டு, நான் வன்மைகள் பேசவும்
விடாது, என்னைத் திருவெண்ணெய்நல்லூரிலே சபை முன்னே
கொண்டு வைத்து ஓலை காட்டி ஆளாகக் கொண்டருளியவன்
என்பதாம்.

     பதிகப்பாட்டுக் குறிப்பு - ‘பித்தனென்றே பாடுவாய்' என்ற
ஆணையின்படி பாடிய முதற் பதிகத்துக்குப்பின், ‘இன்னும்
பல்லாறுலகினில் நம்புகழ்பாடு' என்ற ஆணையின்படி பாடியது
இதுவே முதற்பதிகம். நம்பிகள்பாடிய தேவாரப் பதிகங்களில்
இரண்டாவது பதிகம். தம்மை இறைவன் தடுத்தாட்கொண்ட
தொடக்கத்திற் பாடிய பதிகமாகையால் அவ்வரலாறு முழுமையும்
இதில் விரிவாகச் சொல்லித் துதித்திருப்பது காணத்தக்கதாம்.
நம்பிகள் சரிதத்திலே இப்பகுதிக்கு அகச்சான்று மிகவும் இதிற்
காணலாம். அத்தொடர்புபற்றி இப்பதிகத்துக்குத்
திருவெண்ணெய்நல்லூரும் - திருநாவலூரும் என்று பேரிட்டு
உள்ளார்கள்.

“வெண்ணெய் நல்லூரில் வைத்தென்னை யாளுங்கொண்ட                                    நாவலனார்“ 1

“தம்மையினா லடியேனைத் தாமாட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள் பேசிட வன்றொண்ட னென்பதோர்
                                   வாழ்வுதந்தார்
புன்மைகள் பேசவும் பொன்னைத்தந் தென்னைப்போ
                                    கம்புணர்த்த
நன்மையினார்“                               2
 
“ஆவணத்தால்....வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை
யாளுங்கொண்டார்...“
 
“வாயாடி மாமறை யோதியோர் வேதியனாகி வந்து......“ 8
 
“அடக்கங்கொண் டாவணங் காட்டி நல்வெண்ணெயூ
ராளுங்கொண்டார்......“
 
“நாதனுக்கூர் நமக்கூர் நரசிங்க முனையரையன்
ஆதரித் தீசனுக் காட்செயு மூர் அணிநாவலூர்“ 11

என்பன நம்பிகள் சரிதத்துக்கு இப்பதிகத்துக் காணும் அகச்
சான்றுகளாம்.

     தல விசேடம் - நம்பிகளது திருவவதாரத் தலம். சடைய
நாயனாரும் இசை ஞானியம்மையாரும் இல் வாழ்க்கை நடத்தி
வழிபட்டு நம்பிகளைப் பெற்றுப் பேறடைந்த தலம். விழுப்புரம்
திருச்சிராப்பள்ளி இருப்புப் பாதையில் திருவெண்ணெய்நல்லூர் ரோடு
நிலையத்தினின்றும் (பக் - 253) திருவெண்ணெய் நல்லூரடைந்து,
தென்கிழக்கில் 5 நாழிகையளவில் அடையத் தக்கது. பண்ணுருட்டி
நிலையத்திலிருந்து மேற்கே உளுந்தூர்ப்பேட்டை வழியாய்த் திருமுது
குன்றத்துக்குப் போகும் கற்சாலையில் 10 மைலில் உள்ளது. நடு
நாட்டில் 8-வது தலம். சுவாமி - நாவலேசுவரர். தேவியார் -
சுந்தராம்பிகை. இத்தலம் இப்போது திருநாமநல்லூர் என
வழங்கப்பெறுகிறது. தலத்தின் மரம் நாவன் மரமானதால்
இப்பெயரெய்தியதென்பர்.

     சரிதப் பிற ஆதரவுகள் - தடுத்தாட்கொண்ட தேவர்1 -
தடுத்தாட்கொண்ட நாயனார்2 - தடுத்தாட்கொண்ட நல்லூர்3 -
என்பன திருவெண்ணெய் நல்லூர்க் கிருபாபுரீசுரர் ஆலயத்திற்
கல்வெட்டுக்களிற்கண்ட பெயர்கள். அவற்றுள் வழக்கு வென்ற
திருவம்பலம்4 என்ற பெயர் காணும் கல்வெட்டிலே குலோத்துங்கச்
சோழன் ஆட்சி 29-வது ஆண்டில் வழக்குவென்ற அம்பலம்
கல்மண்டபமாகக் கட்டுவதற்காகச் சில குடிகளின் வீடுகளை
எடுத்துக்கொண்டு வேறு இடம் தந்த செய்தியை அறிகின்றோம்.
பின்னும் அக்கோயிலிற் கோப்பெருஞ்சோழன் 27-வது ஆண்டு5
(28-3 - 1268) செதுக்கிய கல்வெட்டிலே பிச்சன் என்று பாடச் சொன்னான் என்ற பெரும்பொருள் கிடைக்கின்றது. ஆலால சுந்தரப்
பெருந்தெரு6 - பெருமாள் ஆலால சுந்தரப் பெருமாள்7 என்ற
பெயர்களும் கல்வெட்டுக்களால் அறிகின்றோம். 78



1(423 - 21.) 2(1301 A. D.) 430 - 21. 3 (435 - 21.) 4(441 - 21.)
5 (431 - 21.) 6(435 - 21.) 7(437 - 21.)