225. சிவனுறையுந் திருத்துறையூர் சென்றணைந்து
                           ‘தீவினையால்
 
  அவநெறியிற் செல்லாமே தடுத்தாண்டா
                           யடியேற்குத்
தவநெறிதந் தரு'ளென்று தம்பிரான் முன்னின்று
பவநெறிக்கு விலக்காகுந் திருப்பதிகம் பாடினார்.
79

     (இ-ள்.) சிவன்......அணைந்து - திருநாவலூரிலிருந்து சென்று
சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருத்துறையூரை அணைந்து;
தம்பிரான் முன்னின்று - தமது இறைவன் திருமுன்பு நின்று அவரை
விளித்து; ‘தீவினையால்......அருள்' என்று - ‘எனது தீவினைப்
பயனால் அவநெறியிலே செல்லாமல் என்னைத் தடுத்து ஆளாகக்
கொண்டருளினாய்! அடியேனுக்கு இனிச் செல்லக் கடவதாகிய
தவநெறியைத் தந்தருளவேண்டும்' என்ற வேண்டுகையாகிய
குறிப்பினையுடையதாய்;

     பவநெறிக்கு........பாடினார் - எல்லா உயிர்களையும்
பலநெறியினின்று விலக்கி யாளக் கூடிய திருப்பதிகத்தினைப்
பாடினார்.

     (வி-ரை.) சென்று - அங்ஙனம் பாடிய நம்பிகள்
திருநாவலூரிலிருந்து சென்று என வருவித்துக் கொள்க.

     தீவினையால் அவநெறியே செல்லாமே தடுத்தாண்டாய் -
இவ்வரலாறு மேலே திருமலைச் சிறப்பிலும் இப்பகுதியில் முன்னரும்
காண்க. தீவினை - தீ முன்னர்ச் செய்யப்படும் மணவேள்வி என்பர்
ஆலாலசுந்தரம் பிள்ளையவர்கள்.

     தவநெறி - சிவபூசையிற் செல்லும் வழி. புலன் வழிச்
செல்லாது மனத்தை ஒன்றுவித்துச் சிவபெருமானை இடைவிடாது
நினைத்தலும் பூசித்தலுமே தவநெறியாம். உட்பூசை புறப்பூசை
முதலாகச் சிவாகமங்களிற் கூறியபடி சிவபூசை செய்யப்பெறுவது.
‘தவமுயல்வோர் மலர் பறிப்ப' என்ற தேவாரங் காண்க. நம்பிகள்
வேண்டியதும், இறைவன் அதற்கிசைந்து கொடுத்தருளியதும்,
அதன்பின் நம்பிகள் நின்றதும், இதுவே என்பது வரும்பாட்டிற்
காண்க.

     பவநெறிக்கு விலக்காகும் திருப்பதிகம்
- இதுவரை வந்த
பவநெறிக்கு விலக்காகிய தவநெறி கொடுப்பதேயன்றி, இனிமேலும்
பவநெறி வாராமல் விலக்கிக் காப்பதும் இத்திருப்பதிகப் பயனாம் -
என்பார் விலக்கு ஆகும் என்றார்.

     இப்பதிகம் நம்பிகளுக்குத் தவநெறி தந்ததுமன்றி இதனைக்
கற்றுப் பயின்று ஒழுகும் உலகினர் யாவருக்கும் பாசநீக்கம் செய்து
தவநெறி தருவதாம். இது,

‘பொய்யாத்தமிழ் ஊர னுரைத்தன வல்லார்
மெய்யே பெறுவார்கள் தவநெறி தானே'

என்ற அப்பதிகத்தின் திருக்கடைக்காப்பினால் அறியலாம்.
பொய்யாத் தமிழ் - கருதியது கருதியவாறு கொடுத்தேவிடும் தமிழ்.
சத்தாகிய சிவனைக் காட்டும் பதிகமும் சத்தாகிய உண்மையேயாம்.
ஆதலின் அவை எஞ்ஞான்றும் பொய்க்கின்றதில்லை. ‘வாய்மை
குலவுதலால்' (திருஞான - புரா - 980); ‘நாவின் வாய்மையிற்
போற்றினார் ஞானசம்பந்தர்' (மேற்படி புரா - 1078); ‘போதியோ
என்னும் அன்னமெய்த் திருவாக்குஎனும் அமுதம்' (மேற்படி புரா -
1089) முதலியவை காண்க. இவை ஆன்மபோதமின்றிச்
சிவபோதத்தாலே சிவனேயாய் நின்று பாடப்பெற்றதனால் என்றும்
பொய்யாதன. ஆதலின் இறைவனைப்போலவே இவையும் பவநெறிக்கு
விலக்காவனவாம்.

     தவநெறி தந்தருள் - என்று வேண்டுதல் தகுதியா? ‘வீடும்
வேண்டா விறலின் விளங்கினார்' (வரிசை 143) என்று மேலே
வடித்தெடுத்துக்கூறிய அடியார் இலக்கணத்துடன் மாறுபடுமே?
எனின் மாறுபடாது. கருமங்களை பிறவிக்குக் காரணமாயினும்
அங்ஙனங் காரணமாகிய பிராரத்தங்களையே அனுபவித்துக்
கழிப்பதற்கும், மேலும் ஆகாமியங்கள் வந்து ஏறாமலிருப்பதற்கும்
கருமங்கள் செய்யப்படவேண்டுவனவாம். ஆனால் இக்கருமங்கள்
மேலும் கருமங்களைச் சேர்ப்பதற்கன்றி, முன்னை வினையைத்
தொலைப்பதற்காகச் செய்தல் வேண்டும். அதற்காகவே ‘வாழ்த்த
வாயும் நினைக்க மடநெஞ்சும், தாழ்த்தச் சென்னியும்' என்றபடி
கருவி கரணங்களை இறைவன் தந்தருளினானாதலின்
ஒருகருமங்களும் செய்யாதிருத்தலும் கூடாது. இக்கருமப்
பாகுபாட்டை அறிந்து செய்வதே நம்பிகளின் சரித தத்துவம்.
முன்னர்த் திருமலைச் சிறப்பின் இறுதியிற் கற்பனையிற் கூறியது
காண்க. இவ்வாறு அறிந்து பெறுதற்கு அவநெறியில் கருவி
காரணங்கள் செலுத்தப்படாமல், சிவநெறியிற் புகுவிக்கும்
தவநெறியிலே மட்டும் செலுத்தப்பெறவேண்டும். அப்போது
பிராரத்தம் மட்டும் உடலூழாய் அனுபவித்துக் கழிக்கப்படும்.
ஆதலின் தவநெறி வேண்டியது வீடும் வேண்டாத இலக்கணத்துடன்
மாறுபடாது.

“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது
வேண்டாமை வேண்ட வரும்“

என்றபடி ‘உனை வேண்டிக்கொள்வேன் தவநெறியே' என்றது
வேண்டாமையை வேண்டியதேயன்றிப் பிறிதன்று என்க. இக்கருத்துப்
பற்றியே,

“புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டும்“
 
“துஞ்சும் போதுநின் னாமத் திருவெழுத்
தஞ்சுந் தோன்ற வருளு மையாறரே“
 
“எழுத்தைந்தும், சாமன் றுரைக்கத் தருதிகண்டா யெங்கள்
                                       சங்கரனே“
 
“துஞ்சும்போ தாக வந்து துணையெனக் காகி நின்று
அஞ்சலென் றருள வேண்டு மாவடு துறை யுளானே“
 
“சங்கொத்த மேனிச் செல்வா சாதனா ணாயே னுன்னை
யெங்குற்றா யென்ற போதா லிங்குற்றே னென்கண்டாயே“
 
“உன்குரை கழற்கே, கற்றாவின் மனம்போலக் கசிந்துருக
                                    வேண்டுவனே“

என்பனவாதி தமிழ்மறைத் திருவாக்குக்கள் எழுந்தன என்க.

     நம்பிகள் வேண்டிக்கொள்ளும் பிற இடங்களிலும் இவ்வாறே
கொள்க. பெண்ணும் பொன்னும் முதலியவை வேண்டுவதாகக்
காணும் இடங்களிலெல்லாம் பிராரத்தம் கழியக் கருவி காரணங்கள்
பயன்பெறற் பொருட்டாகிய இக்கருத்தேகொள்க. இவையாவும்
உலகர்க் கறிவுறுத்தி உய்யக்கொள்ளும் பயனைக் குறித்தன என்பது
ஆசாரிய இலக்கணமாம்.

     முன்னின்று பாடினார் - பதிகமுழுதும் அத்தா! என்பது
முதலாக விளித்து இறைவனை முன்னிலைப்படுத்தி ‘உனை வேண்டிக்
கொள்வேன் தவநெறியே' என்று கேட்கப்பெற்றதனால் முன்னின்று
என்றார்.

பதிகம்
(பண் - தக்கராகம்)
திருத்துறையூர்

திருச்சிற்றம்பலம்

மலையா ரருவித் திரண்மா மணியுந்திக்
குலையா ரக்கொணர்ந் தெற்றியொர் பெண்ணைவடபால்
கலையா ரல்குற் கன்னியரா டுந்துறையூர்த்
தலைவா வுனைவேண்டிக், கொள்வேன்றவ நெறியே. (1)
 
செய்யார் கமலம்மலர் நாவலூர் மன்னன்
கையாற் றொழுதேத்தப் படுந்துறை யூர்மேல்
பொய்யாத் தமிழூர னுரைத்தன வல்லார்
மெய்யே பெறுவார்க டவநெறி தானே. (11)

திருச்சிற்றம்பலம்

     பதிகக் குறிப்பு
- இப்பாட்டின் கருத்தாம். ‘அடியேன்
அவநெறியிற் செல்லாமே திருவருட் டுறையிலே தடுத்தாண்டாய்;
இனி நான் செல்லவேண்டிய தவநெறி தந்தருளத் திருத்துறையூர்த்
தலைவா உனை வேண்டி, வேண்டியவாறே நீ தர, அதனைப் பெற்று
மேற்கொள்வேன்' என்பது, உனைத் தவநெறி வேண்டி, நீ தர,
அதனைக் கைக்கொள்வேன் என்க. அவநெறி தடுப்பது ஒருதுறை
- அருட்டுறை; தவநெறி கொடுப்பது ஒருதுறை - திருத்துறையூர்.
இவை யிரண்டு பயனுமே சைவ சித்தாந்தத்தின் இருபெரும்
பயன்களாகிய பாசநீக்கமும் சிவப்பேறுமாகக் கருதப்பெறுவன.

     பதிகப் பாட்டுக் குறிப்பு - பெண்ணை வடபால் -
இத்தலம் பெண்ணையாற்றிற்கு வடகரையிலுள்ளது. வேண்டிக்
கொள்வேன் - வேண்டிப் பெற்றுப் பின்னர்க் கைக்கொள்வேன்.
தலைவா! அத்தா! எந்தாய்! விரும்பா! வேடா! சிட்டா! நாதா! ஐயா!
அண்ணா! தேவா! என்ற விளிகளை நோக்குக.

     விரும்பா - விரும்புபவன்; வேடா - ஒரு
வேடமுமில்லாதவனாயினும் வேடம் (உருவம்) கொண்டு துறையூரில்
உள்ளவன் (வேள்+ தா = விரும்பியதைத் தருபவன் என்றலுமாம்);
சிட்டா - பெரியோன். கொட்டாட்டொடு பாட்டொலி - கொட்டும்
ஆட்டும் பாட்டும் ஆகிய இவை பூசையின் முடிவில்
நிகழ்த்தப்பெறுவன. “கொட்டாட்டுப் பாட்டுப் பூசாந்தம்“ -
தக்கயாகப்பரணி. விரும்பா - விரும்பப் பெறுபவன் - என்றலுமாம்.

     தலவிசேடம் - இது நடுநாட்டுத் தலங்களிலே 15-வது தலம்.
இப்போது திருத்தலூர் - திருத்தளூர் என வழங்குவது. இதற்கு
நம்பிகள் திருப்பதிகம் ஒன்றே உள்ளது. சைவசமய சந்தான
ஆசாரியர்களில் ஒருவராகிய சகலாகம பண்டிதர் என்னும்
அருணந்தி சிவாசாரியரது அவதாரத்தலம். அருணந்தி சிவாசாரியர்
சந்நிதி கோவிலுக்கு எதிரில் உள்ளது. சுவாமி - துறையூர்நாதர்.
தேவியார் - பூங்கோதைநாயகி. சிட்டகுரு நாதர் - சிவலோக நாயகி
என்றும் கூறுவர். தவநெறியுடையார் - என்று கல்வெட்டுக்களிற்
காணப்பெறும். இத்தலம் திருத்துறையூர் என்ற நிலயத்திலிருந்து
நேர்மேற்கில் லு நாழிகை தூரத்தில் அடையத்தக்கது. 79