226. புலனொன்றும் படிதவத்திற் புரிந்தநெறி
                            கொடுத்தருள
 
  அலர்கொண்ட நறுஞ்சோலைத் திருத்துறையூ
                             ரமர்ந்தருளு
நிலவுந்தண் புனலுமொளிர் நீள்சடையோன்
                              றிருப்பாத
மலர்கொண்டு போற்றிசைத்து வந்தித்தார்
                          வன்றொண்டர்.

80

     (இ-ள்.) புலன்......அருள் - நம்பிகள் வேண்டியபடியே புலன்கள்
தத்தம் வழிகளிலே போகாமல் ஒருவழிப்படியும் தவத்திலே இடையறாது
செல்லும் நெறியை இறைவன் கொடுத்தருளவும்; அலர்.......வன்றொண்டர் -
அதன்படி அதனையே மேற்கொண்டு, நம்பிகள், பூக்கள் நிறைந்த நறிய
சோலைகள் சூழ்ந்த திருத்துறையூரிலே விரும்பி வீற்றிருக்கின்ற, பிறையும்
கங்கையும் விளங்குதற் கிடமாகிய நீண்ட சடையினையுடைய பெருமானது
திருப்பாத மலர்களை, மனத்திலே கொண்டு, வாக்கினாற் போற்றிக்,
கைகளா லார வந்தனைசெய்து, சிவபூசை செய்தனர்.

     (வி-ரை.) புலனொன்றும் படிதவத்திற் புரிந்த நெறி -
மேற்பாட்டிலே நம்பிகள் வேண்டிய தவநெறியின் இயல்பை
விளக்கியவாறு. புலன் ஒன்றுதலாவது - பலப்பல வகைமாறித்
தத்தமக்கேற்றவாறு செல்லுதலை விட்டு ஒடுங்கி ஒருவழிச் செல்லுதல்.
படி - படிதல் - மேலெழாது கீழ்ப்படிதல். ‘மாறிநின் றெனைமயக்கிடும்
வஞ்சப்புல னைந்தின் வழியடைத்து' என்பது திருவாசகம்.

     ஒன்றும் தவம், படி தவம் - எனப் பிரித்துக் கூட்டுக. ஒன்றும்
படியாகத் தவத்திலே புரிந்த - என்று கூட்டி உரைப்பதுமொன்று. புரிதல்
- இடைவிடாது நினைத்தல். ‘புகழ் புரிந்தார்' என்ற குறளிற் காண்க.
புரிந்த - முன்னே திருக்கயிலையிற் செய்திருந்த என்றலுமாம்.

     அருள - வந்தித்தார் - வேண்ட - வேண்டியபடி இறைவன் அருள
- அதனையே மேற்கொள்வாராய், அதன்படியே வன்றொண்டர்
வந்தித்தார். அவ்வியல்பினதாகிய தவநெறியைக் கைக்கொண்டு
நின்றொழுகிய ஒழுக்கம் இதுவே எனக் குறித்தபடி.

     அமர்ந்தருளும் - மேலே - அருட்டுறையமர்ந்த (வரிசை. 224)
என்ற இடத்திற் போல இங்கும் கொள்க. அருளும் - சடையோன் என்று
கூட்டுக.

     பாத மலர் - பாதமாகிய மலர். அதனை உள்ளத்தேகொண்டு
என்க. இதனால் உட்பூசையும், போற்றிசைத்து வந்தித்தார் என்றதனாற்
புறப்பூசையும் குறித்தவாறு. புலன் ஒன்றவே முக்கரணங்களாலும்
வழிபாடுசெய்தனர் என்க. நம்பிகள் ஆன்மார்த்த பரார்த்தங்களாகிய
இருவகைப் பூசைக்குமுரிய ஆதிசைவ ராதலும் உணர்க. இங்கு
இத்தவநெறியை இறைவனே கொடுக்க அந்த அதிகாரம் பெற்றனர் என்க.
பாதத்தை மலரினால் - என்று பொருள் கூறுவாருமுண்டு.

“அகனமர்ந்த வன்பினரா யறுபகைசெற் றைம்புலனு மடக்கி ஞானப்
புகலுடையோர் தமதுள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்“

என்பது திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம். 80