227. திருத்துறையூர் தனைப்பணிந்து சிவபெருமா
                           னமர்ந்தருளும்
 
  பொருத்தமா மிடம்பலவும் புக்கிறைஞ்சிப்
                           பொற்புலியூர்
நிருத்தனார் திருக்கூத்துத் தொழுவதற்கு
                           நினைவுற்று
வருத்தமிகு காதலினால் வழிக்கொள்வான்                       மனங்கொண்டார்.
81

     (இ-ள்.) திருத்துறையூர்தனைப் பணிந்து - திருத்துறையூரை
வணங்கி அங்கு நின்றும் புறப்பட்டுச்; சிவபெருமான்......இறைஞ்சி -
சிவபெருமான் விரும்பி எழுந்தருளி யிருப்பனவாகிய இடையில்
உள்ள அவரது பூசனைக்குப் பொருந்திய பல தலங்களிலும் சென்று
பெருமானை வணங்கி; பொற்புலியூர்....நினைவுற்று - சிதம்பரத்திலே
கூத்தனாரது திருக்கூத்தைக் கண்டு வணங்குதற்கு
எண்ணங்கொண்டவராய்; வருத்தம்........மனங்கொண்டார் -
அவ்வெண்ணத்தால் வருத்தம் மிகுவிக்கும் ஆசை மேற்கொள்ள
அதனாலே புறப்பட்டு வழிச்செல்ல மனம் வைத்தார்.

     (வி-ரை.) திருத்துறையூர்தனைப் பணிந்து - இறைவனை
வணங்கியபின், அங்கிருந்து புறப்படுவார் வெளிப்போந்து, அத்திருத்
தலத்தை முறைமையால் வணங்கிச் சென்று. இவ்வாறே பல
தலங்களிலும் காண்க.

     அமர்ந்து அருளும் பொருத்தமாம் இடம் பல -
சிவபெருமான் உயிர்களுக்கு அருளும் பொருட்டு ஒவ்வோர்
காரணங்களால் ஓரோர் இடங்களில் வெளிப்பட்டு அங்கங்கே
விரும்பி வீற்றிருப்பர்; அவ்வகையிலே அவரை வழிபடற்குரிய
பொருத்தங்கள் உள்ள இடம். ‘பூசனைக்குப் பொருந்து மிடம்பல'
என்று முன்னர்க் குறித்தது காண்க. (திருமலைச் சிறப்பு). இங்குக்
குறித்தன திருத்துறையூரிலிருந்து திருத்தில்லைக்குச் செல்கின்ற
வழியிடையிலேயுள்ள தலங்கள். அவை திருவதிகை, திருமாணிகுழி
முதலியன. வரும்பாட்டுக்களிற் காண்க. அவற்றின் பொருத்தங்கள்
அவ்வவற்றின் தல விசேடங்களுட் காண்க. ஒரு தலத்தைக் குறித்து
வழிச்செல்வார் இடையில் உள்ள தலங்களையும் வணங்கிச் செல்ல
வேண்டுதல் முறையாம்.

     பொற்புலியூர் - பொன்னம்பலம் உள்ள பெரும்பற்றப்புலியூர்.
உயிர்கள் பொன்னேபோற் போற்றத்தக்க புலியூர் என்றலுமாம்.

     நிருத்தனார் திருக்கூத்து - நிருத்தம் - கூத்து - ஒரு பொருள்
குறிப்பன. ஏனைத் தலங்களிலே நிருத்தனார் அருள் ஆடலின்
ஒவ்வோர் பகுதியே நிகழ்வதாகவும், இங்கு ஐந்தொழில் ஆடல்
முற்றும் நிகழ்வதாம். இங்குக் கூத்தன் கூத்தியற்றுதலே தொழிலாக
நின்றான். ஆதலின் நிருத்தனைத் தொழுவதற்கு என்னாது
திருக்கூத்துத் தொழுவதற்கு என்றார். நிருத்தனைத் தொழுதல்
உயிர்களால் இயலாது. கூத்தைத் தொழுதலே யியலும். ‘அத்தாவுன்
ஆடல்காண்பான்' ‘கூத்தாவுன் கூத்துக் காண்பான்' என்ற அப்பர்
சுவாமிகள் தேவாரத்தின் உள்ளுறை காண்க. திருக்கூத்துத் தரிசனம்
என்ற திருமந்திரப் பகுதியில் இதன் இயலும் பயனும் காண்க.
முன்னர் விளக்கியதும் காண்க.

     வருத்தமிகு காதல் - ஆசைகொண்ட பொருளை
அடைவதற்கு உளதாம் தாமத முதலியவற்றால் ஆசை அதிகரிக்க
வருத்தமும் மிகுதல் இயல்பு. அவ்வாறு வருத்தத்தை மிகுவிக்கும்
காதல் என்க.

“..........தம்பணிகள் வேண்டுவன செய்வதற்கே
அருத்தியினா லொருப் பட்டங் காதனூர் தனினின்றும்
வருத்தமுறுங் காதலினால் வந்தவ்வூர் மருங்கணைந்தரர்“

என்ற திருநாளைப்போவார் புராணம் (16) காண்க.

     வழிக்கொள்வான் - வழிக்கொள்ள - புறப்பட்டுச் செல்ல.
வான் ஈற்று வினையெச்சம். 81