228. மனைவளர்சந் தகில்பீலி மலர்பரப்பி
                          மணிகொழிக்கும்
 
  அலைதருதண் புனற்பெண்னை யாறுகடந்
                          தேறியபின்
நிலவுபசும் புரவிநெடுந் தேரிரவி மேல்கடலிற்
செலவணையும் பொழுதணையத் திருவதிகைப்
                          புறத்தணைந்தார்.
82

     (இ-ள்.) வெளிப்படை. அவ்வாறு மனங்கொண்ட
வன்றொண்டர் புறப்பட்டுப் பெண்ணையாற்றைக் கடந்து
கரையேறியபின் மாலைப்பொழுதிலே திருவதிகை வீரட்டானத்தின்
புற எல்லையை அணைந்தார்.

     (வி-ரை.) மலை.......ஆறு - மலையிலே வளரும் சந்தனம்
அகில் என்னும் மரங்களையும், மயிற்பீலியையும், மலர்களையும்
வாரிக்கொண்டு எங்கும் பரப்பி மணிகளைக் கொழித்து
அலைகளுடன் ஓடிவரும் குளிர்ந்தநீர்ப் பரப்பினையுடைய
பெண்ணையாறு என ஆற்றின் செயலும் தன்மையும் கூறியவாறு.
அகில் - சந்து - பீலி முதலியன மலைபடு பண்டங்களாம். மலர்கள்
மலையிலும் முல்லைப்புறவங்களிலும் சோலைகளிலே உள்ளன.
இவற்றை வாரிக்கொண்டு தான்புகுந்து செல்லும் மருத நிலமுழுதும்
பரப்பி ஓடுதல் பெருவெள்ளமுடைய பெண்ணையாற்றின்
இலக்கணமாம். மணிகொழித்தல் - அதன் செல்வப் பெருக்கையும்,
அலைதருதல் - நீரின் பெருக்கையும் குறிக்கும். இதனால் அதன்
பிறப்பிடச் சிறப்பும், புகுமிடத்திற்குத் தரும் பயனும் கூறினார்.
பெண்களின் இலக்கணமும் இதுவேயாம். பெண்ணை என்ற பேரும்
காண்க. இவ்வாறு வருணனையிலே பொருட்சிறப்பினை
உள்ளுறையாகக் கூறுதல் மகா கவியின் தன்மை.

     இனி, இவ்வாறே திருவெண்ணெய்நல்லூரிலும்
திருத்துறையூரிலும்பெற்ற பெருவெள்ள அருட்செல்வத் தவநெறியை
நம்பிகளும் இனித் தாம் புகும் திசைகளிலெங்கும் பரப்பிச் செல்வார்
என்ற உள்ளுறையின் குறிப்பும் காண்க.

     இயற்கைப் பொருள்களின் வருணனை (தன்மை
நவிற்சியணி)யிலே ஒவ்வோர்கால் இவ்வாறு சரிதப்போக்கின்
தன்மையைக் குறிப்பது மகா கவிகளுட் பெரியோர்களிலே காணும்
தன்மையாம்.

“தாயினே ரிரங்கும் தலைவவோ வென்றுந் தமியனேன்                              றுணைவவோ வென்று
நாயினே னிருந்து புலம்பினா லிரங்கி நலம்புரி பரமர்தங்
                                        கோயில்
வாயினே ரரும்பு மணிமுருக் கலர வளரிளஞ் சோலைமாந்
                                       தளிர்செந்
தீயினே ரரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர்                                திருச்சிற்றம் பலமே“
                                 - கருவூர்த்தேவர்

என்ற திருவிசைப்பாவிலே வாய்போற் சிவந்து அலர்ந்த
முருக்கம்பூவின் வேண்டுதலுக்கிரங்கி மாந்தளிர் தீமேனியனாகிய
சிவம்போல அலர்ந்து காட்டும் காட்சியையுடைய திருத்தில்லை,
என்று, பின்னிரண்டடிகளிற் சொல்லிய வருணனை, நாயினேன் -
தலைவ!- துணைவ! என வாயினாற்புலம்ப வெளிப்பட்டு நடம்புரி
பரமர்கோயில் என்ற கருத்தைக் குறிப்பிற் காட்டுவதுகாண்க.

     கடந்து ஏறியபின் - பெண்ணையாற்றினை வடகரையினின்றும்
போந்து கடந்து தென்கரையை ஏறிய பின்பு. மேலே சொன்ன
தன்மையிலேயும் இவர் அதனைக் கடந்து மேற்சென்றார்
என்பதும்குறிப்பாம். ஆறுதான் புகுமிடத்துக்கே உதவும்; இவரோ
எல்லாவுலகும் உய்யச்செய்தார்; ஆதலின் இவர் தன்மைமிகுந்தது
என்க.

     நிலவு பசும் புரவி நெடுந்தேர் இரவி - நாள்களினாலே
உலகு நிலவுவதற்குக் காரணமாய் ஏழு குதிரை பூண்ட பெருந்தேர்
மீது வரும் ஞாயிறு. நிலவு இரவிதேர் இரவி என்று பிரித்து உரைக்க.
ஞாயிற்றின் செலவினாலே நாள் பகுக்கப்படும். பகுத்தலே பகல்
என்பது. ஞாயிற்றினது ஒளியும்வெப்பமும் கதிர்களுமே பகலைப்
பாகுபாடுசெய்து உயிர்களை வளர்ப்பதோடு உலகங்களைக் கால
தத்துவத்திலே செல்ல வைப்பன. ஆதலின் உலகு நிலவுதற்கு
ஏதுவாகிய இரவி என்க. உலகு - என நிலவுதற்கெழுவாய்
வருவித்துக் கொள்க. சூரியனது தேர்க்குதிரைகள் ஏழு என்பது மரபு.
அவை முறையே நீலம் முதல் சிவப்பு இறுதியாக 1ஏழுநிறமுடையன்
என்றும், நிறங்களே புரவிகளாகக் கூறப்பெறுவன என்றும் சொல்வர்.
இந்நிறங்கள் சூரிய கதிரின் பகுத்த தோற்றமாகிய இந்திர வில்லில்
காணப்பெறுவன.

     பசும்புரவி - இவ்வேழின் இடையில் நிற்பது பசுமையாம்.
இது சிங்க நோக்காக முன் மூன்றையும் பின் மூன்றையும் தழுவி
ஏழினையும் குறிக்கும். ஆதலின் ஏழு நிறப் புரவி யிருப்பவும்,
பசும்புரவி என்றார். பசுமை - புதுமை என்றும் கூறுவர்.

     நெடுந்தோ் - பல அண்டங்களிலும் செல்லும்படி நீண்ட
கதிர்களின் தொகுதி.

     இரவிமேல் கடலிற்செல அணையும்பொழுது - பொழுது
இறங்கும் மாலைக் காலம். மாலை முதலிய கால வருணனை கூறுதல்
காவிய இலக்கணங்களில் ஒன்று. வரிசை 159 பாட்டில் இரவி எழுதல்
கூறுதலும், இவ்வாறே பிறவும் காண்க. அணைதல் என்ற சொல்
சேக்கிழார் சுவாமிகளின் அழகிய அரிய சொல் ஆட்சிகளில் ஒன்று.
இதன் சொற்சுவையும் பொருட் பொலிவும் நோக்கிக் களிக்க.

     காலமளக்கும் கருவிகளாகிய ஞாயிறு முதலிய உருவப்
பொருள்களும் தத்தம் தொழிற்பாட்டிற்கு அருவப் பொருளாகிய
காலம் என்னும் தொழில் முதனிலையை (காரகத்தை) அவாய் நிற்கும்
என்பர் இரவி......அணையும் பொழுது அணைய - என்றார்.
அணையும் என்னும் பெயரெச்சம் கருவிப்பெயர் கொண்டது. இது
ஸ்ரீமத் முத்துக்குமாரத்தம்பிரான் சுவாமிகள் உரைக் குறிப்பு.

     இலகு பசும்புரவி - என்பதும் பாடம். 82

1இவை Vibgyor என்ற ஆங்கிலக் குறியீட்டு மொழியின் ஏழு
எழுத்துக்களாலும் உணர்த்துவர் நவீன பௌதிக நூலோர். Vollet -
Indigo - Blue - GREEN - Yellow - Orange - Red.