229. ‘உடையவர சுலகேத்து முழவாரப் படையாளி  
  விடையவர்க்குக் கைத்தொண்டு விரும்புபெரும்
                             பதியைமிதித்
தடையுமதற் கஞ்சுவ' னென் றந்நகரிற் புகுதாதே
மடைவளர்தண் புறம்பணையிற் சித்தவட
                            மடம்புகுந்தார்.

83

     (இ-ள்.) வெளிப்படை. ‘ஆளுடைய அரசுகளாய், உலகங்கள்
ஏத்துகின்ற உழவாரப் படையினை உடைய திருநாவுக்கரசர்
இறைவனுக்குக் கையாற் றிருத்தொண்டுகளை விரும்பிச் செய்த
பெருந்தலமாகிய இதனுள் காலால் மிதித்துச் செல்வதற்கு நான்
அஞ்சுகின்றேன்' என்ற எண்ணத்தால், அத்திருநகரத்தினுட் புகாமல்,
அதன்புறத்தே உள்ள சித்தவட மடத்திலே புக்கு நம்பிகள்
எழுந்தருளினார்.

     (வி-ரை.) திருநாவுக்கரசு சுவாமிகளைச் சொல்ல வந்த முதல்
இடம் இதுவேயாதலின், உலகத்தோடு சேர்ந்து தாமும் அவரைத்
தொழுது தம்மை உடையவராகக் கொண்டு துதித்து, ஆசிரியர்
குறித்துப்போந்த நயம் கூர்ந்து நோக்கத் தக்கது.


     உடைய அரசு - இறைவனாலே ஆளாகக் கொள்ளப்பெற்ற
பேறுடைய அரசுகள். ஆளுடைய பிள்ளையார் என்ற இடத்து
(திருஞான - புரா - 69) ஆசிரியர் ஆளுடைய - என்றதன்
பொருளை விரித்திருத்தல் காண்க. ஆளுடைய அரசுகள் என்க.

     உலகேத்தும் உழவாரப் படையாளி - உலகம் (உயர்ந்தோர் -
ஞானிகள்) துதிக்கின்ற தன்மையுடைய உழவாரப் படையை
ஏந்தியவர். உலகம் ஏத்தும் உழவாரம் எனவும், உலகம் ஏத்தும்
ஆளி எனவும் கூட்டி உரைத்தலுமாம்.

     உழவாரம் - கல் புல் முள் முதலியவற்றைத்
திருவீதிகளிலிருந்தும், திருமுற்றங்களிலிருந்தும், எடுத்துச்
சுத்தமாக்குவதற்கு அரசுகள் எப்போதும் கையில் ஏந்தியிருந்த படை.
இது வேளாளர்க்கே உரியதொரு படைக்கலமாம். சிவ நெறியிலே
செல்வோர்க்கு நேரும் இடையூறுகளைப் போக்கும் கருவியாக
அரசுகள் காட்டி உலகை வழிப்படுத்தினாராதலின் உலகேத்தும்
உழவாரம் என்றார்.

“ஏரின் சிவபோக மிங்கிவர்க்கே யென்னவுழ
வாரங்கொள் செங்கையர்தாள் வாரம்வைப்ப தெந்நாளோ“
                                - தாயுமானசுவாமிகள்
 
“உழவாரத்திண் படையறாத் திருக்கரமும்“
                         -மாதவச் சிவஞான சுவாமிகள்

என்பனவாதி திருவாக்குக்கள் காண்க.

     அஞ்சுவன் - நிகழ்காலத்தில் வந்தது. அரசுகள்
கைத்தொண்டு செய்த தலத்தை மிதிக்க அஞ்சுகின்றேன் என்று
நம்பிகள் எண்ணினாராதலின், மாலைக் காலமாயினும் திருவதிகை
நகரத்திற்புகாது மடத்தில் எழுந்தருளினார். இதுவே
அடியர்க்கடியராய் ஒழுகும் இயல்பும் சிறப்புமாம்.
இவ்வொழுக்கத்தினை உலகில் நடத்திக் காட்டித் தீதிலாத்
திருத்தொண்டத்தொகை தர வந்தவர் நம்பிகள். இவ்வாறே பின்னரும்
திருஞானசம்பந்த சுவாமிகள் அவதரித்த திருத்தலமாகிய சீகாழிக்குள்
செல்லாது நம்பிகள் வெளியே நின்று துதித்து இறைவன் காட்சி
கொடுக்கப்பெற்றுச் சென்ற சரிதமும், காரைக்காலம்மையார் தலையால்
நடந்து சென்ற தலத்தை மிதித்து அடையஅஞ்சித் திருஞானசம்பந்த
சுவாமிகள் புறத்துவேறோர் பதியிலே எழுந்தருளியிருந்து துதித்த
சரிதமும் காண்க. (“இம்மையிலே“ - திருஞா - புரா - 1008)

     சித்தவட மடம் - திருவதிகைக்கு வடமேற்கில் 3 நாழிகை
யளவில் உள்ளதொரு பழைமையாகிய பொதுத்திருமடம்.
திருவதிகைப் புறநகருக்குவெளியே உள்ள வயல்களுக்கு அப்பால்
உள்ளதாதலின் புறம்பணையின் என்றார். புறம்பணை முன்பின்னாகத்
தொக்கது. நம்பிகள்பரிசனங்களுடன் எழுந்தருளிய பெருமையும்,
அன்றிரவு இறைவன் கிழவேதியனாக வந்து தாமும் கூடவே பள்ளி
கொண்டு நம்பிகளது திருமுடிமேல் இருமுறை தமது திருவடி சூட்டிய
பெருமையும், இங்கிருந்தே நம்பிகள் ‘தம்மானை யறியாத சாதியார்“
என்ற திருப்பதிகத்தைத் திருவதிகை இறைவன் மீது பாடிய
பெருமையும் உடையது. அப்பர் சுவாமிகளால் ‘சித்தவடமு மதிகைச்
சேணுயர் வீரட்டம்' (திருவதிகை - காந்தாரம் - 3) என்று
பாடப்பெற்ற பெருஞ்சிறப்புடையது. இது இப்போது
கோட்டாலம்பாக்கம் என வழங்கப்பெறுகின்றது. இவ்விடத்து ஒரு
சிவாலயம் உண்டு. திருத்துறையூரிலிருந்து 3 நாழிகையளவில் உள்ள
இதற்கும், இதிலிருந்து திருவதிகைக்கும் நேர்ப்பாதை உண்டு.

     கைத்தொண்டு விரும்பும்
- இடையறாது பொழிகண்ணீர்
மழையும், வாக்கிலே ஈறின்றி எழும் தீந்தமிழின் மாலைகளும்,
அன்புடைத் தொண்டர்க்கமுதரும்பி யின்னல்களையும்
திருத்தாள்களையே சார்வாகும் திருமனமும், உடையார் அப்பர்
சுவாமிகள்; ஆயினும், அவற்றோடு கைத்தொண்டு செய்தலை
மிகவிரும்பிச் செய்தனர். ஆதலின் உழவாரப் படையினை
எப்போதும் தாங்கிச் சென்றார். 83