23. அன்ன தன்றிருத் தாழ்வரை யின்னிடத்
 
  தின்ன தன்மைய னென்றறி யாச்சிவன்
றன்னை யேயுணர்ந் தார்வந் தழைக்கின்றான்
உன்ன ருஞ்சீ ருபமன் னியமுனி.
13

     (இ-ள்.) அன்னதன் ... இடத்து - மேலே கூறிய
தன்மைகளைப் பொருந்திய கயிலாய மலையின் சாரலினிடத்தே;
இன்ன ... தன்னையே - இப்படிப்பட்ட தன்மையுடையான் என்று
யாவராலும் அறியப்படாதவராகிய சிவபெருமானையே; உணர்ந்து
ஆர்வம் தழைக்கின்றான் - உணர்ந்துகொண்டு ஆசைபெருக
அனுபவித்துக் கொண்டிருக்கிறான்; உன்னரும் சீர் உபமன்னியமுனி
- நினைத்தற்கும் அரிய சிறப்பினையுடைய உபமன்னிய முனிவர்.

     (வி-ரை.) அதன் தாழ்வரை யிடத்து உபமன்னியமுனிவர்
சிவன் தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான் என்க.
“இன்ன தன்மையன் என்றறியொண்ணா எம்மானை” என்பது
சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம்.

     அறியாச் சிவன - அறியப் பெறாத சிவன். செயப்பாட்டு
வினைப்பொருளில் வந்தது. சிவன் மனத்தா லுணர்தற்கும்
வாக்கினால் ஒதுதற்கும் அறியவன் என்பது. “உலகெலாம் உணர்ந்து
ஒதற்கரியவன்” என முதற்றிருப்பாட்டிலேயே அறிவித்தமை காண்க.

     தன்னையே - ஏகாரம் தேற்றம்; பிரிநிலையும் ஆம். சிவனையே யன்றி வேறொருவரையும் உணராதவன் -
வணங்காதவன் என்பது.

“சம்பு வின்னடித் தாமரைப் போதலால்
எம்பிரா னிறைஞ் சாய்”
(19)

என்று மேலே குறிப்பதையும் காண்க.

“மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது”
                       - திருவாசகம்

“உன்னையல்லா லொருதெய்வ முள்கேன்”
                 - அப்பர் சுவாமிகள்

“சென்றுநாஞ் சிறுதெய்வஞ் சேர்வோ மல்லோஞ்
சிவபெருமான் றிருவடியே சேரப் பெற்றோம்”
                     - அப்பர் சுவாமிகள்.

“அத்தாவுன் னடியலா லரற்றா தென்நா”
     - திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்

     உணர்ந்து - தியானத்திற் கண்டு. அவ்வுணர்வே உருவமாகி.
இது மனம்வாசகம் முதலிய கரணங் கடந்த யோகக் காட்சி.

     ஆர்வந் தழைக்கின்றான் - அந்த யோகக் காட்சியிலே விளைந்த ஆனந்தத்தில் அழுந்தி நிற்கின்றார்.

     இன்ன தன்மையன் என்று அறியாச்சிவன் என்பது சவிகற்பக் காட்சியில்

    அறிதற்கரியவன் - அஃதாவது, இப்படியன் - இந்நிறத்தன் -
இவ்வண்ணத்தன் - இவன் - இறைவன் என்றெல்லாம்
பிரித்துக்காணுதல். இவ்வாறு அறிய இயலாவிடினும், நிருவிகற்ப
சமாதியிலே அவன் தம்மை ஆட்கொண்டு அளிக்கும் ஆனந்தத்தில்
திளைத்து அனுபவிப்பர் சிவானுபூதிமான்கள் என்பாராய் ‘இன்ன
தன்மையன் என்று அறியாச்சிவன’(ஆயினும் அவன்) தன்னையே
உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான் என்று கூறினார். இக்கருத்தையே,

“இங்ங னிருந்ததென் றெவ்வண்ணம் சொல்லுகேன்
                 அங்ங னிருந்ததென் றுந்தீபற
அறியு மறிவதன் றுந்தீபற” என்று சாத்திரம் பேசும்.                                     இதனை,

“............... இணைமலர்க் கழல்காட்டி
அறிவு தந்தெனை யாண்டுகொண் டருளிய அற்புத                                 மறியேனே”

என மணிவாசகப் பெருமானும் விதந்து கூறியருளினார்.

     இதனாலே “உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான்”என்பது “அறியாச்சிவன்” என்பதனோடு முரணாமை அறிக. இக்கருத்தையே
உலகெ லாமுணர்ந்தோதற் கரியவன்” என்றும், “நிலவு லாவிய நீர்மலி வேணியன்” என்றும் முதற்பாட்டிலே கூறினார். விரிவு
அப்பாட்டின் உரையிற் காண்க.

     உன்னரும் சீர் உபமன்னிய முனி - இப்பெரு முனிவரது
சீர்கள் உன்னுதற்கும் (நினைத்தற்கும்) அரியன ஆயினும் அவற்றுட்
சிலவற்றை வருகின்ற இரண்டு பாட்டுக்களிலும் எடுத்துக்
கூறியருளுவார். இவரது சீரிற் சிறந்ததாகிய, சிவனை உணர்ந்து
ஆர்வம் தழைக்கின்ற - சிறப்பை இங்கு முதலிற் கூறியதன்றி மேலும்
தெரிக்கின்றார் என்க.   13