230. வரிவளர்பூஞ் சோலைசூழ் மடத்தின்கண்
                            வன்றொண்டர்
 
  விரிதிரைநீர்க் கெடிலவடவீ ரட்டா னத்திறைதாள்
புரிவுடைய மனத்தினராய்ப் புடையெங்கு
                              மிடைகின்ற
பரிசனமுந் துயில் கொள்ளப் பள்ளியமந்
                              தருளினார்.
84

     (இ-ள்.) வெளிப்படை. சோலைசூழ்ந்த அந்தச் சித்தவடத்
திருமடத்திலே நம்பிகள் திருவீரட்டானேசுவரருடைய
திருப்பாதங்களையே இடைவிடாது சிந்தித்துக்கொண்டவராகித்
தம்மைச் சூழப்பொருந்திய பரிசனங்கள் துயிலப்
பள்ளிகொண்டருளினார்.

     (வி-ரை.) சோலைசூழ்மடம் - பூசைக்கும், தவத்திற்கும், ஏற்ற
அமைப்புக்கள் கிடைத்தலாலே பூஞ்சேலைகளினிடையே திருமடங்கள்
அமைத்தல் வழக்கு. மடங்கள் முதலிய அமையப் பின்னரே
சோலைகள் அமைவதால் சோலைசூழ்மடம் என்றார். வரிவளர் - (1)
வரிகளையுடைய - (2) வரிசையாகிய - (3) வரிப்பாட்டுக்களைப்
பாடும் - வண்டுகள் என்க.

     புரிவுடைய - இடைவிடாது நினைக்கின்ற. “புகழ்புரிந்தார்“
(குறள்.) உட்புகாமையாலே நேரே தரிசிக்கப்பெறாது அவற்றையே
சிந்தித்துக் கொண்டிருந்த மனம். இது மனத்தினியல்பு. இறைவன்
பாதங்களைத் தம் முடிமேலே சூட்ட வேண்டுமென்று எப்போதும்
எண்ணிக்கொண்டிருந்தார் நம்பிகள் என்பது,

“எம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்“

என்ற தேவாரத்தால் அறியலாம்.

     புடையெங்கும் மிடைகின்ற பரிசனமும் -
எண்ணில்லாதவர்களாய்ச் சுற்றி எங்கும் நெருங்கிச்சூழ்ந்த
பரிசனங்கள். பரிசனமும் உம்மை எதிரது தழீஇயது. இத்தனைபேரும்
அறியாமே பின்னர் இறைவன் வருகின்றாராதலின் அதன் அருமை
காண இவ்வாறு விதந்து கூறினார்.

     விரிதிரைநீர்க் கெடில வட வீரட்டானத்து இறை - இது
நம்பிகள் இங்கு அருளிய ‘எறிகெடில வடவீரட் டானத் துறைவானை'
என்ற திருப்பதிக மகுடப் பகுதியின் பொருள். 84