231.
|
அதுகண்டு
வீரட்டத் தமர்ந்தருளு மங்கணரு |
|
|
முதுவடிவின்
மறையவராய் முன்னொருவ
ரறியாமே
பொதுமடத்தி னுட்புகுந்து பூந்தாரான்
றிருமுடிமேற்
பதுமமலர்த் தாள்வைத்துப் பள்ளிகொள்வார்
போற்பயின்றார். |
85 |
(இ-ள்.)
வெளிப்படை. நம்பிகள் தமதுதாளை நினைத்துப்
பள்ளியமர்ந்ததைக் கண்டு திருவீரட்டானேசுவரர் கிழமறையவராகிய
உருவத்துடன் முன்னே ஒருவரும் அறியாதபடி அந்தப்
பொதுமடத்தினுள்ளே புகுந்து நம்பிகளது திருமுடியின் மேலே தமது
தாமரைமலர்போன்ற திருவடிகளை வைத்துத் தாமும் பள்ளி
கொள்வாரைப் போன்று காட்டினார்.
(வி-ரை.)
அதுகண்டு - தமது திருவடிகளை முடிமேல்
வைக்கப்பெறவேண்டுமென்னும் ஆசையுடன் பள்ளியமர்ந்ததைக்
கண்டு. வேண்டுவார் வேண்டியாங்கு அருளுவாராதலின் அதனைக்
கண்டு பின்வருமாறு செய்தருளினார் என்க.
கண்டு அருளும் அங்கணர்
- அவரது ஆசை
கண்டமையினாலே அவர்விரும்பியதையே தரவேண்டுமென்ற
அங்கண்மையுடையார். தாள் புரிந்தார்க்குத் தாள்களையே அருளும்
கருணையுடையார் என்க.
வேண்டுவார்
வேண்டுவதே யீலான் கண்டாய் என்ற
தேவாரமும் காண்க. ‘அந்நிலை யவர்தாம் வேண்டு மதனையே
யருளவேண்டி' (வரிசை - 341. இப்புரா - 195) என்று பின்னர்ச்
சாக்கிரத்திலே திருவடிகளை அருளியதும் காண்க.
முதுவடிவின்
- தாம் எப்போதும் பூண்டு பழகிய பழைய
வடிவாகிய கிழமறையவர் கோலம். முதுமறையவராகியது அவர்
இயல்பு. அதனை வடிவாகக் கொண்டு வெளிப்பட்டார் என்பார்
முதுவடிவின் மறையவராய் என்றார். எல்லார்க்கும் முன்னவனாதலின்
முதுமையார் ஆயினர். வரும்பாட்டில் என்னுடைய மூப்பு என்பதும்
காண்க.
முன்ஒருவர் அறியாமே - முன் - (1) நம்பிகள் அறிவதற்கு
முன். (2) இறைவர் அறிவிப்பதற்குமுன்.
ஒருவரும்
- உம்மை தொக்கி நின்றது.
பொதுமடம் -
பொதியில். ‘மன்றமும் பொதியிலும்'
(திருமுருகாற்றுப் படை) அடியார்கள் எல்லாருக்கும் பொதுவாக
அமைத்தபடியால் இறைவனும் அவ்வேடந் தாங்கி உள்ளே புக
இடமுண்டாயிற்று என்று குறிப்பார் பொதுமடம் என்றார்.
பூந்தாரான்
- தாமரைப்பூ மாலை யணிந்த நம்பிகள். பூ -
சிறப்புப்பற்றித் தாமரையைக் குறித்ததுடன், அந்தணராகிய நம்பிகளது
மரபுக்கு உரிய திருவடையாளமாலையுங் குறித்ததாம். ‘அல்லியந்
தாமரைத்தார் ஆரூரன்' (நம்பிகள் தேவாரம் - பழமண்ணிப்
படிக்கரை - 10).
திருமுடிமேல்
- ‘என் முடிமேல் வைத்திடுமென்னும் ஆசை'
கொண்டாராதலின் முடிமேல் வைத்தார். அன்றியும் இறைவனது
தாள்களை வைக்குமிடம் திருமுடியேயாம். ‘குஞ்சிப் பூவாய் நின்ற
சேவடியாய்' (அப்பர்சுவாமிகள் தேவாரம்.)
பதுமமலர்த்தாள் -
தாமரைபோன்ற திருவடிகள்.
தாமரைமாலை யணிந்தார்க்கு முடியிற் சூட்டுவதுந் தாமரையே
என்னும் தகுதி குறித்தபடியுமாம். பதும முதலிய இரேகை
முத்திரைகள் அமைந்து முழுஇலக்கணமும் வாய்ந்த திருவடிகள்
என்றலுமாம். ‘திருவடியிற் றிருப்பஞ்ச முத்திரையுந் திகழ்ந்திலங்க'
(மானக்கஞ்சாற நாயனார் புராணம் - 24) என்றமை காண்க. தவநெறி
தந்தருளிய இறைவர் அதன் பின்னர் முறைப்படி திருவடி தீக்கையும்
செய்தார் என்க.
பள்ளிகொள்வார் போல்
பயின்றார் - உண்மையிற்
பள்ளிகொண்டாரல்லர். அவ்வாறு நடித்துக் காட்டினார். பயிலுதல்
- இங்குப் பாவனை காட்டுதல் என்ற பொருளில் வந்தது.
நித்தியமாகிய ஐந்தொழிலை எப்போதும் செய்பவராதலின்
பள்ளிகொண்டறியார். ஆதலின் அவ்வாறு செய்வார்போலே
பயின்றார். முன்பாட்டிலே ஆரூரர் ‘பள்ளியமர்ந்தருளினார்'
என்றதும் காண்க. 85
|
|
|
|