234. ‘செம்மாந்திங் கியானறியா தென்செய்தே'
                          னெனத்தெளிந்து
 
  ‘தம்மானை யறியாத சாதியா ருளரே'யென்
றம்மானைத் திருவதிகை வீரட்டா னத்தமர்ந்த
கைம்மாவி னுரியானைக் கழல்பணிந்து பாடினார்.
88

     (இ-ள்.) வெளிப்படை. என் இறுமாப்பினாலே யான் எனது
இறைவனை அறியாது என்ன செய்துவிட்டேன்! என்று வருந்தித்,
‘தம்மானை யறியாத சாதியா ருளரே' என்று தொடங்கும்
திருப்பதிகத்தினாலே திருவதிகை வீரட்டானேசுவரருடைய
திருப்பாதங்களை வணங்கித் துதித்துப் பாடினார்.

     (வி-ரை.) செம்மாந்து - இறுமாப்படைந்து - பெருமிதமடைந்து.

“சிம்மாந்து சிம்புளித்து.......“
- நம்பிகள் தேவாரம் - திருக்கருப்பறியலூர் - 1.
 
“சீரூர்பாட லாட லறாத செம்மாப் பார்ந்து.......“
- அப்பர் சுவாமிகள் - திருவாரூர் - குறிஞ்சி - 10

என்ற திருவாக்குக்கள் காண்க. ‘என்னைப் பலகாலும் மிதித்தனை'
என்று கூறியதில் யான் என்னும் இறுமாப்பு என் அடிமைத் தன்மையை
மறக்கச் செய்தது. என்னை அறியாததாலே, தலைவனாகிய உன்னையும்
அறியாமற் செய்து, ‘நீ யார்' என்று சினந்து கேட்கச் செய்தது எனது
செம்மாப்பு.

     ‘தம்மானை அறியாத சாதியாருளரே'
- இது
உண்மையுணர்ந்தவுடனே நம்பிகள் பாடிய திருப்பதிகத்தின்
முதற்குறிப்பு. தமது தலைவனையும் அறிந்துகொள்ளாத வகுப்பாரும்
உலகத்தில் உண்டோ? சாதியார் - வகுப்பினர் - வகையிலே - பட்டவர்
- அறியாத வகையினர். சாதி - வகுப்பு என்ற பொருளில் வந்தது.
தமது தலைவனைத் - தம்மை ஆளாகக்கொண்டு காக்கின்றவனைத் -
தமது நலங்கருதியேனும் யாவரும் அறிவர். அவ்வாறு அறியாத
வகையினர் உலகில் இல்லை என்றபடி. உளரே - ஏகார வினா இல்லை
என்ற விடை குறித்து நின்றது. வேறு ஒருவரும் இல்லை; ஆயினும்
யான் ஒருவன் இறைவனை யறியாது இறைபோதும் இகழ்வன் போலும்
என்பது பதிகக் கருத்து.

     கைம்மாவின் உரியானை - யானையை உரித்துப் போர்த்தவன்.
யானை மதமுடைமையின் ஆணவத்தைக் குறிக்கும். தலைவனை நீ யார்
என்று கேட்பித்த தமது ஆணவத்தை ஒழித்தவன் என்ற குறிப்புப்பெற
நம்பிகள் தேவாரத்திற் காணும் இச்சொற்றொடரை ஆசிரியர்
எடுத்தாண்டு இங்குப் பெய்த சிறப்புக் காணத்தக்கது.

     கழல் பணிந்து பாடினார்
- முன்னர் மறைப்பினாலே
‘பலகாலும் மிதித்தனை' என வெறுத்த அந்தக் கழலையே மறைப்பு
நீக்கம் பெற்ற இப்போது பணிந்து துதித்தார்.

பதிகம்
(பண் -கொல்லிக்கௌவாணம்)
திருவதிகை வீரட்டானம்

திருச்சிற்றம்பலம

தம்மானை யறியாத சாதியா ருளரே
சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவி னுரியானைக் கரிகாட்டி லாட
லுடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்

தெம்மான்ற னடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னு
     மாசையால் வாழ்கின்ற வறிவிலா நாயேன்
எம்மானை யெறிகெடில வடவீரட் டானத்
     துறைவானை யிறைபோது மிகழ்வன்போலி யானே.

என்பினையே கலனாக வணிந்தானை யெங்க
     ளெருதேறும் பெருமானை யிசைஞானி சிறுவன்
வன்பனைய வளர்பொழில்சூழ் வயல்நாவ லூர்க்கோன்
     வன்றொண்ட னாரூரன் மதியாது சொன்ன
வன்பனை யாவர்க்கு மறிவரிய வத்தப்
     பெருமானை யதிகைமா நகருள்வாழ் பவனை
யென்பொன்னை யெறிகெடில வடவீரட் டானத்
     துறைவானை யிறைபோது மிகழ்வன்போலி யானே.

திருச்சிற்றம்பலம

     பதிகக் குறிப்பு :- வலிய வந்து தமது திருமுடிமேற் பல
முறையும் திருவடி சூட்டிய தலைவனை அறியாது சிறிது
இறுமாப்படைந்து மதியாது பல சொல்லி இகழ்ந்தேன். இது தகுமோ?
என்பதாம். ‘இறைபோதும் இகழ்வன்போல் யானே?' என்ற பதிகத்து
மகுடம் காண்க.

     பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) எம்மான்ற னடிக்கொண்டென்
முடிமேல் வைத்திடு மென்னு மாசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
- இது திருவடி தீக்கையிலே நம்பிகள் ஆசை வைத்திருந்ததைக்
குறிக்கும் “இறைதாள் புரிவுடைய மனத்தினராய்“ (வரிசை 230) என்ற
சரிதத்துக்கு அகச்சான்றாம். அறிவிலா நாயேன் - முன்னர் வழக்கு
இட்டபோது அறியாததுபோலவே இன்றும் இறைவர் தாமே
வெளிவந்தபோதும் அறியாமலிருந்ததற் கிரங்கிய கூற்று. (2) முன்னே
எம்பெருமானை மறந்தேன்கொல் மறவா தொழிந்தேன்கொல் மறவாத
சிந்தையால் வாழ்வேன். இதுவும் நம்பிகளது அறிவு நிலையை மிக
நன்றாக உணர்த்தும் அகச்சான்றாம். ‘நலந்தீங் கிலுமுன் னைமறந்
தறியே - னுன்னா மமென்னா வின்மறந் தறியேன்' என்றும், ‘பூவா
ரடிச்சுவ டென்மேற் பொறித்து வை' என்றும் வரும் அப்பர்சுவாமிகள்
திருவாக்குக்களை இங்குவைத்து உன்னுக. (என்கொல் - என்பதும்
பாடம்.) அமரப்படுவான் - நினைக்கப்படுபவன். (3) வளராத பிறையும்
வரியாவும் உடன்றுயில வைத்தாளும் எந்தை - உடன்றுயில - ஒன்றாய்
வாழ; வளராத பிறை -

‘மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமே னாகந்
தெறுமென்று தேய்ந்துழலு மாவா - உறுவான்
தளரமீ தோடுமேற் றானதனை யஞ்சி
வளருமோ பிள்ளை மதி'

- காரைக்காலம்மையார் அற்புதத்திருவந்தாதி - 36

காண்க. (4) நாற்றானத் தொருவனை - ‘இது நாலா நிலையாகிய
சிவயோகத்தைக் குறிக்கும் என்பர். நாற்றானத் தொருவனை - என்பது
திருக்களிற்றுப்படி. நின்மல துரிய நிலையே தசகாரியத்துள்
சிவயோகநிலை. சிவம் தெளிவாக விளங்கும் நிலை இதுவே. (இது
ஸ்ரீமத் முத்துக்குமாரத் தம்பிரான் சுவாமிகள் உரைக் குறிப்பு.) நம்பிகள்
ஞானயோக நெறியை விளக்கவந்த ஆசாரியராதலும் காண்க. ‘தேடுவன்
றேடுவன் செம்மலர்ப்பாதங்க ணாடெறும், நாடுவன் நாடுவன் நாபிக்கு
மேலேயோர் நால்விரல்“ (திருவாமாத்தூர் - 9) என்ற நம்பிகள் தேவார
முதலியனவும் காணத்தக்கன. நானாய் பரனை - இதற்கு ‘என்வண்ண
மெவ்வண்ண மவ்வண்ண மாகிய வீசன்' என்ற கருத்துக்கொள்ளுதல்
சிறப்பாகத்
தோன்றுகிறது. “புக்குழிப் புக்குப் பெயர்த்துழிப் பெயர்த்து,
மிக்க போகம் விதியால் விளைத்திங், கெற்பணி யாளா வெனைப்பிரி
யாதே, யோடி மீள்கென வாடல் பார்த்திட், டென்வழி நின்றன
னெந்தை“, “என்வழி யிற்றை ஞான்று மிருந்தரு டன்னைப் போலத்,
தன்வழி யெற்றை ஞான்றுந் தங்குமந் நிலைமை“ என்பன இருபா
இருபஃது - தணிகைப் புராணம் - இவையும், ஸ்ரீமத் முத்துக் குமாரத்
தம்பிரான் சுவாமிகள் உரைக்குறிப்பு.

“பத்திப்போர் வித்திட்டே பரந்த வைம்புலன்கள் வாய்ப்
     பாலே போகா மேகாவாப் பகையறு வகைநினையா
முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள் வாய்
     மூடாவூடா நாலந்தக் கரணமு மொரு நெறியாய்ச்
சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப்பரம் பொருள்
     சேர்வார் தாமே தானாகக் செயுமவன்.“

     திருக்கழுமலம் - திருத்தாளச்சதி - 7 என்ற திருஞானசம்பந்த
சுவாமிகள் தேவாரமும் காண்க. இதில் “நாலந்தக் காரணமுமொரு
நெறியாய்ச் சித்திக்கே யுய்த்திட்டு“ என்பதனை “மறவாத சிந்தையால்
வாழ்வேன்“ என்றதனோடு வைத்துக் காண்க. (6) ‘வானோர்
தம்மானைத் தலைமகனை', ‘வெண்ணிறு சண்ணித்த மேனி'
இச்சொற்றொடர்கள் முறையே, அப்பர்சுவாமிகளது திருவாரூர்
‘பொய்ம்மாய' என்ற திருத்தாண்டகத்தையும், திருவாரூர்ப் பழமொழித்
(காந்தாரம்) திருப்பதிகம் ‘மெய்யெலாம்' என்ற பாட்டினையும்
நினைவூட்டுகின்றன. உடைய அரசு கைத்தொண்டுசெய்த தலம் என்று
உட்புகாது தங்கிய நம்பிகள் அவர்களது தேவாரங்களை
எண்ணினார்போலும். சண்ணித்தல் - நிறையப் பூசுதல் (9) கருந்தாள
- பெரிய வலிய கரிய கால்களை உடைய; பெரியகண் மூன்று -
சூரியன், சந்திரன், அக்கினி என்ற உருவிலும் வலியிலும்
பெரியனவாகிய மூன்று கண்கள் (10) இசைஞானி - என்ற தமது
தாயாரின் பெயரையும், சிறுவன் - என்று தமது வயதையும்,
(மணஞ்செய்பவரும் 16 வயது என்பதிலக்கணம்) நாவலூர்க்கோன் எனத்
தமது தலத்தையும், வன்றொண்டன், ஆரூரன் - என முறையே தமக்கு
இறைவனும் பெற்றோரும் அளித்தபெயர்களையும், மதியாது சொன்ன
இப்பதிகம் பாடி நின்ற சரிதக் குறிப்பையும்பெற வைத்திருத்தல் காண்க.
இவ்வாறே பின்வரும் பதிகங்களிலும் கண்டுகொள்க.

     தலவிசேடம் - அட்டவீரட்டங்களில் ஒன்று. திரிபுரமெரித்த
வீரம் நிகழ்ந்த தலம். அப்பர் சுவாமிகளை ஆட்கொண்ட வரலாறு
அப்புராணத்துக் காண்க. திலகவதியம்மையார் திருப்பணி செய்தமர்ந்த
தலம். இவர்களது திருவுருவங்கள் இங்கு அமைத்துப் பூசிக்கப்
பெறுகின்றன. திருஞானசம்பந்த சுவாமிகளுக்கு இறைவன் இங்கு
முன்னே எதிர்காட்சி கொடுக்க ‘ஆடும் வீரட்டானத்தே' என்ற
குறிப்புடன் பதிகம் பாடியருளினர். இறைவனது இலிங்க அருட்டிரு
மேனி மிக உன்னதமாய் விளங்குவது. தீர்த்தம் - கெடிலநதி. சுவாமி -
திரிபுராந்த கேசுவரர். தேவியார் - திரிபுரசுந்தரி. இது நடுநாட்டுத்
தலங்களில் 7-வது தலம். கெடில நதியின் வடகரையில் உள்ளதென்பது
பதிகத்துக் காண்க. திருப்பதிகங்கள் 8. மூவர்பதிகங்களுமுண்டு.
பண்ணுருட்டி இருப்புப்பாதை நிலையத்திலிருந்து கிழக்கே ஒரு
நாழிகையளவில் அடையத்தக்கது. 88