237. பரம்பொருளைப் பணிந்துதாள் பரவிப்போய்ப்
                            பணிந்தவர்க்கு
 
  வரந்தருவான் றினைநகரை வணங்கினர்வண்
                               டமிழ்பாடி
நரம்புடையா ழொலிமுழவி னாதவொலி வேதவொலி
யரம்பையர்தங் கீதவொலி யறாத்தில்லை
                          மருங்கணைந்தார்.
91

     செங்கணவன் வழிபட்ட திருமாணிகுழி - சிவந்த கண்ணுடைய
திருமால் அப்பழி நீங்கும்பொருட்டுச் சிவபூசை செய்த திருமாணிகுழி என்ற
தலத்தை. திருமாணிகுழி என்ற தலப் பேரின் காரணமும் முன் வரலாறும்
குறிப்பித்த அழகினை நோக்குக. மாணி - பிரமசாரி; குழி - தலம்.
வாமனனாகிய பிரமசாரி பூசித்த தலம் என்க. உத்தம குணங்களுடையானும்
சிவபத்தனுமான மாவலியை யாதொரு குற்றமுமின்றியே, தேவர்கள்
வேண்டுதலுக்காக வஞ்சித்து அழித்தமையால் உளதாகும் பழியைப்
போக்கிக்கொள்ளத் திருமால் இறைவனை வழிபட்டார் என்பது
சிவபுராணங்களிற் கண்டது. குற்றுருவத்தோடு விளைத்த கேட்டினைச்
சீர்ப் படுத்திக்கொள்ள அவ்வுருவத்தோடு பூசித்தவகையை,
    

‘நித்தநிய மத்தொழில னாகிநெடு மால்குறள னாகிமிகவும்
சித்தம தொருக்கிவழி பாடுசெய நின்றசிவ லோகனிடமாம்“

என்ற (ஆளுடைய பிள்ளையாரது - சாதாரிப்பண் - 4) இத்தலத்
தேவாரத்திற் காண்க. இங்குக் குழி என்பது தங்குமிடம் - தலம் என்ற
பொருளில் வந்தது அரதைப்பெரும் பாழி என்பதிற் பாழி என்றதுபோல.
இந்தத் தலத்துக்கு நம்பிகள் அருளிய திருப்பதிகம் இப்போது கிடைத்திலது
- இறந்துபட்டதுபோலும்.

     தலவிசேடம் - திருமாணிகுழி - நடுநாட்டுத் தலங்களில் 17-வது தலம்.
இது திருப்பாதிரிப்புலியூரிலிருந்து மேற்கே 5 நாழிகை சென்று தெற்கில்
அரைநாழிகை கடந்து சென்றால் கருடநதியின் தென்கரையில் உள்ளது.
நம்பிகள் திருவதிகையிலிருந்து சென்று இதனை அடைந்தவழி வேறு.
தலசரிதக் குறிப்புக்கள் மேலே உரைக்கப்பெற்றன. சுவாமி - மாணிக்கவரதர்.
தேவியார் - மாணிக்கவல்லி.

     (இ-ள்.) பரம்பொருளை......போய - அங்கே முழுமுதற்
பொருளாகிய சிவபெருமானைப் பணிந்து அவரது பாதங்களை வந்தித்துக்
கொண்டுபோய்; பணிந்தவர்க்கு.......பாடி - தம்மை வணங்கியவர்களுக்கு
வேண்டும் வரங்களைத் தருபவராகிய இறைவன் எழுந்தருளிய
திருத்தினைநகரை வணங்கித் திருப்பதிகம் பாடிய பின்னர்;
நரம்பு.....அணைந்தார் - நரம்புகளையுடைய யாழின் ஒலியும்,
முழவினொலியும், வேத ஒலியும், அரம்பையர் பாடும் கீதவொலியும்
இடையறாது முழங்கும் திருத்தில்லையின் எல்லையைச் சென்று சேர்ந்தார்.

     (வி-ரை.) பரம்பொருளைப் பணிந்து தாள்பரவி - பணிந்து
சிவபெருமானை. பரவியது அவரது சீபாதங்களை. அப்பாதங்களை தமது
முடிமேல் நின்று சிவ தீக்கை செய்தருளினமையால் அந்நன்றி்யின்
பொருட்டுப் பரவினார். முன்பாட்டுக் காண்க. திருவடியாவன ஞானசத்தி
கிரியாசத்தி என்பன. இவையே திருவடியாக உபசரிக்கப்பெறும். இதன்
விரிவைத் திருமூலர் திருமந்திரம் முதலிய ஞானசாத்திரங்களுட் காண்க.

“திருவடி யேசிவ மாவது தேரிற்
றிருவடி யேசிவ லோகஞ் சிந்திக்கிற்
றிருவடி யேசெல் கதியது செப்பிற்
றிருவடி யேதஞ்ச முட்டெளி வோர்க்கே“
  
 -திருமந்திரம் - முதற்றந்திரம் - உபதேசம் - 26

     பணிந்தவர்க்கு வரந்தருவான் - (தினைநகரை - பாடி) - நீடுவதாகக்
கருதி உழன்றுதிரியும் மானிடயாக்கை அழியத்தக்கது. இதனைப்
பொருளென்று கரு தாது சென்று அடைந்தால், திருத்தினைநக ருள்ளே
நின்ற சிவக்கொழுந்து அழியா வரத்தைத் தருவார் - என்ற பதிகக்
கருத்தை இவ்வாறு குறிப்பிட்டார். பதிகத்தை நோக்குக. “நீடு பொக்கையிற்
பிறவியைப் பழித்து நீங்கலாமென்று மனத்தினைத்
தெருட்டி.....சிவக்கொழுந்தினைத் திருவடியிணைதான்... வன்றொண்டனூர
னுரத்ததமிழ்.......“ என்ற திருக்கடைக் காப்பினையும் காண்க.

     தினைநகரை வணங்கினர் வண்தமிழ்பாடி - தலத்தைக்
கண்டபோதே, இதனுட் சென்றடைக; அடையிற் பிறவியொழியும் - என்று
இப்பதிகம் பாடினார் - இது தலத்தின் புறத்தே நின்று தலத்தைப் பாடியது.
ஆதலின் நகரை வணங்கி - தமிழ்பாடி - என்றார். சென்று அடை மனனே
என்ற தேவார மகுடத்தினால் உள்ளே சென்று அடையு முன் பாடியது
என்பது பெறப்பட்டது. இவ்வாறே மேல் வரும் தேவாரங்களிலும்
உய்த்துணர்க. தேவாரம் சரித ஆதரவாயினமையும் காண்க.

     தமது மனத்தைத் தெருட்டுவது போல உட்கொண்டு உலகினர்க்கு
வழிகாட்டும் வண்மையுடைமையின் வண்தமிழ் ஆயிற்று. வணங்கினராகிப்
பாடி - முற்றெச்சம்.

     யாழ் ஒலி - முழவொலி - வேதவொலி - கீதவொலி - பொருள்
உள்ள சத்தமாகிய வேத கீத ஒலிகளுடன் அவ்வாறல்லாத யாழும் முழவும்
சேர்த்து ஒலி யென்றதென்னை? எனின்: யாழ் - ‘இன்னிசை வீணையர்
யாழின ரொருபால், இருக்கொடு தோத்திர மியம்பின ரொருபால்' என்ற
திருவாசகத்தின்படி யாழிசையோடு சேர்த்து இறைவன் புகழ் பாடிக்கொண்டு
அன்பர்கள் எங்கும் நிறைவதால் துதியுடன்சேர இதுவும் ஒலி எனப்பெற்றது;
முழவு - ‘ஒருவன் நீடரி காடரங்காக, மாவை நோக்கியோர் மாநட மகிழ
மணிமுழா முழக்கல் வருள்செய்த, தேவதேவ' என்ற நம்பிகள்
(திருப்புன்கூர் 8) தேவாரத்தின்படி இறைவனது அருள் நடனத்திற்கேற்ப
இது முழக்கப்பெறுதலின், இதுவும் செம்பொருள் பொருந்தலின், அதனோடு
சேர்த்து ஒலி எனப்பெற்றது. இன்றும் தில்லைக்கூத்தன் திருமுன்னர்
ஏற்றபெற்றி முழா முழக்கி வழிபாடு நடைபெறும் போது இதனைக் கண்டு
உண்மை உணரத்தக்கதாம். ‘மிகநல்ல வீணைதடவி' (கோளறு பதிகம் 1),
‘வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே' (அப்பர் -
பொதுத் திருவிருத்தம்), ‘மற்றொருகை வீணை யேந்தி' '(திருஞான -
திருநணா - 2), ‘மழலை வீணையர்' (“வலஞ்சுழி - 9), ‘கொடுகொட்டி
வீணை முரல' (நனிபள்ளி - 7) என்பனவாதிய திருவாக்குக்களின்படி
ஐந்தொழில் அருள் நடனத்திலே சிருட்டித் தொழிற்காக இறைவன்
எழுப்பும் பொருள்குறித்த வீணை ஒலியும், அவனிடத்திலிருந்து உண்டாகும்
நாதமும், அவன் சொன்ன நாத உருவமாகிய வேதமும், அதுநோக்கித்
தேவர்கள் நிறைதலின் அரம்பையர் கீதமும் என்றும் இடையறாமல் நிகழும்
தில்லை - என்பது குறிப்பாம்.

“வேத மலிந்தவொலி விழவின்னொலி வீணையொலி
கீத மலிந்துடனே கிளர....“

                  (திருஞான - பஞ்சமம் - பிரமபுரம் 7)

“சொலவல வேதம் சொலவல கீதம்....“
(திருஞான - குறிஞ்சி - திருச்சிராப்பள்ளி 8)

முதலிய திருவாக்குக்கள் காண்க. இப்பாட்டிற் குறித்த கீதஒலி தமிழிலே
பண்ணிசையுடன் பாடும் தோத்திர ஒலி. வரிசை 87-ம் பாட்டும் உரையும்
காண்க.

பதிகம்
(பண் - தக்கேசி)
திருத்தினைநகர்

திருச்சிற்றம்பலம

நீறு தாங்கிய திருநுத லானை நெற்றிக் கண்ணனை நிரைவளை
                                              மடந்தை
கூறு தாங்கிய கொள்கையி னானைக் குற்ற மில்லியைக் கற்றையஞ்
                                              சடைமே
லாறு தாங்கிய வழகனை யமரர்க் கரிய சோதியை வரிவரா லுகளுஞ்
சேறு தாங்கிய திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச்
                                    சென்றடைமனனே. (1)

நீடு பொக்கையிற் பிறவியைப் பழித்து நீங்க லாமென்று மனத்தினைத்
                                              தெருட்டிச்
சேடு லாம்பொழிற் றிருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைத்
                                      திருவடி யிணைதான்
நாடெ லாம்புகழ் நாவலூ ராளி நம்பி வன்றொண்ட னூர னுரைத்த
பாட லாந்தமிழ் பத்திவை வல்லார் முத்தி யாவது பரகதிப் பயனே.                                                   (10)

                       திருச்சிற்றம்பலம்

     பதிகக் குறிப்பு
- மேலே “பணிந்தவர்க்கு வரந்தருவான்“ என்றதன்
கீழ்க் காண்க.

     பதிகப்பாட்டுக் குறிப்பு - (1) ‘திருத்தினை நகருட்
சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே' இது பதிகத்தின் மகுடம்.
சிவக்கொழுந்து - தலத்துச் சுவாமி பெயர் - சிவக்கொழுந்தீசர். எங்கும்
பரந்து நிறைந்த சிவம் இங்கு முளைத்தெழுந்ததால் சிவக்கொழுந்தென்பர்.
(3) ஒப்பிலா முலையுமை - தல அம்மையார் பெயர். (7) தன்னிலாசறு
சித்தமுமின்றித் தவமுயன்று
- தவத்துக்கு அடிப்படை மாசிலாமனம்
என்பது. ‘மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்' என்பது குறள்.
இப்பாட்டிற் குறித்தது அகப்புறச் சமயச் சைவர் தவவேடம். (10) இப்பாட்டுப்
பதிகக் கருத்தைத் தொகுத்துரைப்பதாம். இது மேலே விரிக்கப்பெற்றது.
(திருவடியிணைத்தாள் - என்பதும் பாடம்.) இது தக்கேசிப் பண்ணில்
அமைந்த நம்பிகளது முதற்பதிகம், இப்பதிக யாப்பமைதியிலும்
இசையமைதியிலும் ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள் மிகவும் ஈடுபட்டு
அனுபவித்தமைக்கு அடையாளமாக இதுவரை சொல்லிவந்ததை மாற்றித்,
தில்லை யாத்திரை சொல்லத் தொடங்கும் அடுத்த பாட்டு முதல் இதன்
யாப்பினிசையிலே அமைத்துப் பாடியிருத்தல் காணத்தக்கது.

     தலவிசேடம் - இது நடுநாட்டில் 5-வது தலம். பள்ளச் சாதியில்
அவதரித்த பெரியான் என்ற சிவனடியார் தினைப்புனம்
உழுதுகொண்டிருக்கும்போது இறைவன் அங்குவந்து சோறு கேட்க,
அதன்பொருட்டு அவர் ஊருக்குப்போய்த் திரும்புவதற்குள், தினைவித்தி
முற்றி விளைந்திருக்கச் செய்த காரணத்தால் இத்தலம் இப்பெயர் எய்தியது
என்பது தலசரிதம். சுவாமி, தேவியார் பெயர்கள் மேலே குறிக்கப்பெற்றன.
சுவாமிக்குத் திருந்தீசர் என்றும், அம்மையாருக்கு இளங்கொம்பன்னாள்
என்றும் பெயர் கூறுவர். இதற்கும் நம்பிகள் பதிகம் ஒன்றே உள்ளது. இது
ஆலப்பாக்கம் நிலயத்திலிருந்து தென்மேற்கே மட்சாலையில் 5
நாழிகையிலும், பரங்கிப்பேட்டை நிலயத்திலிருந்து வடமேற்கே 7
நாழிகையிலும் உள்ளது. 91