238. தேம லங்கலணி மாமணி மார்பிற்
     செம்ம லங்கயல்கள் செங்கம லத்திண்
 
 

பூம லங்கவெதிர் பாய்வன மாடே
     புள்ள லம்புதிரை வெள்வளை வாவித்
தாம லங்குக டடம்பணை சூழுந்
     தன்ம ருங்குதொழு வார்கட மும்மை
மாம லங்களற வீடரு டில்லை
     மல்ல லம்பதியி னெல்லை வணங்கி.

92

     (இ-ள்.) தேம்......செம்மல் - தேன்பொருந்திய புதிய தாமரை
மலர்மாலையும் அணியாகிய சிறந்த மணிமாலையும் அணிந்த
மார்பினையுடைய நம்பிகள்; அங்கயல்கள்.....கன்மருங்கு -
திண்மையுடைய செந்தாமரைப்பூக்கள் அசையும்படி அழகிய
கயல்மீன்கள் எதிர்பாய, (அதனாலே) பக்கத்தில் வண்டுகளும்
நீர்ப்பறவைகளும் சத்திக்கும், வாவியினின்றும் அலைகளினால்
வெள்ளிய சங்குகளும் அசையும் மலங்கு மீன்களும் வயல்களிற்
சூழ்தற்கிடமாகிய தனது மருங்கிலே; தொழுவார்கள்......வணங்கி -
போந்து வணங்குபவர்களுடைய மூன்று மலங்களையும்போக்கி
வீட்டினை அருள்கின்ற தில்லை என்னும் செழும் பதியினது
திருவெல்லையை வணங்கிக்கொண்டு அதன்பின்,

     (வி-ரை.) இவையிரண்டு பாட்டும் ஒரு முடிபு பெற்றன.
செம்மல் - எல்லை வணங்கி - புறம்பணை கடந்து - புகுந்தார் -
என முடிக்க.

     தேம் அலங்கல் - தேன் பொருந்திய என்றதனாற் புதிய
எனவும், அந்தணர்க்குரிய திருவடையான மாலையாதலின் தாமரை
எனவும் உரைக்க. மன்னவர்திருவும் வைதிகத்திருவும் பொங்கிய
கோலமுடையராய் முன்னர்க் கூறியதற்கேற்ப அலங்கலும்
மணிமாலையும் அணிந்த மார்பர் என்றார். செம்மல் -
பெருமையுடையவர் - நம்பிகள்.

     அம் கயல்கள் செங்கமலத் திண் பூ மலங்க எதிர்பாய்வன
மாடே - பூமலங்க எதிர் அம் கயல்கள் பாய்வன மாடு என்று
மாற்றுக. திண்ணிய தாமரைப் பூக்கள் அசையும்படி கயல்மீன்கள்
எதிர் எதிர் பாய அந்த இடத்தில். அழகாலும் வடிவாலும்
பிறழ்ச்சியாலும் பெண்களின் கண்களுக்கு உவமிக்கப் பெறுதலால்
அங்கயல்கள் என்றார். எதிர்த்துப் பாய்தல் கயல்மீனின் இயல்பு.
‘மேவி யத்தட மீதெழப் பாய்கயல்' என்று முன்னர்க் கூறியதும்
(வரிசை 70) காண்க. பாய்வன - பாய்தலினாலே - பாய. இதனைச்
சொற்றிரியினும் பொருடிரியா வினைக்குறையாய் வந்த முற்றெச்சம்
என்பர் ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகள். தண்பூ என்பது பாடமாயின்
குளிர்ந்த பூ என்க.

     புள் அலம்பு - வண்டு முதலியனவும் நீர்ப்பறவைகளும்
சத்திக்கும். கயல்பாய்தலால் பூ அசைந்தன. அதனால் மலரில்
இருந்தனவும் பிறவுமாகிய பறவை சத்தித்துப் பறந்தன.
இவ்விரண்டினாலும் அலைகள் பெருகின. திரை - அலை.

     வாவி - தடாகம். இவ்வாறு நிகழ்தற்கிடமாகிய வாவி. இதில்
தாமரை முதலிய நீர்ப்பூக்கள் நிறைந்தன. தலைமைபற்றிக்
கமலத்தைக் கூறினாராயினும் ஏனைச் செங்கழுநீர் முதலியனவும்
கொள்க.

     வெள்வளை - தாம் மலங்குகள் தடம்பணை சூழும் -
அலைகளின் பெருக்கினால் உந்தப்பெற்று வளைகளும் அசையும்
மலங்குகளும் வாவியிலிருந்து அருகில் உள்ள வயல்களிற் சூழ்ந்தன.
வாவித்திரையால் வெள்வளை - மலங்கு - சூழும் என்று மாற்றுக.

“வாளைபாய மலங்கிளங்கயல் வரிவராலுகளுங் கழனி“
- திருப்பனையூர் சீ காமரம் - (4)

என்ற நம்பிகள் தேவாரங் காண்க.

     கயல்கள் நம்பி வரும் திசைநோக்கி எதிர்பாய்ந்தன.
மலங்குகள் நம்பி புகும் திசைகாட்டிப் பணைசூழ்ந்தன என்ற நயமும்
காண்க. வாவித்தாமரை அஃறிணைத் தொடர்புடையன என்று
முனிந்து கயல்கள் நம்பிகளது மார்பிற்றாமரையில் எதிர்பாய என்ற
உட்குறிப்பும் காணத்தக்கது. ஆதாரத் தானங்களாகிய
காரணபங்கயங்களைத் தாக்கி மேலெழுந்து பாயும் - உலகத்தை
எதிர்த்துப் பாயும் - ஞானயோகநாட்டம். ‘மணிவண்டு தும்பிவளை'
என்னும் (புள் - வளை) நாதங்களைக் கண்டுகொண்டுபோய் மேலே
ஆறின்றிப் பாயும் அருங்குளத்தின் தடம்பணையிலே
சூழ்ந்து தங்கும் என்றதொரு ஞானயோகப் பொருளும் இங்குத்
தொனிப்பொருள்வகையாற் கிடைக்குமென்பர் ஸ்ரீ திருவாலங்காட்டுச்
சுவாமிகள். இங்குப் புறத்துக் காணும் இயற்கைக் காட்சி
ஞானநாட்டமுள்ள நம்பிகளுக்கு அகத்தே ஞான யோகக் காட்சியை
நினைவூட்டிற்று என்றலுமாம்.

     தன்மருங்கு - தன் என்றது எல்லை என்றதனைத்
தழுவிநின்றது. தில்லை எல்லையே தன்பக்கம் வந்து தொழுவார்க்கு
மலநீக்கம்செய்து முத்திதரவல்லது என்பதாம். தன் என்பதனைத்
தில்லையைத் தழுவியதாக உரைப்பினு மமையும். தண் மருங்கு
என்பது பாடமாயின் வாவியாலும் வயல்களாலும் குளிர்ந்த
அவ்விடத்தே என்க.

     மும்மை மாமலங்கள் - ஆணவமாதி மூன்று வலிய
பாசங்கள். மும்மலங்கள் அறுதலாவது, கன்ம மலத்திற் சஞ்சிதம்
அத்துவ சுத்தியாலும், உடல் முகந்து கொண்ட பிராரத்தம்
அநுபவத்தாலும், ஆகாமியம் சிவஞானத்தாலும் அழியவும்;
அஃதழியவே, மாயாமலம் ஞாயிற்றின் ஒளிமுன் விளக்குப்போலச்
சிவசத்தியிலடங்கவும்; ஆணவமலம் ஞாயிற்றின்முன் இருள்போலச்
சிவசந்நிதியின் முன்னர் வலியழிந்து கிடக்கவும் பெற்றுக்கெடுதல்.
வீடருள் எல்லை என்க. வீடருள் தில்லை என்று கூட்டி
யுரைத்தலுமாம்.

     எல்லை - தில்லைக்கு நாற்புறமும் பத்து நாழிகையளவில்
அத்திருநகரின் அளவு காட்டும் குறித்த இடம். வெளியிலிருந்து
புகுவோர்க்கு அங்கிருந்து திருநகரம் தொடங்குதலால் அவை
எல்லை எனப் பெறுவன. தில்லைக்குட் புகும் அன்பர்கள்
அவ்வத்திசையில் எல்லையில் வணங்கிப் புகுதல் மரபு.

“............நடமாடியதிரு வெல்லைப்பால், மேவித் தலமுற
மெய்யிற் றொழுதபின்...“
      - திருநா - புரா - 157
 
“ ...........மல்கு தேவரே முதலனைத் துயிர்களும்
                        வணங்கவேண் டினவெல்லாம்
நல்கு தில்லைசூழ் திருவெல்லை பணிந்தனர் ஞானவா
                                     ரமுதுண்டார்“
                            - திருஞான - புரா - 147

     உயிர்கள், இங்கு வருமுன் தமக்கு இருந்த பசுத்தன்மை இங்கு
வந்தவுடன் திரியப் பெற்றுச், சிவத்தின் தன்மை அடையும் என்பதை
‘மும்மையா மலங்களற வீடருள்' என உரைத்தாராதலின், சரித
முன்பகுதி சொல்லிவந்த யாப்பினின்று வேறாய்த் திரிபு என்ற
சொல்லணியில் இப்பாட்டும் உரைக்கப்பெற்றதுபோலும். 92