240.
|
வன்னி
கொன்றைவழை சண்பக மார
மலர்ப்ப லாசொடு செருந்திமந் தாரங் |
|
|
கன்னி
காரங்குர வங்கமழ் புன்னை
கற்பு
பாடலங் கூவிள மோங்கித்
துன்னு சாதிமரு மாலதி மௌவ
றுதைந்த
நந்திகர வீர மிடைந்த
பன்ம லர்ப்புனித நந்தன வனங்கள்
பணிந்துசென்றனன்
மணங்கமழ் தாரான். |
94 |
(இ-ள்.)
வெளிப்படை. வன்னி - கொன்றை முதலிய பூமரங்கள்
ஓங்கியும், சாதி - முதலிய பூங்கொடிகள் நிரம்பியும், நந்தியாவட்டம்
முதலிய பூச்செடிகள் நெருங்கியும் உள்ள தூய நந்தனவனங்களைப்
பணிந்துகொண்டு நம்பிகள் மேற்சென்றார்.
(வி-ரை.)
பன்மலர்ப் புனித நந்தனவனங்கள் - இறைவனது
பூசனைக்கு ஏற்ற பூ - இலை - வேர் - முதலியவற்றைத் தருபவை
நந்தனவனங்களாம். கோட்டுப்பூ - கொடிப்பூ - நிலப்பூ - நீர்ப்பூ -
என மலர்கள் நான்கு வகைப்படும். இவற்றுள் செங்கமலத் திண்பூ -
வாவி - என்று மேலே (வரிசை 238) நீர்ப்பூக்களைக் கூறியதனால்
ஏனை மூன்று வகைகளுமே இங்குக் கூறினார்.
வன்னி - கொன்றை - வழை (சுரபுன்னை) - சண்பகம்
- ஆரம்
(சந்தனம் அல்லது ஆத்தி) - மலர்ப்பலாசு (முருக்கு) - செருந்தி -
கன்னிகாரம் (கோங்கு) - குரவம் (குரா) - கற்பு (கற்பகம்) - பாடலம்
(பாதிரி) - கூவிளம் (வில்வம்) என்ற இவை பூவும் இலையும் தரும்
மரங்கள். சந்தனம் மெய்ப்பூச்சுக்கும் உதவும். கூவிளம் - வன்னி -
ஆரம் இவற்றின் இலைகள் பூசைக்குச் சிறப்பாய் உரியன. செருந்தி -
சிவ பூசைக்குரியதாய் மஞ்சட்பூ மலரும் ஒரு சிறுமரம். அது
வாட்கோரைக்கும் மணித்தக்காளிக்கும் பெயர் என்றும்
கூறுவாருமுண்டு. அவை ஈண்டைக்குப் பொருந்தாமை யறிக.
செருந்திசெம்
பொன்மலர் திருநெல்வே லியுறை செல்வர்தாமே
செருந்தி, காலை யேகன கம்மலர் கின்றசாய்க் காடே |
எனவரும் தேவாரங்கள் காண்க.
குராமலர் இறைவனுக் குகந்ததாம்.
‘குரா மலரோடராமதியம் சடைமேற் கொண்டார்' என்பது
திருத்தாண்டகம். குரா என்பது குரவம் என நின்றது. ஆத்தி
- குரா
முதலியவை நீர்ச்செழிப்புள்ள புறவங்களில் வளர்வன. ஆத்தியின்
மலரும் தளிரும் சிவபூசைக்காவன.
ஆத்தி
மலருஞ் செழுந்தருளிரு முதலா வருகு வளர்புறவிற்
பூத்த மலர்க டாந்தெரிந்து புனிதர் சடிலத் திருமுடிமேற்
சாத்த லாகுந் திருப்பள்ளித் தாமம்...
-
சண்டீசர் புராணம் - 33 |
வேறுவகைப்
பலாசும் உளதாதலின் மலர்ப்பலாசு என்று
பிரித்தோதினார். கற்பு - கற்பகம். (பாரிசாதம்)
என்பர். கற்பு பாடலம்
என்று அடைமொழியாக்கிப் பாதிரியின்வகை என்றும் கூறுவர்.
இக்காலத்து நந்தனவனத் திருப்பணி செய்யும் அன்பர்கள்
இதனைக் கண்டு இவ்வகை மரங்களை வைத்து வளர்த்தல் மிகப்
பயன் தரும் சிவபுண்ணியமாம். கோட்டுப் பூக்களைத் தரும்
நந்தனவனங்களை இந்நாளிற் காணல் அரிதாயினமை வருந்தத்தக்கது.
ஓங்கி - மேலெழுந்து
- உயர வளர்ந்து. இது மரங்களின்
தன்மை. இதனால் மரவகைகளைப் பிரித்து இனிக் கொடிவகைகளைக்
கூறுதல் குறிக்க.
துன்னுசாதி - மருமாலதி - மௌவல் - இவை சாதி - மல்லிகை
- முல்லை என்ற கொடிப் பூவகை. துன்னும் என்றது மேற்கூறிய
மரச்சாதியிலிருந்து பிரிக்கும் அடைமொழியாவதுடன்
இக்கொடிகளினது செறிந்து வளரும் தன்மையும் குறிக்கும்.
துதைந்த நந்தி (நந்தியாவட்டம்)
- கரவீரம் (அலரி) இவை
நிலப்பூச் செடிவகை. துதைந்த என்ற அடைமொழியால் இவ்வினம்
பிரிக்கப்பெற்றது. செடிகளின் தன்மை குறித்தவாறுமாம்.
புனித நந்தன வனங்கள்
- ‘புண்ணியஞ் செய்வார்க்குப்
பூவுண்டு' என்றபடி இறைவன் பூசனைக்கு உரிய இன்றியமையாத
பொருள்களை இவை உதவுபவையாதலானும், இங்குள்ள மரம்
முதலியவை இச்சிவபுண்ணியம் செய்தலே யன்றி ஒரு பாவமும்
செய்யாத உருவமான ஓரறிவுயிர்க ளாதலானும் புனித என்றார்.
பணிந்து சென்றனன்
- மேற்கூறியவாற்றால் அவை
சிவபுண்ணியப் பொருள்களாதலின் அவற்றை வணங்கவேண்டிய
தகுதி காட்டப்பெற்றது. மிகப் புனிதமாகிய உயிர்களே தவ
விசேடத்தால் சிவபூசனைக்குரிய பூமரம், செடி, கொடிகளாக
இருப்பவையாம். இவ்வகைச் சென்ம மெடுக்குமாறு ஒரு முனிவர் வரம்
பெற்ற சரிதமும் சிவரகசியத்துக் கேட்கப்பெறும்.
மணங் கமழ் தாரான்
- வாசனையுடைய திருவடையாள
மாலையாகிய தாமரை மாலை யணிந்த நம்பிகள். இவ்வாறே மேலே
நீர்ப்பூத் தரும் வாவிகளைக் குறிக்கும் போதும் ‘தேமலங்கலணி
மாமணி மார்பிற் செம்மல்' என்று கூறியதும் காண்க.
கற்பபாடலம் - என்பதும் பாடம். 94
|
|
|
|