244.
|
அன்பின்
வந்தெதிர் கொண்டசீ ரடியா
ரவர்க ளோநம்பி யாரூரர் தாமோ |
|
|
முன்பி
றைஞ்சினரியாவரென் றறியா
முறைமை யாலெதிர் வணங்கி மகிழ்ந்து
பின்பு கும்பிடும் விருப்பி னிறைந்து
பெருகு நாவனக ரார்பெரு மானும்
பொன்பி றங்குமணி மாளிகை நீடும்
பொருவி றந்ததிரு வீதி புகுந்தார்.
|
98 |
(இ-ள்.)
அன்பின்.....மகிழ்ந்து - அன்பினாலே வந்து
எதிர்கொண்ட சிறந்த அடியார்கள் தாமோ, அல்லது நம்பியாரூரர்
தாமோ இவர்கள் ஒருவரை ஒருவர் வணங்கும்போது முன்னால்
வணங்கினர் யாவர் என்று அறியப்படாத முறைமையினாலே எதிர்
எதிர் வணங்கி அதன் பயனாக மகிழ்ச்சியடைந்தவராய்;
பின்பு.......நிறைந்து - அதன் பின்னர் ஆனந்தக்கூத்தரைக் கும்பிடும்
விருப்பமிக்கு; பெருகு.....புகுந்தார் - பெருந்தியநாவலூர் நம்பிகளும்
பொன்னால் விளங்கிய அழகிய மாளிகை நீடிய ஒப்பற்ற
திருவீதியினுள்ளே புகுந்தார்.
(வி-ரை.)
இதுவும் முன்பாட்டும் ஒரு முடிபு கொண்டன.
நாவனகரார் பெருமானும் - சதுர்முகங்க ளெனலாயின -
திருவாயில்கள் நான்கில் உத்தரத்திசை வாயில்முன் எய்தி -
முறைமையால் எதிர்வணங்கி - மகிழ்ந்து - நிறைந்து - திருவீதி
புகுந்தார் என்று கூட்டி முடிக்க.
எதிர்கொண்ட சீர்அடியார் - நம்பிகள்
வரவுகேட்டு
அன்பினாலே தூண்டப்பெற்றுத் தில்லையின் அடியவர்கள் அவரை
எதிர்கொண்டு வரவேற்க வடக்குத் திருவாயிலின்முன்பு முன்பே
கூடியிருந்தார்கள் என்பது பெற்றாம்.
முன்பிறைஞ்சினர்
யாவர் என்றறியா முறைமையினால்
எதிர்வணங்கி - அடியார்களும் நம்பிகளும் எதிர்காட்சி பெற்றவுடன்
ஒரே காலத்தில் ஒருவரை ஒருவர் வணங்கினார்கள். இவர்களுள்
யாவர் முன்னே வணங்கினார்கள் என்பதறியப்படாததாம். அறியா
-
அறியப்படாத. செயப்பாட்டு வினைப் பொருளில் வந்தது. முறைமை
- இதுவே அடியவர்களைக் கண்டபோது வணங்கும் முறை என்பதாம்.
பின்பு கும்பிடும் விருப்பில்
- இறைவனை என்பது
வருவித்துரைக்க. பின்பு - அடியவர் வணக்கம் முன்பும், ஆண்டவன்
வணக்கம் பின்பும் நிகழும் முறைமையும் காண்க. இக்கருத்தின்
விரிவைத் திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் 1023-ம் பாட்டிலே
“விமலரையும் உடன்கண்ட விருப்பும் பொங்க“ என்ற இடத்துக்
காண்க.
பொன்பிறங்கு மணிமாளிகை
நீடும் - தில்லைவாழந்தணரின்
முதல்வராகிய நடராசர் எழுந்தருளிய பொன்மாளிகையும், அவரோ
டொத்தே வாழுந் தன்மையாளராகிய ஏனைத்
தில்லைவாழந்தணர்களின் அழகிய மாளிகைகளும் என்றும் நீடியுள்ள,
“செல்வ
நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற
செல்வர் வாழ்தில்லை.....“
-திருஞான
- குறிஞ்சி - கோயில் - 5 |
முதலிய தேவாராதி அருட்பாக்கள்
பெற்ற மாளிகைகளாதலின்
பொன்பிறங்கு மணிமாளிகை என்றார்.
பொருவிறந்த
திருவீதி புகுந்தார் - ஒப்பற்ற திருவீதி.
நம்பிகள் உத்தரத் திருவாயிலின் வழியே போந்து திருவீதியிற்
புகுந்தமையே இச்சரிதத்திற் சிறந்ததொரு தனிச் செய்தியாக அதுவே
ஒரு சிவதல யாத்திரையின் பயன் தரும் சிறப்பு நோக்கி ஆசிரியர்
எடுத்துக்கூறினார். இது அத்திருவீதியின்சிறப்பியல்பாம்.
திருஞானசம்பந்த சுவாமிகள் தில்லைக்கெழுந்தருளியபோது
இத்திருவீதிகளைத் தொழுது, பின்னை, அவற்றில் தங்கி இருக்க
அஞ்சித், திருவேட்களத்திலே எழுந்தருளியிருந்தனர் என்பது சரிதம்.
மாதவங்கள் செய்யும் பலனை இத்திருவீதிகள் தருவன.
“.............................மாதவங்கள்
நல்குந் திருவீதி நான்குந் தொழுதங்கண்
அல்குந் திறமஞ்சு வார்சண்பை யாண்டகையார்“
-
திருஞான - புரா - 165 |
அப்பர்
சுவாமிகள் இத்திருவீதிகளிலே கைகளாற்றிருப்பணி
செய்ததோடு, தமது தூயபொன் மேனியினால் அவற்றிற் புரண்டு
வலம்வந்து விடைகொண்டு சென்றார்.
“பொய்ப்பிறவிப்
பிணியோட்டுந் திருவீதி புரண்டுவலங் கொண்டு போந்தே“
திருநா
- புரா - 179 |
எனவே பொருவிறந்த திருவீதி
என்று குறித்ததுடன் வரும் பாட்டில்
அதன் காரணமும் இயல்பும் ஆசிரியர் விரித்துக் கூறுவாராயினர்.
பொருவிகந்த திருவாயில்
- என்பதும் பாடம். 98
|
|
|
|