245. அங்கண் மாமறை முழங்கு மருங்கே
     யாட ரம்பைய ரரங்கு முழங்கு
 
  மங்குல் வானின்மிசை யைந்து முழங்கும்
     வாச மாலைகளின் வண்டு முழங்கும்
பொங்கு மன்பருவி கண்பொழி தொண்டர்
     போற்றி சைக்குமொலி யெங்கு முழங்குந்
திங்க டங்குசடை கங்கை முழங்குந்
     தேவ தேவர்புரி யுந்திரு வீதி.
99

     (இ-ள்.) திங்கள்......திருவீதி - பிறைச்சந்திரன்
தங்குதற்கிடமாகிய சடையிலே கங்கை முழங்குகின்ற தேவதேவராகிய
நடராசர் விரும்பி எழுந்தருளும் அத்திருவீதியின்; அங்கண்மாமறை
முழங்கும் - இடமெங்கும் நான்மறை முழங்குவன; மருங்கே......ஐந்தும்
முழங்கும் - அவற்றின் பக்கத்தே அரம்பையர் ஆடல் முழக்கம்
நிகழும்; மேகஞ் சூழ்ந்த ஆகாயத்தில் ஐந்து தேவதுந்துபிகளும்
முழங்குவன; வாச.......முழங்கும் - மணம் பொருந்திய புதிய
பூமாலைகளிலே வண்டுகளின் பாடல்கள் முழங்குவன;
பொங்கும்.......எங்கும் முழங்கும் - அன்பினாற் பொங்கி வழியும்
கண்ணீரையுடைய அடியார்கள் போற்றித் துதிக்கும் ஒலி எங்கேயும்
முழக்கம் செய்வன.

     (வி-ரை.) திருவீதி - அங்கண் - மறை முழங்கும் - மருங்கே
அரங்கு முழங்கும் - ஐந்து முழங்கும் - வண்டு முழங்கும் - ஒலி
எங்கு முழங்கும் - என்று கூட்டி முடிக்க. மேலே வரிசை
237-பாட்டில் யாழொலி - முழவின் நாதவொலி - வேதவொலி -
அரம்பையர் கீதவொலி அறாத்தில்லை என்றதனை இங்கு விரித்துக்
கூறினார்.

     மருங்கே
- பூசுரர்களோடு சுரர்களும் பக்கம்பக்கமாக
விரவியிருத்தலால் மாமறை முழங்கும் மருங்கே அரம்பையர்
அரங்கும் வான்மிசை ஐந்தும் உடன் கூறினார்.

     வாசமாலைகள்
- இறைவனுக்காக அடியவர்கள் தொடுத்த
மாலைகள்.

     பொங்கும் அன்பு அருவி கண்பொழி தொண்டர்
- அன்பு
பொங்கும் கண்பொழி அருவித்தொண்டர் என்க. அருவிபோலக்
கண்களிலிருந்து நீர் பெருகுதல் அன்பினது இலக்கணங்களில் ஒன்று.
அதுவே மனத்தினுள் இருக்கும் காணப்படாத அன்பைக் கருதல்
அளவையினாலே காட்டும் அடையாளம் என்றருளினர்
திருவள்ளுவதேவர். ‘அன்பிற்குமுண்டோ அடைக்குந் தாழ்' என்பது
குறள்.

“மார்பாரப் பொழி கண்ணீர் மழைவாருந் திருவடிவும்“
“நைந்துருகிப் பாய்வது போலன்பு நீர்பொழி கண்ணும்“

என்பனவாதி திருவாக்குக்களால் ஆசிரியர் தொண்டர் திருவேடத்தின்
சிறப்பியல்பாக இதனை உணர்த்துமாறு காண்க. திருவேடத்தின்
இலக்கணத்திற்கு இவற்றையே உதாரணமாக எமது மாதவச் சிவஞான
முனிவர் சிவஞான போதச் சிற்றுரை 12-ம் சூத்திர உரையில்,
எடுத்துக் காட்டியவாறும் காண்க.

     போற்றிசைக்கும் ஒலி
- முன்னே கூறிய
முழக்கங்களிலிருந்து பிரித்துக் காணும்பொருட்டு ஒலி என்று கூறினார்.

     எங்கும் முழங்கும் - முன் கூறிய முழக்கங்கள் அத்திரு
வீதியிலே ஓரோர் பகுதியிலே நிகழ்வனவாகவும் அன்பர் போற்று
மொலி எங்கும் முழங்கும் என்றார். அன்பர்கள் அத்திருவீதிகளிலே
வலம் வந்து துதித்து நிறைந்துள்ளார்கள் என்பதாம். இது
இன்றைக்கும் கண்டு களிப்பதோர் காட்சி.

     கங்கை முழங்கும் - கங்கை தனது ஆயிரமாமுகத்தினொடு
உலகில் வீழாமல் சடைக்குள்ளேயே அடங்கி அங்கு முழங்கி
நிற்பதாம். இங்கு முழங்கும் என்னும் பெயரெச்சம் தேவ தேவர்
என்னும் ஏதுப்பெயர் கொண்டது. “மணியிரத மூர்ந்த மழவிளங்
களிறு“ என்றதிற்போல. இப்பாட்டில் மேலே வரும் ஏனைய
முழங்கும் - என்பவை வினைமுற்றுக்கள். இவ்வாறு ஒரு சொல்லைப்
பல முறைகளில் வழங்குவது ஆசிரியரின் அழகிய சொல்லணியாகிய
சிறப்பியல்புகளில் ஒன்றாம். எறிபத்த நாயனார் புராணம் 3-வது
பாட்டும் பிறவும் காண்க.1

     புரியும் - விரும்பி எழுந்தருளும். நடராசர்
தேரில்எழுந்தருளும் சிறப்புடையது.



1 சேக்கிழார் - 121, 122, 123 பக்கங்களைப் பார்க்க.