246. போக நீடுநிதி மன்னவன் மன்னும்
      புரங்க ளொப்பன வரம்பில வோங்கி
 
  மாக முன்பருகு கின்றன போலு
     மாளி கைக்குல மிடைந்த பதாகை

யோக சிந்தைமறை யோர்கள் வளர்க்கு
     மோம தூமமுயர் வானி லடுப்ப
மேக பந்திகளின் மீதிடை யெங்கு
     மின்னு டங்குவன வென்ன விளங்கும்.

100

     (இ-ள்.) போகம்.......பதாகை - எவ்வகைப் போகங்களையும்
கொண்டு உள்ள குபேர பட்டினங்களைப் போன்று தனித்தனி
விளங்கும் அளவில்லாதனவாய் மிக உயர்ந்து மேக மண்டலத்தைத்
தம்முள் அடக்குகின்றனபோல் உள்ள மாளிகைக் கூட்டங்களில்
மேலே கட்டப்பெற்ற செறிந்த கூட்டமாகிய கொடிகள்; யோக
சிந்தை......அடுப்ப - அந்த மாளிகைகளில் உறையும் மறையவர்கள்
யோகசிந்தையால் வளர்க்கின்ற ஓமப்புகை ஆகாயத்தை
அளாவிச்செல்ல; மேகபந்தி.......விளங்கும் - மேகக்கூட்டங்களின்
இடையிலே எங்கும் மின்னற் கொடிகள்போல விளங்குவன.

     (வி-ரை.) மாளிகைக் குலம் - ஒவ்வொரு மாளிகையும்
தனித்தனி ஒவ்வொரு அளகாபுரியைப்போல் விளங்கின. “இதனைச்
செல்வ நெடு மாட“ என்ற இத்தலத் தேவாரத்தே திருஞானசம்பந்த
சுவாமிகள் ஏழு செல்வப்பதம் அமைத்துச், ‘செல்வம் உயர்கின்ற'
என்று ஆசிபுரிந்ததன் பயனாக இன்றைக்கும் இது காணத்தக்கதாகும்.
ஆசிரியரும் இங்கு விளங்கும் என்றதும் காண்க.

     மாகம் முன் பருகுகின்றனபோலும் - மாகத்தைச்சிறிதாக்கித்
தன்னுள் அடக்கிக் காட்டும் அளவு உயர்ந்து போதலின்
பருகுகின்றனபோலும் என்றார். “தவளந்நெடு மாடம்.......விண்டாங்குவ
போலும்“ என்ற தேவாரமும் காண்க. மாகம் - வானம்.

     யோக சிந்தை - யோகம்
- கூடுதல்: இறைவனைக் கூடும்
வழியில் செல்லும் மனம். மறையவர் - அந்த மனத்தோடு இறைவனை
முன்னாகச் செய்யும் சிவவேள்வி வளர்ப்பவர்கள். ‘கற்றாங் கெரி
யோம்பி' என்றபடி, யோக சிந்தை மறையோராதலின் எரி வளர்ப்பார்
என்பது குறிப்பாம். தில்லை - தகராகாயத்தலமும் இரு தயத்தலமும்
ஆதலின் இறைவனைத் தகரோபாசனையின் வழியே சிந்தையில்
வைத்துக் கூட்டியவர்கள்.

     ஓம தூமம் - வானில் அடுப்ப........மேக பந்திகளின் -
ஓமப்புகை வானிற் சேர்தலால் உளதாகும் மேகக்
கூட்டங்களினிடையே. அடுப்ப - பொருந்த. ஓமப்புகை வானிற்கு
அடுப்பன - பொருந்துவன. [பிற புகைகள் (இயந்திரங்களின் புகை)
அவ்வாறு அடுக்காதன] ஓமப்புகை ஆகிய மேகம் - புகையின்
விளைவாம் மேகம் - என இருபொருளும் கொள்க. ஓமம்
மேகத்துக்குக் காரணமாதல் குறித்தவாறுமாம்.

“மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்
விண்ணிற் புயல் காட்டும் வீழி மிழலையே“
                     - திருஞா - தேவா - குறிஞ்சி. (5)
 
“மங்குறோய் மாடச் சாலை மருங்கிறை யொதுங்கு மஞ்சும்
அங்கவை பொழிந்த நீரும் ஆகுதிப் புகைப்பா னாறும்“

                             - குங்கிலிய - புரா - 4.

என்பனவாதி திருவாக்குக்களின் உள்ளுறைகளையும் நோக்குக.

     மீதிடை எங்கும் மின் நுடங்குவன என்ன - மேலே இடை
எங்கும் மின்னல்கள் அசைவன போல. மேகங்களினிடையில்
மின்னல்கள் அசைதல் இயல்பாம். 100