248. எண்ணில் பேருல கனைத்தினு முள்ள
     வெல்லை யில்லழகு சொல்லிய வெல்லா
 
  மண்ணி லிப்பதியில் வந்தன வென்ன
     மங்க லம்பொலி வளத்தன வாகிப்
புண்ணி யப்புனித வன்பர்கண் முன்பு
     புகழ்ந்து பாடல்புரி பொற்பின் விளங்கும்
அண்ண லாடுதிரு வம்பலஞ் சூழ்ந்த
     வம்பொன் வீதியினை நம்பி வணங்கி,
102

     (இ-ள்.) எண்ணில்......ஆகி - எண்ணில்லாத பெரிய உலகங்கள்
எல்லாவற்றினும் உள்ள எல்லையில்லாத அழகுகள் என்று
சொல்லப்பெற்றவை யெல்லாம் ஒருங்கே திரண்டு பூவுலகத்தே
இத்தலத்திலே வந்து கூடின என்று சொல்லும்
படி மங்கலம்
பொருந்தும் வளங்களையுடையனவாய்; புண்ணிய.......வணங்கி -
புண்ணியப் புனித அன்பர்கள் முன்னர்ப் புகழ்ந்து பாடும் அழகிலே
விளங்கி, இறைவன் ஆடுகின்ற திருவம்பலத்தைச் சூழ்ந்திருக்கும்
உள்வீதியினை நம்பிகள் வணங்கிக் கொண்டுபோய்,

     இவ்விரண்டு பாட்டுக்களும் ஒரு முடிபுபெற்றன. மங்கலம்
பொலிவளத்தனவாகி - பொற்பின்விளங்கும் - சூழ்ந்த வீதியினை -
வணங்கி; தேவர் நெருங்கி - முனிவர் துன்னி அயல்நிற்ப - அன்பர்
- கணநாதர் - புகும் வாயிலிறைஞ்சிக் குவித்த கை தலை மேற்
கொடு - நம்பி - புக்கார் என்று கூட்டி முடித்துக்கொள்க.

     (வி-ரை.) இப்பாட்டிற் கூறியது அம்பலஞ் சூழ்ந்த அகவீதியின்
நிகழ்ச்சியாம்.

     பேருலகு அனைத்தினும் - மேலேழும் கீழேழுமாகிய
உலகுகள். எண்ணில்லாத அண்டங்கள் என்றலுமாம். கந்தபுராணம்
அண்டகோசப்படலம் முதலியவற்றுட் காண்க. இறைவனைத்
தரிசிக்கவும் அவிகொள்ளவும் எல்லாத் தேவர்களும் வந்தனராதலின்
அவ்வவர் உலகங்களின் அழகுகள் எல்லாம் வந்தன என்ற குறிப்பு.

     வளத்தன - மேற்பாட்டிற் சிறப்பாய்க் குறித்துச்
சொல்லப்பெற்றவையேயன்றி எங்கும் உள்ள எல்லா அழகுகளும்
கூடிய வளங்களை யுடையன. எல்லாம் - எல்லாமும். முற்றும்மை
தொக்கது.

     புகழ்ந்து பாடல்புரி பொற்பு - இது மேலே சொல்லிய
ஏனை உலகெங்கும் இல்லாத சிறப்பியல்பாதலின் அழகு சொல்லிய
எல்லாமும் என்ற முற்றும்மையில் அடங்காது. ஆதலின் பொற்பு
எனத் தில்லைக்கே உரிய சிறப்பியல்பாய் வேறு பிரித்துக் கூறினார்.
மேலே வரிசை 245-ல் “கொண்ட போற்றிசைக்கு மொலி“ என்றது
தேவதேவர் எழுந்தருளும் தேர்வீதியின் நிகழ்ச்சி.

     புண்ணியப் புனித அன்பர் - புண்ணியமும் புனிதமும்
அன்பும் ஒருங்கே நிறையப்பெற்றவர்கள். புண்ணியர், புனிதர் அன்பர்
எனவும், புண்ணிய அன்பர், புனித அன்பர் எனவும், புண்ணியப்
புனித அன்பர் எனவும் உரிய பலவகையிற் பிரித்துரைத்தலுமாம்.

     முன்பு - அன்பர்களும், சிவகணநாதர்களும், தேவர், முனிவர்
முதலிய எல்லாருக்கும் முன்னே நிற்கவும் எல்லாக் காலத்தும்
சேவிக்கவும் உரிமையுடையார் என்பதும் ஆம். வரிசை 17, 18, 20
பாட்டுக்களையும் ‘தொண்டர்கள்பின் உம்பர் குழாம் மல்கு திருக்
காளத்தி மாமலை' (திருநா - புரா - 343), ‘வாழ்ந்திமையோர்
குழாநெருங்கு மணி நீள்வாயில் மருங்கிறைஞ்சி யுட்புகுந்து'
(திருஞான - புரா - 1022) முதலிய திருப்பாட்டுக்களையும் காண்க.
முன்பு - என்பதன் விரிவை அடுத்த பாட்டிற் கூறினார். முன்பு -
முற்காலத்து என்று உரைப்பது மொன்று.

     இத் திருவீதி அம்பலத்தை அடுத்துச் சூழ்ந்ததாதலின் இதனைக்
கண்டவுடனே இதிற் போந்து பாடிய பேரன்பர்களின் நினைவு
உண்டாவது இயல்பாம். திருமூலர் - மாணிக்க வாசகர் - திருஞான
சம்பந்தர் - திருநாவுக்கரசர் - ஐயடிகள் காடவர்கோன் - முதலிய
நாயன்மார்களை இங்கு நினைவூட்டியவாறு. வேதம் - உபநிடதங்கள்
- சிவரகசியம் - திருமூலர் திருமந்திரம் - திருவாசகம் - தேவாரம்
முதலிய எல்லாம் இதனைப் பாடுகின்ற தன்மை
நினைவூட்டப்பெற்றதாம். 102