249. மால யன்சத மகன்பெருந் தேவர்
     மற்று முள்ளவர்கண் முற்று நெருங்கிச்
 
  சீல மாமுனிவர் சென்றுமுன் றுன்னித்
     திருப்பி ரம்பினடி கொண்டு திளைத்துக்
கால நேர்படுதல் பார்த்தய னிற்பக்
     காத லன்பர்கண நாதர் புகும்பொற்
கோல நீடுதிரு வாயி லிறைஞ்சிக்
     குவித்த செங்கைதலை மேற்கொண்டு
                                 புக்கார்.
103

     (இ-ள்.) மாலயன்.....நெருங்கி - விட்டுணு, பிரமன், இந்திரன்
ஆகிய பெருந்தேவர்களும், மற்றுமுள்ள தேவர்களும் முழுதும்
நெருங்கி; சீல.......துன்னி - தவசீலமுடைய பெருமுனிவர்கள் முன்னே
சென்று சேர்ந்து; திருப்பிரம்பின்......நிற்ப - உரிய காலமல்லாமையால்
உள்ளே செல்லமாட்டாதவர்களாய்க் காவல் நாயகராகிய நந்திதேவரது
ஆணைப்பிரம்பினது அடி மேலேபட அதனிலே திளைத்தவர்களாய்
உரிய காலத்தை எதிர்ப்பார்த்துக்கொண்டு பக்கங்களிலே ஒதுங்கி
நிற்க; காதல்.......வாயில் - காதலினால் மிகுந்த அன்பர்களும்
கணநாதர்களும் தடையின்றி உள்ளேசெல்லும் அழகிய திருவாயிலை;
இறைஞ்சி......புக்கார் - வணங்கி உச்சியிற் குவித்த கைகளோடும்
அதன் உள்ளே புகுந்தனர்.


     (வி-ரை.) மேற் பாட்டிலே முன்பு என்றதை இவ்வாறு என
விரித்து இப்பாட்டிற் கூறுகின்றார்.

     சதமகன் - (சதம் - நூறு : மகம் - யாகம்) இந்திரன் - நூறு
யாகங்கள் செய்து அப்பதவி பெறுதலாற் போந்த பெயர். ‘நூறுபல்
வேள்வி முற்றிய' (திருமுருகாற்றுப்படை).

     பெருந் தேவர் மற்றும் உள்ளவர்கள்
- மாலும் அயனும்
சதமகனும் இவர் போன்ற அக்கினி - இயமன் - முதலிய பெருந்
தேவர்களும் இன்னும் உள்ள இயக்கர் முதலிய தேவக்
கூட்டத்தார்களும் - என உம்மை விரித்துரைத்துக் கொள்க.

     முற்றும் - எல்லாரும். மற்றும் உள்ளவர்கள் என்பது தேவக்
கூட்டங்களின் வகைகளையும், முற்றும் என்பது அவர்களில் ஒருவரும்
ஒழியாமல் யாவரும் என்ற தொகையையும் காட்டியது.

     சீலமா முனிவர் சென்று முன் துன்னி
- தேவர்
கூட்டங்களைக் கடந்து முன்னாற் சென்று நிற்கத் தக்கார் மனன
சீலம் பொருந்தும் பெரு முனிவர்களாவர் என்பதாம். இவர்கள்
முன்னும், இவ்வாறு இல்லாது தேவபோகங்களை அனுபவிக்கும்
தேவர்கள் பின்னும், இருக்கத்தக்க முறையைக் குறித்தபடி.

     திருப்பிரம்பினடி கொண்டு திளைத்து - இறைவன்
முன்னர்த் தரிசிக்க வருவோர்களைக் காலமும் முறைமையும் பார்த்துச்
செல்லவிடுப்பதும், விடாது தடுப்பதும், திருநந்தி தேவர் ஆணை;
அவர் தமது கையிற்றாங்கிய பிரம்பினாலே முறைசெய்து ஆணை
நடாத்துவர்; அப்போது அப்பிரம்பின் அடிதாக்கும் - என்பது வரிசை
- 20, 21 பாட்டுக்களிற் காண்க. அடிகொண்டு என்றதனாற்
றடுக்கப்பட்டு நின்றார் என்பது குறிப்பு. திளைத்தல் -
பிரம்பினடியினால் வருந்தாது இது எம்மேற் படும்பேறு கிடைத்ததே
என்று ஆனந்தித்து அனுபவித்தல். “கோவே கூவிப் பணிகொள்ளா
தொறுத்தா லொன்றும் போதுமே“ என்ற திருவாசகக் கருத்தும்
காண்க. இங்குப் போந்த கருத்தை “பங்கயந் துளவ நாரும்
வேத்திரப் படைபொ றுத்த, செங்கையெம் பெருமானந்தி“ என்று
காஞ்சிப்புராணமுடையார் அழகுபெற எடுத்துக் கூறியிருத்தல் காண்க. திளைத்து - வருந்தி என்று பொருளுரைப்பாருமுளர். அது
பொருந்தாமை யறிக.

     கால நேர்படுதல் பார்த்து - தரிசிக்க உரிய காலத்தை
எதிர்பார்த்து.

     அயல் நிற்ப - அன்பர் - கணநாதர் புகும் வாயில் - தேவர்
முனிவர் முதலியோர் திருவாயிலிலே காலம்பார்த்துப் புறத்தே
நிற்கவும், அன்பர்களும் கணநாதர்களும் தடையின்றி உள்ளே
புகுவதாகிய திருவாயில். ஏனையோர் தரிசித்து வரம்பெற்றுச்
செல்வோராகவும், இவர்கள் ஆசையற்றுப் பணிசெய்து
கிடப்போராகவும் உள்ளார். ஆதலின் இவர்கள் எக்காலத்தும்
நீங்காது இறைவனிடத்திலே இருப்பவர் என்பது. திருவாயிலின்
சிறப்பைச் சொல்லும் முகத்தானே அடியவர்களின் ஏற்றமும் சிறப்பும்
கூறிய உள்ளுறைக் குறிப்பை உன்னித் திளைக்க.

“.......அம்பலத் தானைப் பழித்துமும்மைத்
தீயின தாற்றல் சிரங்கண் ணிழந்து திசைதிசைதாம்
போயின வெல்லையெல் லாம்புக்கு நாடுவன் பொன்னினையே“
                                             (234)

     என்ற திருக்கோவைப் பாட்டின் சுவையையும் இங்கு
வைத்துக்காண்க. (103)