250. பெருமதில் சிறந்த செம்பொன்மா ளிகைமின்
     பிறங்குபே ரம்பல மேரு
 
  வருமுறை வலங்கொண் டிறைஞ்சிய பின்னர்
     வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார்

அருமறை முதலி னடுவினிற் கடையி
     லன்பர்தஞ் சிந்தையி லலர்ந்த
திருவள ரொளிசூழ் திருச்சிற்றம் பலமுன்
     றிருவணுக் கன்றிரு வாயில்.

104

     (இ-ள்.) பெருமதில்.......பின்னர் - பெரியமதில் சூழ்ந்த
செம்பொன் மாளிகையையும் பேரம்பல மேருவையும் விதிப்படி
வலஞ்செய்து வணங்கியபின்பு; வணங்கிய.......வாயில் -
மகிழ்ச்சியோடும் மேலும் சென்று வணங்கும்பொருட்டு, நம்பிகள்,
வேதத்தின் முதல் இடை கடைகளிலேயும், அன்பர் சிந்தைகளிலேயும்,
விளங்குகின்ற திருவளர் ஒளிசூழ்ந்த திருச்சிற்றம்பலத்தின் முன்னே
உள்ள திருவணுக்கன் திருவாயில் புகுந்தனர்.

     (வி-ரை.) செம்பொன் மாளிகை - பொன்னம்பலம் -
திருச்சிற்றம்பலம். தேவர்களும் இரணியவருமரும் முதலாகப் பலரும்
இந்நாள் வரைப் பலப் பல காலங்களிலே திருச்சிற்றம்பல
மாளிகையைப் பொன் வேய்ந்தனர் என்பது சரிதங்களாலறியப்படும்.

“முழுதும் வானுல கத்துள தேவர்கள்
தொழுதும் போற்றியும் தூயசெம் பொன்னினால்
எழுதி மேய்ந்தசிற் றம்பலக் கூத்தனை
இழுதை யேன்மறந் தெங்ஙன முய்வனோ“

                        - கோயில் - குறுந் - 8

என்பது அப்பர் சுவாமிகள் திருவாக்கு.

     மாளிகை
- திருமாளிகைப்பத்தி என்றுரைப்பின், திருமதிலுடன்
சேர்ந்த என்க.

     மின்பிறங்கு பேரம்பல மேரு
- சிவவொளி விளங்கும்
பேரம்பலம் ஆகிய மேரு.

     வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார் - வணங்கிய -
வணங்கும்பொருட்டு. செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்;
புகுந்தர் என்ற வினைகொண்டு முடிந்தது. வணங்கும்பொருட்டு
மகிழ்ச்சியோடும் புகுந்தனர். வணங்கிய - பெயரெச்சமாக்கி,
பேரம்பலத்தை இறைஞ்சியதால் உண்டாகிய மகிழ்ச்சியோடும்
என்றுரைத்தலுமாம்.

     மின்பிறங்கு பேரம்பல மேரு - சிவவெளி விளங்கும் மேரு
ஆகிய பேரம்பலம். செம்பொன் மாளிகையாகி ஒளிவிளங்கும்
பேரம்பலம் என்று உரைத்தலுமாம். “அம்பலம் சொம்பொற் கோயில்
கொண்டாட வல்லானே“ (திருவிசைப்பா.) “சேயவன் திருப்பேரம்பலம்
செய்ய, தூயபொன்னணி சோழன்..“ (வரிசை - 8) என்று பாராட்டியபடி
அநபாயச் சோழர் பேரம்பலத்திற்குப் பொன் வேய்ந்தாராதலின் அதை
நினைவூட்டும் வகையிலே இவ்வாறு கூறுத லியல்பேயாம். மேரு
பொன் மலையெனப் பெறுவதுங் காண்க. மேரு - பேரம்பல மென்கிற
மேரு - என்பர் இராமநாதச் செட்டியார்.

“இடைபிங் கலையிம வானோ டிலங்கை, நடுநின்ற மேரு
                                   நடுவாஞ் சுழுனை
கடவுந் திலைவனங் கைகண்ட மூலம், படர்வொன்றி யென்றும்
                                     பரமாம்பரமே“
 
“மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை, கூரு மிமவா னிலங்கைக்
                                         குறியுறுஞ்
சாருந் திலைவனத் தண்மாம லயத்தூ, டேறுஞ் சுழுனை
                                 யிவைசிவ பூமியே“
 
“பூதல மேருப் புறத்தான தெக்கணம், ஓது மிடைபிங்
                             கலையொண் சுழுனையாம்
பாதி மதியோன் பயிறிரு வம்பலம், ஏதமில் பூதாண்டத்
                                  தெல்லையி னீறே“

என்ற திருமந்திரப் பொருள்களைத் தக்கார்வாய்க் கேட்டு
இங்குவைத்துக் கண்டு கொள்க. இலங்கை - இடைகலை; இமயம் -
பிங்கலை; தில்லை - சுழுமுனை - (மேரு - நடுநாடி) என்பர்.

“வலங்கைமான் மழுவோன் போற்றும் வாளர வரசை நோக்கி
யலைந்திடும் பிண்ட மண்ட மவைசம மாதலாலே
யிலங்கைநேரிடைபோ மற்றை யிலங்குபிங் கலையா நாடி
நலங்கிளரிமய நேர்போ நடுவுபோஞ் சுழுனை நாடி“ (70)

“நாடரு நடுவி னாடி நலங்கிளர் தில்லை நேர்போய்க்
கூடுமங் கதனின் மூலக் குறியுள ததற்குத் தென்னர்
மாடுறு மறைகள் காணா மன்னுமம் பலமொன் றுண்டங்
காடுது மென்று மென்றா னென்னையா ளுடைய வையன்“ (71)
                               - பதஞ்சலிச் சருக்கம்

என்ற கோயிற் புராணமும் காண்க.

     மேரு - வலங்கொண்டு இறைஞ்சிய பின்னர் - திருவளர்
ஒளிசூழ் திருச்சிற்றம்பலம்முன் அணுக்கன் திருவாயில் புகுந்தார்
என்பதாம். சுழுமுனையைக் கடந்து அதன்மேல் விளங்குவது சிவஞான
ஒளியாதலின் மேருவலங் கொண்டு சிற்றம்பல வாயில் புகுந்தார் என்று
கூறியவாறு.

     இப்பாட்டிலே மின்பிறங்கு பேரம்பலம் - திருவளர் ஒளிசூழ்
திருச்சிற்றம்பலம் என்று கூறப்பெற்ற இரண்டு அம்பலங்களும் இன்றும்
அன்பர்கள் சென்று தரிசிக்க விளங்குகின்றன. பேரம்பலம் -
சோமஸ்கந்தர் முதலிய உற்சவ நாயகர்கள் எப்போதும்
எழுந்தருளியிருக்கும் மன்றம். சிற்றம்பலம் - கூத்துடையானாகிய
சபாநாயகர் எழுந்தருளியிருக்கும் பொன்மன்றம்; இது திருமாளிகைப்
பத்தி திருமதில்களாற் சூழப்பெற்றிருக்கும். இவை யிரண்டும்
திருமூலட்டானநாத ராலயத்திற்குத் தெற்கே உள்ளன.

     அருமறை முதலில் நடுவினிற் கடையில் அன்பர்தஞ் சிந்தையில்
அலர்ந்த - இதனை (1) மறைமுதல், நடு, கடைகளில் அலர்ந்த -
எனவும், (2) அன்பர் சிந்தையில் அலர்ந்த எனவும் பிரித்துத்,
திருச்சிற்றம்பலம் அலர்ந்த இரண்டிடங்களையும் கூறியதாகக் கொள்க.
“அருமறைச் சிரத்தின் மேலாஞ் சிற்பர வியோமமாகும்
திருச்சிற்றம்பலம்“ (தில்லைவாழந்தணர் புராணம் - 2.)

     மறையின் முதல் - நடு - கடைகளில் அலர்ந்த -
திருச்சிற்றம்பலம் பிரணவ உருவமாய் விளங்குதலாலும், அது சமட்டி -
சேர்ந்தநிலை - ஓம், வியட்டி - பிரிந்தநிலை - அ - உ - ம் என்ற
இரண்டு நிலையிலும் வேதங்களில் முதல் நடு முடிவுகளில் அமைந்து
உச்சரிக்கப்படுதலாலும் இவ்வாறு கூறினார்.

     திருச்சிற்றம்பலம் - மெய்ஞ்ஞானமேயான அம்பலம்.
பிரணவம், ஈசன் மேவருபீடமாய் எல்லா எழுத்துக்கும் மறைகட்கும்
முதலாயுள்ளது. அம்பலம் - சித்து; பிரணவம் - (அதனை நோக்கச்)
சடம்; அம்பலம் - பிரணவத்துக்கு உயிராய் அதனை இயக்குவது;
பிரணவம
- அதனால் இயங்குவது. ஆதலின் சிவனருள்
பெறாதோரால் உண்மைப்பொரு ளறிதற்கரிய வேதங்களின் முதல் -
இடை - கடைகளில் திருச்சிற்றம்பலத்தைத் தனக்கு
உட்பொருளாகவுடைய பிரணவம் அமைந்திருக்கின்றது.
ஞானப்புகலுடைய அன்பர் உள்ளப் புண்டரிகத்தில் முதல்வனார்
செய்யும். கூத்துக்கிடமாக விரிகின்றது. ஆதலின்
அருமறை......சிந்தையில் அமர்ந்த - என்றார்.

     இவ்வம்பலம் மறை முதல் இடை கடைகளில் பிரணவ வாயிலாக
அன்றி நேரே அலர்வதில்லை.....ஆதலின் அந்த மறைகளை ஓதுங்கால்
பிரணவத்தையே அவ்வவ்விடங்களில் ஓதுதல் மரபு. “ஓமென்று
மறைபயில்வார்“ என்ற தேவாரமும் காண்க.

     கந்தபுராணம் - அயனைச் சிறைபுரி படலத்திலே (8) “என்று
நான்முகன்.....மறையெவற்றிற்கு மாதியில் நவில்வான், நின்ற தோர்தனி
மொழியைமுன்னோதின னெறியால்“ என்றதும் காண்க. வியட்டி
நிலையில்
- அகாரம் இருக்கு வேதத்தின் முதலிலும் (அக்நி மீளே),
உகாரம் எசுர்வேதத்தின் நடுவிலும் (யோநிஸ் சமுத்திரோபிந்து),
மகாரம் சாமவேதத்தின் முடிபிலும்....(சமாநம்வரம்) விளங்குவதென்று
பெரியோர் கூறுவர். தகராகாயத்தைக் குறிக்கும் தகரத்தோடு ஓ என்ற
உயிர் கூடிய தோ - (தோடு உடைய) என்று தொடங்கிய
தெய்வத்தமிழ்த் திருமுறை, உலகெலாம் என்றதில் ம் என்றதுடன்
முடிபு பெற்றிருத்தலும் இங்கு உணரத்தக்கது.


  சிந்தையில் - சிந்தை என்பதற்குச் சீவனென்றும், சீவனுக்குச்
சிந்தை என்றும் வந்திடும். சிந்தை - சிவஞானத்தால் விளங்கிய
ஆன்ம அறிவு என்க. அவ்வறிவினுள்ளே விரிந்து விளங்கும்
திருச்சிற்றம்பலத்திலே இறைவன் பிண்டத்துச் செய்யும் திருக்கூத்து
நிகழும். அவ்வானந்தக் கூத்தை அவ்வியல்பிற் கும்பிட்டுச்
சிவபோதத்தாலே அருளிய தமிழ் மறைகளின் முத லிடை
கடைகளிலே பிரண வத்தினுட்பொருளாகிய ‘திருச்சிற்றம்பலம்'
என்பதைக் கூறித் தொடங்குதலும் முடித்தலும் அமைவுடைத்து
என்பது பெரியோர் துணிபு.

“என்னுயிர்மேல் விளையாடல் விடுத்தானோ“
“உரனில்வருந் திருக்கூத்தை, அவ்வியல்பிற் கும்பிட்டு“

எனவும் வரும் திருவாக்குக்களும் காண்க.

     சிந்தையில் - உள்ளக் கமலத்தில் என்றலுமாம். மலர்மிசை
ஏகினான் என்ற குறளில் ‘அன்பானினைவாரது உள்ளக்
கமலத்தின்கண் அவர் நினைந்தவடிவோடு விரைந்து சேறலின்' என்ற
உரை கூறியது காண்க. ‘நீவிர் இருவருங் கண்ட மன்ற மிதயமாம்'
(திருவிளையாடற்புராணம்) என்றபடி திருச்சிற்றம்பலம் இதயத்
தானமாவதும் உணர்க.

     அன்பர் சிந்தையில் அலர்வதனை - அப்பர் சுவாமிகள்,

“நாடி நாரண னான்முக னென்றிவர், தேடி யுந்திரிந் துங்காண
வல்லரோ,
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத், தாடி பாதமென் னெஞ்சு
ளிருக்கவே“

என்று சுவையும் உறுதியும் பெற அருளியது காண்க.

“அந்தியின் மறைநான் காரணம் பொதிந்த வரும்பெறன்
                        மறைப்பொருள் மறையோர்
சிந்தையி லரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்திருவளர்
                             திருச்சிற்றம்பலமே“'

எனக் கருவூர்த்தேவர் திருவிசைப்பாவினும் காண்க.

     திருவளர் ஒளிசூழ் - திருவளர் - யாவர் இவ்வொளியினது
காட்சி எல்லைக் குட்படுகின்றார்களோ அவ்வவர்களிடத்தெல்லாம்
அருளாகிய திரு வளர்க்கப்பெறுகின்றது. ஒளி -

“விளக்கொளி யாய்நின்ற விகிர்த னிருந்த
துளங்கொளி பாசத்துட் டூங்கிருள் சேராக்
களங்கிரு ணட்டமே கண்ணுத லாட
விளங்கொளி யுன்மனத் தொன்றி நின்றானே.“
- ஒளி - 43

முதலியனவாகித் திருமூலர் திருமந்திரம் ஒன்பதாந் தந்திரம் ஒளி
என்ற பகுதியில் உள்ளனவும்,

“புறத்துளா காசம் புவன முலகம்
அகத்துளா காசமெம் மாதி யறிவு
சிவத்துளா காசஞ் செழுஞ்சுடர்ச் சோதி
சகத்துளா காசந் தானஞ் சமாதியே“
             - மேற்படி ஆகாசப்பேறு - 9

முதலிய பகுதியில் உள்ளனவும் பிறவும் தக்கார் வாய்க்கேட்டு
ஈண்டுவைத் துணரத்தக்கன. ஒளிசூழ் - ஒளியை உள்ளே வைத்து
அதனைச்சுற்றிச் சூழ்ந்த திருச்சிற்றம்பலம் என்றலுமாம். இப்பொருளில்
ஒளி என்பது கூத்தப் பிரானை. ஞாயிற்றைச் சூழ்ந்த கதிர்போல
ஒளியினாற் சூழப்பெற்ற திருச்சிற்றம்பலம் என்றலுமாம். இப்பொருளில்
ஒளி என்றது திருச்சிற்றம்பலத்தினது விளக்கச் சத்தியாம்.

     திருச்சிற்றம்பலம் - சிறுமை - அம்பலம் என்ற இருசொற்
புணர்ந்த தொடர்மொழி. சிறுமை - இங்கு நுண்மை - (சூக்குமம்).
சிவசத்தியை நோக்க மற்ற இருவகை மாயா காரியப் பொருளுந் தூலப்
பொருள்களேயாம். தடையிலா ஞானமாகிய சிவசத்தி சொரூபமே
அம்பலமாகலின் அது சிற்றம்பலம் எனப்பெறும். இச்சிறுமையை
வடநூலார் தகரம் என்ப. - ஸ்ரீ முத்துக்குமாரத் தம்பிரான் சுவாமிகள் குறிப்பு.

“அண்ண லார்மதக் களித்தமெய்ஞ் ஞானமே யானவம்
                                      பலமுந்தம்
உண்ணி றைந்தஞா னத்தெழு மானந்த வொருபெருந்
                                    தனிக்கூத்தும்
கண்ணின் முன்புறக் கண்டுகும் பிட்டெழுங் களிப்பு“...“
                           (திருஞான - புரா - 160)

என்ற திருப்பாட்டிலே இதன் பொருளை உய்த்துணர்க. இது சிவஞான
ஒளியானதால் வளர் ஒளி எனப் பெற்றது. ஒளிகள் ஞாயிறு முதலாகப்
பலவாம். ஞாயிறு படரிற் காண்பது கண்ணொளி; அதன்மேல்
ஆன்மவெளி; அதன்மேல் சிவஞானவொளி. இதுவே தனக்குமேல்
ஒன்று மில்லாததும், மற்றெல்லா ஒளிக்கும் ஒளி தந்து இயக்குவதும்
ஆகிய முற்றொளியாம்.

“ஒளியா யொளியத னொளியா யொளியத னொளியுந்                                தணிதரு மொளியாகி“

     (நிருத்தப்படலம் 63) என்ற பேரூர்ப் புராணமும் காண்க.

     மேலும் இதன்விரிவுகளைத் தக்கார்வாய்க் கேட்டுணர்க.

     திருவணுக்கள் திருவாயில் - இறைவன் ஆடுமிடத்திற்
கருகில் உள்ளது. இதற்கப்புறம் வேறு வாயில்கள் இல்லை. அகத்தும்
புறத்தும் இறைவனைக் காணக் கடந்துசெல்ல வேண்டிய எண்ணிறந்த
வாயில்களிலே உள்ளிருந்து கணக்கிடும்போது முதற் றிருவாயில்.
அணுக்கத் தொண்டர்களே உட்புகக் கூடியதாதலின் இப்பெயர் பெற்ற
தென்றலுமாம். இது அம்பலஞ் சூழ்ந்த மாளிகைப் பத்தியிற் கிழக்குத்
திருவாயில் போலும்.

     பெருமகிழ் - நடுவினில் சிரத்தில் - என்பனவும் பாடங்கள். 104