253. “தெண்ணிலா மலர்ந்த வேணியா யுன்றன்
                    றிருநடங்கும்பிடப்பெற்று
 
  மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு வாலிதா
                        மின்பமா“ மென்று
கண்ணிலா னந்த வருவிநீர் சொரியக் கைம்மல
                        ருச்சிமேற்குவித்துப்
பண்ணினா னீடி யறிவரும் பதிகம் பாடினார்
                      பரவினார் பணிந்தார்.
107

     (இ-ள்.) கண்ணில்.........குவித்து - (மகிழ்ச்சியின் மலர்ந்த
பெரியார்) கண்களினின்று ஆனந்தமாரி அருவிபோலச் சொரியக்
கைகளைத் தலைமேற் கூப்பிக் கொண்டு; தெண்ணிலா.....என்று -
“நிலா மலர்ந்த சடையவனே! (பொதுவகையால் பிறவி
துன்பமுடைத்தென் றுரைப்படினும்) உனது திருக்கூத்துக் கும்பிடும்
வாழ்வுபெற்று இவ்வுலகத்தில் வந்த மானிடப் பிறப்பே எனக்கு நல்ல
இன்பமாயிற்று“ என்று; பண்ணினால்........பணிந்தார் - பண்ணிரம்பி
அறிதற்கரிய தேவாரத் திருப்பதிகம் பாடிப் பரவிப் பணிந்தார்.

     (வி-ரை.) தெண்ணிலா மலர்ந்த வேணி - தெள் - தெளிந்த;
இறைவனை அடைந்தால்தான் உய்யலாம் என்று மதிதெளிந்த.
மலர்ந்த - தெளிந்து அவ்வாறே அடைந்து வளர்ந்த.
மலர்ந்தவேணி
- மலர்தற்கிடமாகிய சடை. தௌ் - நிலா
இவ்வுண்மை பிறரும் கண்டு தெளியக்கிடந்த நிலா என்றலுமாம்.
தூயதாகிய - தெள்ளியதாகிய - நிலா என்றுரைப்பினும் பொருந்தும்.
குவிந்துபோயின தன்மை நீங்கி விரிந்ததால் மலர்ந்த என்றார்.
திருக்களிற்றுப்படி மருங்கிலே சென்றவுடன் கலங்கரை விளக்கம்
போல முதலில் நம்பிகளுக்குக் காட்சிப்பட்டது நிலவே என மேலே
இந்து வாழ்சடையான் என்ற இடத்துக் கண்டோம். அக்கருத்தினாலே
அதனைப்பற்றியே துதிக்கின்றார் என்க.

     கும்பிடப்பெற்று - கும்பிடும் பேறுபெறுதலினாலே.
மண்ணிலே வந்த பிறவி - இவ்வுலகத்தில் வந்து பிறந்த பிறப்பு.
கயிலையிலிருந்து இங்கு அவதரித்து வந்தமையால் வந்த என்றார்.

     பிறவியே வாலிதாம் இன்பம் - பிறப்பே தூய இன்பம்
தருவதாம். பிறவியே - முன் கயிலையில் இருந்த நிலையினும் பார்க்க
இப்பிறவியே. ஏகாரம் பிரிநிலை. தேற்றமும் ஆம். முன்னிருந்ததும்
இன்பமேயாயினும் திருநடம் கும்பிடப் பெற்ற இப்பிறப்பு நிலை -
(மேலாகிய) வாலிதாம் இன்பம் என இன்பத்துக்கு அடைமொழி
கொடுத்துக் கூறினார். “தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம்
பெருமை சாதித்தார்“ (திருநா - புரா - 312) முதலிய திருவாக்குக்கள்
காண்க. வரிசை 2-ம் பாட்டின் கீழ்க் காண்க.

     என்று - மேலே கூறியது ஆரூர் நம்பிகள் இங்குப் பாடிய
பதிகத்தின் உட்குறிப்பு அல்லது மகுடமாய் இருத்தல் வேண்டும்
என்பது குறிப்பாம். இவ்வாறே திருப்பேரூரிலே நம்பிகள் கும்பிட்டுப்
பாடியபோதும் ஆசிரியர்,

“பொன்மணி மன்று ளெடுத்தசே வடியார் புரிநடங் கும்பிடப்
                                         பெற்றால்
என்னினிப் புறம்போ யெய்துவ தென்று“
                            - ஏயர்கோன் - புரா - 91

எனக் குறித்ததும் காண்க. இவை யிரண்டு பதிகங்களும் இப்போது
கிடைத்தில.1

     கண்ணில் ஆனந்த அருவி நீர் - ஆனந்த
அனுபவத்தால்வரும் கண்ணீர் - ஆனந்தக் கூத்தின் பேரின்ப
வெள்ளத்திலே திளைத்தாராதலின் அந்த ஆனந்தம் உள்ளே
நிறைந்தது. கண்ணீர் முதலியன அதனைப் புறத்துக் காட்டும்
மெய்ப்பாடுகள்.

     பாடினார் பரவினார்
- என்பன முற்றெச்சமாய்ப் பாடிப்
பரவி என்ற பொருளில் வந்தன. “பாட்டும் பாடிப் பரவித் திரிவார்“
என்ற தேவாரங் காண்க.

     இப்பாட்டைத் திருநாவுக்கரசு நாயனார் தில்லைத் திருக்கூத்துக்
கும்பிட்ட போது நிகழ்ந்த நிகழ்ச்சியைக் கூறும் “கையுந் தலைமிசை
புனையஞ் சலியன....“ (திருநா - புரா - 167.) என்றும், அவ்வாறே
ஆளுடைய பிள்ளையார் கும்பிட்ட நிகழ்ச்சி கூறும் “உணர்வி
னேர்பெற வரும்சிவ போகத்தை“ (திருஞா - புரா - 161) என்றும்,
வரும் திருப்பாட்டுக்களுடன் வைத்துக் காண்க.

     நிலாவை மலரவைத்தலிலே, அது பிறர் எவராலும் செய்தற்
கருமையினால் வரம்பிலாற்றலுடைமையும், கருணையே பற்றிச்
செய்தமையினால் பேரருளுடைமையும், சுத்தமாக்கியமையினால் தூய
உடம்பினனாதலும், இவ்வாறே ஏனையவும், ஆக, இறைவனது எண்
குணங்களும் குறித்தவாறு. 107



1சில பதிப்புக்களில் இவ்விடத்தில் “மடித்தாடும்“ என்ற
திருப்பதிகத்தைப் பதித்துள்ளார்கள். அது இப்போது பாடியதல்ல.
ஏயர்கோன் - புரா - 115-ம் பாட்டுப் பார்க்க.