255. ஆடுகின் றவர்பே ரருளினா னிகழ்ந்த
     வப்பணி சென்னிமேற் கொண்டு
 
  சூடுதங் கரங்க ளஞ்சலி கொண்டு
     தொழுந்தொறும் புறவிடை கொண்டு
மாடுபே ரொளியின் வளருமம் பலத்தை
     வலங்கொண்டு வணங்கினர் போந்து
நீடுவான் பணிய வுயர்ந்தபொன் வரைபோ
     னிலையெழு கோபுரங் கடந்து,
109

     (இ-ள்.) ஆடுகின்றவர்......மேற்கொண்டு - கூத்தர் பெருங்
கருணையினாலே உண்டாகிய அந்தக் கட்டளையைத் தலைமேற்
கொண்டவராய்; சூடு........கொண்டு - தமது கைகளைச் சிரத்திற்கூப்பி
வணங்கிக்கொண்டு; தொழும்.......விடைகொண்டு - தொழுது
விடைபெற்றக்கொண்டு; மாடு.......வலங்கொண்டு - செய்கின்ற
பேரொளியுடைய வளர்கின்ற திருச்சிற்றம்பலத்தை வலஞ்செய்து;
வணங்கினர் போந்து - வணங்கிப் புறம்போந்து; நீடு....கடந்து -
நீண்ட வானமும் சுருங்கியதாக உயர்ந்த பொன்மலைபோல
நிலையினின்றும் எழுந்த தெற்குக் கோபுரத்தைக் கடந்து,


     (வி-ரை.) அப்பணி - ‘ஆரூரில் வருக நம்பால்' என்ற அந்தக்
கட்டளை. சென்னிமேற்கொண்டு - மிக உயர்ந்த பொருளாதலின்
தலையின்மேல் கொண்டார்.

     தொழுந்தொறும் - முன்னே உட்புகும்போது தொழுது
தொழுது சென்ற இடங்களாகிய திருக்களிற்றுப்படி, திருவணுக்கன்
திருவாயில், திருவாயில் முதலியவற்றை உள்ளேயிருந்து திரும்பி
வரும்போது இம்முறையே தனித் தனித் தொழுது தொழுது வருதலால்
தொழுந்தொறும் என்றார். அங்கங்கும் விடைபெற்றுக் கடந்தார்.

     புறவிடை - புறத்தே செல்ல விடை. பின்றிரும்பிச்சென்று
விடைகொண்டு என்ற கருத்துமாம். “பிந்திப் பிந்தி விண்ணெறி
முன்னுகின்றான்“ - “பின்றிரும் பிச் சென்றான்“ என்ற
தணிகைப்புராணம் நந்தியுபதேசப் படலம் 144 - 145 காண்க.

     மாடு பேரொளியின் வளரும் அம்பலம் - மாடு -
செய்கின்ற - நிலவ வைக்கின்ற. பேரொளியின் மாடு அம்பலம்
என்று மாற்றுக. செய்யும் பேரொளி. மாடுதல் - செய்தல் என்ற
பொருளில் முன் வழங்கியதொரு சொல். உலகத்துக்குப் பேரொளி
செய்கின்ற - உலகத்தைப் பேரொளியின் வைக்கின்ற என்க. இது
இப்பொருளில் வழக்காறு அருகியது. தமிழிலிருந்து போந்து இச்சொல்
இப்பொருளில் கன்னட மொழியில் வழங்குகிறது.

“ஏடுமலி கொன்றைவளரிந்துவொடு வன்னி
மாடவல செஞ்சடையெம் மைந்தனிட மென்பர்“
   - திருநள்ளாறு - (திருவிராகம் - இத்தளம்) 1

என்ற திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம் காண்க. மாடு
என்பதைப் பெயர்ச் சொல்லாகக் கொண்டு பொன் என்றும், பக்கம்
என்றும் கூறுவாருமுண்டு.

     வணங்கினர் போந்து - வணங்கிச் சென்று. வணங்கினர் -
முற்றெச்சம். வணங்கி.

     வான்பணிய - உயர்ச்சிபெற்ற ஆகாயமும் இதிற்றாழும்படி -
அதாவது மிகவும் உயர்ந்த. உயர்வு சிறப்பு உம்மைதொக்கது. வான் -
தேவர்கள் - தேவவுலகம் என்று
கொண்டு அவர்கள் பணிய
என்றுரைப்பினுமாம். பணிய - பணியும்பொருட்டு எனக்கொண்டு
பணிய எழும் என்று கூட்டி யுரைத்தலுமாம்.

     பொன்வரைபோல் - கோபுரத்தின் சிகரங்களிலே
பொற்பூச்சிட்டு உயர்ந்து விளங்குதல் குறிப்பாம்.

     நிலைஎழு கோபுரம் - வான் பணியுமாறு தன்நிலையிலே
நின்று எழுந்ததாகிய உட்கோபுரம். எழுநிலை என்று மாற்றி எழு
நிலை (வாயில்)களையுடைய எனவுரைப்பதுமாம். 109