257.
|
புறந்தருவார்
போற்றிசைப்பப் புரிமுந்நூ
லணிமார்பர் |
|
|
அறம்பயந்தா
டிருமுலைப்பா லமுதுண்டு
வளர்ந்தவர்தாம்
பிறந்தருளும் பெரும்பேறு பெற்றதென முற்றுலகிற்
சிறந்தபுகழ்க் கழுமலமாந் திருப்பதியைச்
சென்றணைந்தார். |
111 |
(இ-ள்.)
புறந்தருவார் போற்றிசைப்ப - பரிசனங்களாகிய
அடியார்கள் தம்மைத் துதித்துக்கொண்டு வர; புரிமுந்நூல்
அணிமார்பர் - முப்புரியாகிய பூணூலையணிந்த மார்பினையுடைய
நம்பிகள்; அறம்பயந்தாள் ........சென்றணைந்தார் - தருமங்களை
எல்லாம் தந்தவளாகிய
உமாதேவியாரின் திருமுலைப்பாலாகிய
அமுதத்தினை உண்டு வளர்ந்த திருஞானசம்பந்த சுவாமிகள்
அவதரித்த பெரும்பேற்றைப் பெற்ற திருத்தலம் இது என்று
எவ்வுலகினும் சிறந்த புகழ்வாய்ந்த கழுமலம் என்ற திருத்தலத்தினைச்
சென்று சேர்ந்தார்.
(வி-ரை.)
புறந்தருவார் - நம்பிகளது திருமேனியைப்
பாதுகாப்பவர்கள் - பரிசனங்கள். போற்றிசைப்ப - தமக்கு
இப்பணிவிடை செய்யக் கொடுத்து ஆட்கொள்கின்றதனாலே போற்ற.
அறம் பயந்தாள் -
தருமங்களுக்கெல்லாம் பிறப்பிடமாகிய
உமாதேவியார். எல்லாத் தருமங்களையும் வளர்த்து உலகுக்கீந்தவள்.
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 71-ம் பாட்டும் பிறவும்
காண்க.
திருமுலைப்பால் அமுதுண்டு
வளர்ந்தவர் -
திருஞானசம்பந்த சுவாமிகள்.
கழுமலம்
- சீகாழி; இதற்குப் பிரமபுரம் முதலாகப்
பன்னிரண்டு திருப்பெயர்களிருப்பவும் (திருஞான - புரா - 14)
நம்பிகள் இங்கு அருளிய திருப்பதிகத்திலே இப்பெயராலே பாட்டுத்
தோறும் மகுடம் அமைத்துக் கழுமல வளநகர்க்
கண்டுகொண்ே்டனே என்றமைபற்றி அதனை நினைவூட்ட
இப்பெயராற் கூறினார். இப்பெயர்களைப்பற்றிய விரிவை ஆளுடைய
பிள்ளையார் புராணம் 14-ம் பாட்டின் கீழ்க்காண்க. சிறந்த
புகழ்
- சீகாழியின் பெயர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் புகழைப்பற்றி
எழுந்தன. அவற்றுள்ளே கழுமலம் என்ற பெயர்க்குக் காரணமாகிய
புகழே சிறந்த தென்க. .....சிவனைத், தொழுதுலகி லிழுகுமல
மழியும்வகை கழுவுமுரை கழுமலநகர். (திருப்பிரமபுரம் - சாதாரி -
வழிமொழித் திருவிராகம் - 12) என்று திருஞானசம்பந்த சுவாமிகள்
இப்பெயர்க் காரணத்தை அருளியிருக்கின்றபடி, மனிதர்கள் அடைந்து
ஞானம் பெறுதலாலே தமது மும்மை மலங்களையும் கழுவப்பெற்
றுய்யத் தருதலால் இப்பெயரே அதன் சிறந்த புகழ் என்றார். மேலும்,
துயரி லங்குமுல கிற்பல வூழிகடோன்றும்பொழு தெல்லாம், பெயரி
லங்குபிர மாபுரம் (பிரமபுரம் - நட்ட பாடை - 8) என்றபடி
இப்பெயர்கள் ஒவ்வோர் ஊழியிலும் ஒவ்வொன்றாகப் போந்தன.
பிரமபுரம் முதலாகக் கழுமலம் ஈறாகக், குறித்த வரிசையிலே, கால
வரிசைப்படிப் போந்தமையால் இறுதியாகப் போந்த பெயர்
இதுவேயாம். இவ்வரிசை பற்றியே இவற்றைப் பயிலவேண்டுமென
ஆளுடைய பிள்ளையார் வகுத்தருளினார். இம்முறை வைப்பை
வழிமொழித் திருவிராகம், திருஏகபாதம், திருமாலைமாற்று
-
திருக்கோமூத்திரி - திருஎழுகூற் றிருக்கை முதலிய தேவாரங்களிற்
காண்க. அதனாலே அவ்வரிசையிலே ஆசிரியர் அமைத்துக்
காட்டியிருப்பதும் காண்க. (திருஞா - புரா 14) இப்பெயரின் பொருள்
பற்றியே அம்மலங் கழீஇ அன்பரொடுமரீஇ என்ற ஞான
சாத்திரக் கருத்து மனத்துள் எழ, அதுவே ஆளுடைய பிள்ளையார்
அவதரித்த தலம் என்ற நினைவை எழுவிக்க, அதுவே அதனுள்
மிதித்தல் தகாது என்ற எண்ணத்தை விளைவிக்க, மேற் சரிதம்
நிகழ்ந்து, இப்பெயராலே நம்பிகள் தேவாரம் அருளக்
காரணமாயிற்றுபோலும். இக்குறிப்புக்களை எல்லாம் ஆசிரியர்
இப்பாட்டிற் காட்டியிருத்தல்கண்டு மகிழ்க.
பிறந்தருளும் பெரும்பேறு
- பிறந்து உலகுக்கு ஆசாரியர்
பெருமானாய் அருள் செய்தற் கிடமாகிய பெரும்பேறு; இறைவன்
எழுந்தருளி யிருக்கும் பேற்றுடனே பிள்ளையார் பிறந்தருளும்
பெரியபேறு இத்தலத்திற்குச் சிறப்பாயமைந்த தென்பது குறிப்பு.
பிறந்தருளியது உலகம் மலங்கழுவுதற்குக் காரணமாம். அதற்கு
ஞானம் பெற்றது காரணமாம். அதற்கு அமுதம் உண்டது காரணமாம்.
அதற்கு அவ்வமுத மீந்த அன்னையார் அறம் பயந்தமை காரணமாம்.
ஆதலின் இவையெல்லாம் குறிப்பார் அறம்பயந்தாள்
திருமுலைப்பால் அமுதுண்டு வளர்ந்தவர் தாம் பிறந்தருளும்
பெரும்பேறு எனவும் அதனாலே முற்றுலகிற் சிறந்த புகழ்க்
கழுமலம் எனவும் பாடினார்.
முற்றுலகிற் சிறந்தபுகழ்
- எல்லா உலகங்களிலும் இதுவே
சிறப்பாகிய புகழ். வேறொன்றிற்கு மில்லாதசிறப்பு.
கழுமலமரம்
- ஆம் - இன்றும் மலங்கழுவும் அத்தன்மை
செய்வதாகிய. 111
|
|
|
|