258. ‘பிள்ளையார் திருவவதா ரஞ்செய்த பெரும்புகலி  
  யுள்ளுநான் மிதியே'னென் றூரெல்லைப்
                             புறம்வணங்கி
வள்ளலார் வலமாக வரும்பொழுதின் மங்கையிடங்
கொள்ளுமால் விடையானு மெதிர்காட்சி
                             கொடுத்தருள.
112

     (இ-ள்.) பிள்ளையார்......என்ற - ஆளுடைய பிள்ளையார்
திருவவதாரம் செய்த பெரும்பேறு பெற்ற புகலி என்னும்
இத்தலத்தின் எல்லைக்குள்ளேயும் காலால் மிதித்து அடியெடுத்து
வைக்கமாட்டேன் என்ற கருத்தையுடையவராய்;
ஊர்எல்லை......பொழுது - அத்தலத்தின் எல்லைக்குப் புறம்பே நின்று
வணங்கி அதனை நம்பிகள் வலமாகச் சுற்றிவரும்போது;
மங்கை......அருள - உமாதேவியாருடன் இடபவாகனத்தின்மேல்
எழுந்தருளி இறைவன் அவருக்கு எதிர்காட்சி கொடுத்தருளவே,

     (வி-ரை.) பிள்ளையார் - திருஞானசம்பந்த சுவாமிகள்.
ஆளுடைய பிள்ளையார் என்றது பிள்ளையார் என நின்றது.
(அடிமைநெறி.) தாசமார்க்கம் முதலியனவாகச் சொல்லப்பெற்ற நான்கு
வழிகளிலே சற்புத்திரமார்க்கம் என்னும் நன்மகன்நெறியை விளக்க
வந்தவராதலானும், உலகத் தாயாகிய உமையம்மையார்
திருமுலைப்பால் அமுதுண்டு வளர்ந்தாராதலானும் இவர் பிள்ளையார்
எனப்பெற்றார்.

     அவதாரம் செய்த பெரும்புகலி - அவதரிக்கும் இடமாகப்
பெரும்பேறு பெற்ற புகலி என்னும் தலம். செய்த -
செய்தற்கிடமாகிய. பெயரெச்சம்; இடப்பெயர் கொண்டது.
“பிறந்தருளும் பெரும்பேறு பெற்றதென“ என்று மேற்பாட்டிலே
குறித்தமையுங் காண்க. பெரும்புகலி - சூரன்மனாதி அசுரர்க்குப்
பயந்து இந்திரன் இதிற் புகலடைந்து மறைந்துறைந்து உயர்ந்த
தலமாதலின் புகலி - புகலடைந்த இடம் - என்ற பேர் பெற்றது.
உலகில் உள்ள ஏனை எல்லா இடங்களினும் மேம்பட்ட பெரிய
புகலிடமாயுள்ளது. பெரும்பற்றப்புலியூர் என்றமைபோல.

     உள்ளும் நான் மீதியேன் - எல்லைக்குள்ளேயும் அடி
வைக்கமாட்டேன். தன்னுட் புகலுற்றாரைக் காக்குந் தன்மையுடையது
இப்புகலியேயாயினும், அப்பேறு பெறாவிடினும் விடுக - பிள்ளையார்
அவதரித்த தலத்தைமிதியேன் என்று துணிந்து நின்றமை நம்பிகள்
பிள்ளையாரிடத்தே வைத்த பேரன்பின் உறைப்பினை
விளக்குகின்றது. உள்ளும் - உம்மை சிறப்பும்மை. புகலியேயாயினும்
அதனுள்ளும் இனி, உடைய அரசு கைத்தொண்டு விரும்பு பதியை
மிதித் தடையுமதற்கஞ்சிப் புகுதாமைபோலவே புகலியுள்ளும் - என்று
கொண்டு இறந்தது தழீஇய எச்சவும்மை யென்றலுமாம்.


     ஊர் எல்லைப் புறம் - ஊரின் எல்லைக்குப் புறம்பே -
வெளியே. இதற்குப் புற எல்லை என்றுரைப்பாருமுளர்.

     வள்ளலார்
- உலகர் உய்யும் வகையை வரையாது
கொடுப்போர்; ஞான வள்ளல்.

     மங்கை இடங்கொள்ளு மால்விடையான் - என்றது
நம்பிகளுக்குக் காட்டிய எதிர்காட்சியின் திருக்கோலத்தை. இவரே
திருத்தோணியிலே பெரிய நாயகியாருடன் வீற்றிருக்கும்
அம்மையப்பராம். திருஞானசம்பந்த சுவாமியினிடத்து வைத்த
அன்பினாலே தலத்துட்புகாது நம்பிகள் வெளி நின்றாராதலின்
அவரை ஆட்கொண்ட திருக்கோலமாகிய தோடுடைய
செவியனாய் விடையேறி நம்பிகளுக்கு எதிரே வந்து
காட்சியருளினார் என்பது குறிப்பு. வரும் பாட்டில் ‘திருத்தோணி
புரத்தாரைக் கண்டுகொண்டேன்' என்பதும் காண்க. எதிர் -
எதிரிலே - முன்பாக. 112