260. இருக்கோல மிடும்பெருமா னெதிர்நின்று
                             மெழுந்தருள
 
  வெருக்கோளுற் றதுநீங்க வாரூர்மேற்
                           செலவிரும்பிப்
பெருக்கோதஞ் சூழ்புறவப் பெரும்பதியை
                        வணங்கிப்போய்த்
திருக்கோலக் காவணங்கிச் செந்தமிழ்மா
                            லைகள்பாடி.
114

     (இ-ள்.) இருக்கு ... நீங்க - வேதங்கள் கூவியழைக்கும்
பெருமான் இவ்வாறு எதிர் காட்சி தந்து மறைந்தருளவும் நம்பிகள்
வெருக்கொண்டவராய்ப் பின்னர்த் தெளிவடைந்து; ஆரூர் ... விரும்பி
- திருவாரூரை வழிக்கொள்ள விருப்பமுற்று; பெருக்கு ... போய் -
கடல்சூழ்ந்த புறவமாகிய அத்தலத்தினை வணங்கிச்சென்று;
திருக்கோலக்கா ... பாடி - திருக்கோலக்கா என்னும்
தலத்தையடைந்து இறைவனைத் தரிசித்துத் திருப்பதிகம்பாடி,


     (வி-ரை.) இப்பாட்டுக் குளகம். வரும் பாட்டில் அணைந்தார்
என்ற வினைகொண்டு முடிந்தது. ஆரூர் மேற்செல்லும் மனத்தின்
விரைவை ஒரே முடிபுகொண்ட இப்பாட்டுக்களும் காட்டின போலும்.
நம்பிகள் என எழுவாய் வருவித்துரைக்க.

     இருக்கு ஓலம் இடும் பெருமான் - இருக்கு
ஓலிடுதற்கேதுவாகிய பெருமை (இறைமைத்தன்மை)யையுடையான்
என்க. இடும் என்னும் பெயரெச்சம் பெருமான் என்னும் ஏதுப்பெயர்
கொண்டது. இன்ன தன்மையன் என்றறிய முடியாமல் இதுவல்ல,
இதுவல்ல என்று வேதங்கள் துதித்து ஓலமிடப்பெற்ற இறைவன்.
இடும்
- இடப்பெறும். செயப்பாட்டுப் பிறவினைப் பொருளில் வந்தது
என்றலுமாம். இருக்கு - இங்கு வேதங்களுக்குப் பொதுப் பெயராய்
நின்றது. “தூய காவிரியி னன்னீர் கொண்டிருக்கோதியாட்டி“ என்ற
தேவாரம் காண்க. ஓலம் - என்பது அம் ஈறு குறைந்து நிற்றலும்
வழக்கு. அபயமிட்டழைத்தற் குறிப்பாயதோர் சொல்.

     எதிர் நின்றும் எழுந்தருள - எதிர் காட்சி கொடுத்த
நிலையினின்று மறைந்தருள.

     வெருக் கோளுற்று அது நீங்க - காட்சி தந்த இறைவன்
எழுந்தருளிவிட்டமையால் சடுதியில் வெருக்கொண்டு, விரைவில்
வெரு நீங்க. வெருக்கோள் - அச்சத்தினாலே சடுதியில்
தோன்றுவதும் விரைவில் மாறுவதுமாமொரு மெய்ப்பாடு என்பர்.
வெருவினாற் கொள்ளப்பட்டது. உலக வழக்கில் விருக்கென்று
(பயந்தேன் - விழுந்தேன்) என வழங்குகிறது. திருவடி நினைந்திட்டுக்
கண்டு அழுமலர்க் கண்ணிணையுடன் நின்ற நம்பிகள் அக்காட்சி
மறையவும் உடனே வெருக்கொண்டார். வெருக் கொள்ளுதல்
அன்பின் மெய்ப்பாடுகளில் ஒன்றுமாம். “விம்மா வெருவா விழியாத்
தெழியா வெருட்டுவார்“ என்ற அப்பர் சுவாமிகள் தேவாரம் காண்க.
(திருவாரூர் - குறிஞ்சி - 6) தில்லைக்கூத்தர் பணித்தவாறே ஆரூர்
செல்கின்ற நம்பிகள் கழுமலப் புறத்தே கயிலைக் காட்சி கண்டு
தம்மை மறந்து திளைத்து நின்றார். காட்சி மறைய வெருக்கொண்டார்.
அது உடன் மாறவும்; முன்னைச் செலவு நினைவுக்கு வர, முன்போல
ஆரூர் மேற்செல விருப்பம் வந்தது - என்பார், வெருக்கோள் உற்று,
அது நீங்க, ஆரூர் மேற்செல விரும்பி - என்று தொடர்ந்து
கூறினார்.

     பெருக்கு ஓதம் சூழ் புறவம் - ஓதப் பெருக்குச்சூழ் என்க.
ஊழியில் நீர்ப் பெருக்கினாற் சூழப் பெற்று மிதக்கும் புறவம் என்ற
பதி. “கடல்கொள மிதந்த கழுமல வளநகர்“ என்ற நம்பிகள்
திருப்பதிகக் குறிப்பினை நினைவுகூர்க. புறவம் - பேர்க்காரணமும்
பிறவிசேடமும் பின்னர்த் திருஞான சம்பந்த சுவாமிகள் புராணத்துக்
காண்க. முன்னர்ப் பெரும்புகலி என்றதற் கேற்பப் பெரும்பதி
என்றார்.

     பதியை வணங்கி
- பதியினுட்புகாது புறத்தே வலம் வந்தா
ராதலின் பதியை வணங்கிப் போய் என்றார்.

     திருக்கோலக்கா
- இத்திருப்பாட்டு இத்தலப் பெயரினுக்கு
ஏற்ற எதுகையாக எடுத்துக்கொண்டமைந்தது போலும். அப்பூதி
நாயனார் புராணம் (11) “ஒருகுன்றவில்லாரை“ என்ற பாட்டினையும்
நோக்குக.

     தலவிசேடம்
- இது சீகாழிக்கு மேற்கே ஒரு நாழிகை
யளவில் உள்ளது. ஆளுடைய பிள்ளையார் ஞானம் பெற்றபின்
அடுத்த நாளிலே தமது முதல் தலயாத்திரை செய்த தலம். அவருக்கு
ஐந்தெழுத்து எழுதிய பொற்றாளம் இங்கு இறைவன் கொடுத்தருளினர்.
தேவியார் அதற்கு ஓசை கொடுத்த காரணத்தால் ஓசை கொடுத்த
நாயகி எனப்பெறுவர். சுவாமி - தாளங்கொடுத்த காரணத்தாலே
திருத்தாளமுடையார் எனப்பெறுவர். இத்தலமும் திருத்தாளமுடையார்
கோயில் எனவும் பெறும். இதன் விரிவு பின்னர்த் திருஞானசம்பந்த
சுவாமிகள் புராணத்துட் காண்க.

     செந்தமிழ் மாலைகள் பாடி - இம்முறை நம்பிகள் பாடிய தேவாரங்கள் கிடைத்தில, அவை இறந்து பட்டனபோலும்.
இத்தலத்துக்கு இப்போது நமக்குக் கிடைத்துள்ள “புற்றில் வாளர
வார்த்த பிரானை“ என்ற தக்கேசிப் பண்ணில் அமைந்த திருப்பதிகம்
பின்னர் நம்பிகள் திருக்குருகாவூருக்குச் செல்லும் போது
பாடியதென்று ஆசிரியர் அறிவிக்க நாம் அறிகின்றோம். (ஏயர்கோ -
புரா - 154) மாலைகள் - பல பதிகங்களையேனும் அல்லது ஒரு
பதிகத்துள்ள பாட்டுக்களையேனும் குறிக்கும். பதிகத்துப் பாட்டு
ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாலை என வழங்கப்பெறுவதும் உளதாம்.
“ஆதரித் தழைத்திட்ட விம்மாலை“ (பதிகம்) - நம்பிகள் தேவாரம் -
திருநீடூர் தக்கேசி - 10. “சிறந்தமாலை கொடைஞ்சி னொடைஞ்சும்“
(பதிகப் பாட்டு) மேற்படி திருநள்ளாறு - தக்கேசி - 10. பதிகப்
பாடல்களையே பனுவல் என்றுரைப்பதும் வழக்காம்.      114