264. தேராரு நெடுவீதித் திருவாரூர் வாழ்வாருக்  
  ‘காராத காதலினம் மாரூர னாமழைக்க
வாராநின் றானவனை மகிழ்ந்தெதிர்கொள்
                              வீ'ரென்று
நீராருஞ் சடைமுடிமே னிலவணிந்தா
                           ரருள்செய்தார்.
118

     (இ-ள்.) வெளிப்படை. தேரின் அழகு நிறைந்த
திருவீதிகளையுடைய திருவாரூரிலே வாழ்கின்ற அன்பர்களுக்கு
‘மிக்க காதலுடைய நமது நம்பியாரூரன் நாம் அழைக்க இங்கு
வருகின்றான். அவனை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டழைத்து வருக'
என்று, கங்கை யணிந்த சடையிலே நிலவையும் அணிந்த இறைவன்
அருளிச்செய்தார்.

     (வி-ரை.) ஆராத காதலின் ஆரூரன் நாம்அழைக்கக்
காதலின் வாரா நின்றான்; அவனை எதிர் கொள்வீர் என்று ஆரூர்
வாழ்வாருக்கு நிலவணிந்தார் அருள் செய்தார்.

     தேராரு நெடுவீதி - “ஆழித்தேர் வித்தகனை நான் கண்ட
தாரூரே“ என்று தேவாரப் பாடல் பெற்ற தேர் சிறந்து விளங்கும்
நீண்ட வீதி. “திருவாரூர்த் தேரழகு“ என்பது பழமொழியாயிற்று.

     வாழ்வார் - வாழ்வினை யுடையார். திருவாரூரிலே பிறக்கும்
பெருமைத் தவமுடையார். பிறத்தலாலே பேரின்ப முத்திப்
பெருவாழ்வு பெற்றார்.

     ஆராத காதல் - இறைவனிடத்தே என்றும் தணியாத
ஆசையினை யுடையார். பின்னர் “என்பொனை என் மணியை“,
“என்னுயிர்க்கின்னமுதை“, “எண்ணிய கண்குளிர“, “என்றன்
மனங்குளிர“, “என்று கொல் எய்துவதே“, “எத்தனை நாள்
பிரிந்திருக்கேன்“, “அணி ஆரூரானை மறக்கலுமாமே“ என்றெல்லாம்
பாராட்டுகின்ற தணியாத ஆசையுடையவராதலின் ஆராத காதல்
என்றார். இதற்குக் குறைவில்லாத பத்தி என்று பொருளுரைப்பர்
மகாலிங்கையர் அவர்கள்.

     நாம் அழைக்க - ஆரூரில் வருக நம்பால் எனத் தில்லையில்
நாம் அழைத்ததனால் அதற்குட்பட்டவராய். ஆரூரரிடத்துத்
தமக்குள்ள அன்பின் திறத்தை வெளிப்படுத்த நம் ஆரூரன் என்றும்,
நாம் அழைக்க என்றும் இறைவன் அருளினார் என்பர்
ஆலாலசுந்தரம் பிள்ளை அவர்கள்.

     எதிர்கொள்வீர் - தாமே அழைத்ததற் கேற்ற பரிசால்
எதிர்கொள்ள வேண்டிய பண்பு பற்றியும், திருத்தொண்டத்
தொகையினாலும் இவ்வடியார்களை நோக்கிக் “கரையும் கடலும்“
என்று பாடியருளும் திருப்பதிகத்தாலும் அடியார் பெருமையாகிய
சேமநிதி உலகமுய்ய வெளிப்பட வேண்டிய நியதி பற்றியும்
அடியார்களுக்கு இறைவன் இவ்வாறு அருளினார் என்க. “தீதிலாத்
திருத்தொண்டத் தொகைதரப் போதுவார்“ (வரிசை - 35) என்று
மேலே கூறியமை காண்க.

     திருவாரூர் அடியார் பெருமை வெளிப்படும் தலமாதலைப்
பின்னர், வரிசை 269-ம் பாட்டின் உரையிற் காண்க. 118