| 269. 
           | 
          வந்தெதிர் 
            கொண்டு வணங்கு வார்முன் 
                 வன்றொண்ட ரஞ்சலி கூப்பி வந்து | 
            | 
         
         
          |   | 
          சிந்தை 
            களிப்புற வீதி யூடு 
                 செல்வார் திருத்தொண்டர் தம்மை நோக்கி 
            “யெந்தை யிருப்பது மாரூ ரவ 
                 ரெம்மையு மாள்வரோ கேளீ“ ரென்னுஞ் 
            சந்த விசைப்பதி கங்கள் பாடித் 
                 தம்பெரு மான்றிரு வாயில் சார்ந்தார். | 
          123 | 
         
       
       
           (இ-ள்.) 
      வந்து ... செல்வார் - மேலே கண்டவாறு  
      வாயிற்புறத்துத் தம் முன் வந்து தம்மை யெதிர்கொண்டு  
      வணங்குபவர்களாகிய திருவாரூரின் அடியவர்களை, அவர் தம்மை  
      வணங்குதற்கு முன்னரே தாம் கை குவித்து வணங்கி அவர்களுடன்  
      கலந்து வந்து இருதிறத்தார்க்கும் மனமகிழச்சி பொங்க முன்னே  
      சொன்னவாறு தம்மை வரவேற்க அலங்கரிக்கப்பெற்று விளங்கும்  
      திருவீதியினுள்ளே செல்வாராய நம்பிகள்; திருத்தொண்டர் ... பாடி -  
      இறைவன் ஆணையின் படி தம்மை வரவேற்க வந்த அந்த  
      அடியவர்களை முன்னிலைப்படுத்திக்கொண்டு, “எமது 
      பெருமான்  
      விரும்பி எழுந்தருளியிருப்பது இத்திருவாரூரேயாகும்;  
      அப்பெருமான் எம்மையும் ஆட்கொண்டருளுவரோ? கேளுங்கள்!“  
      என்ற கருத்துக் கொண்ட மகுடத்தையுடைய சந்தமும் இசையும்  
      பொருந்திய காந்தாரப்பண்ணிலமைந்த திருப்பதிகத்தைப்  
      பாடிக்கொண்டு; தம் பெருமான் திருவாயில் சார்ந்தார் - தமக்கும்  
      அவர்கட்கும் பெருமானாகிய புற்றிடங்கொண்டாரது கோயில்  
      திருவாயிலை அடைந்தார். 
       
           (வி-ரை.) 
      வணங்குபவார் - மேற்பாட்டிலே எதிர்கொண்டார் 
       
      என்றதற்கு எதிர் கொண்டு வணங்கினார்கள் எனக்கொள்க. அவ்வாறு  
      வணங்கினாராகிய அடியார்கள். 
       
           முன் - 
      அடியவர்களும் தாங்கள் முன்னே வணங்கினார்கள்.  
      அவர்கள் வணங்கு முன்னே நம்பிகள் அஞ்சலி கூப்பினார்கள். இது  
      இவர்கள் தாம் தாம் முன்னம் வணங்குதல் வேண்டுமென்று கொண்ட  
      கருத்தினை விளக்கியது. வரிசை 244-ம் பாட்டில் “முன்  
      பிறைஞ்சினரியாவ ரென்றறியா முறைமையாலெதிர் வணங்கி“  
      என்றதும் இது. அடியவர்கள் முன்னர் என்று இடத்தைக்  
      குறிப்பதாகக் கொள்ளினும் அமையும். 
       
           அஞ்சலி கூப்பி 
      - தம் கைகளை அஞ்சலியாகச் சிரமேற்  
      குவித்து. 
       
           சிந்தை களிப்புற - 
      கூந்தப் பெருமான் ஆணையிட்ட  
      திருஆரூர்த் தலத்தை யடைந்தோம் எனவும், ஆரூர்ப் பெருமான்  
      ஆணையின்படிப் போந்த இவ்வடியவர்களை வணங்கப்பெற்றோம்  
      எனவும் நம்பிகள் மனமகிழ்ந்தார். “நம்பிரானாராவார் அவரே“  
      என்று துணிந்து எதிர் கொண்ட அடியவர்கள் இந்த நம்பிகளைக்  
      கிடைத்து வணங்கப்பெற்றோம் என்று சிந்தை களிப்புறுமாறு  
      என்பதுமாம். 
       
           “எந்தை யிருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் 
      ஆள்வரோ  
      கேளீர்“ - இது அத்திருப்பதிகத்தின் மகுடம். இதுவே அப்பதிகத்தின்  
      கருத்தாம். இதனை “எந்தையிருப்பது மாரூர் அவர் எம்மையு  
      மாள்வரோ கேளீர்! என்று சிந்தை செயுந்திறம் வல்லான் ...“ என  
      நம்பிகள் அதன் திருக்கடைக்காப்பில் வைத்தருளினர். ஆதலின்  
      அதனையே ஆசிரியர் இங்குத் தலைப்பெய்து வைத்துக் காட்டினர்  
      என்க.  
       
           எம்மையும் 
      - அடியவர்கள் முன்பு நம்பிகள் தம்மைத்தாழ்த்திக் 
      கூறிக்கொண்ட படியாம். உம்மை இழிவு சிறப்பு. மிகக் கடையேனாய்,  
      ஆட்கொள்ளப் பெறும் தகுதிபெறாத என்னையும். என்னையும்  
      என்போல்வாரையும் என்று உளப்படுத்தி எம்மை எனப் பன்மையாற்  
      கூறினார். “என்னையும்வந் தாண்டு கொண்டான்“ - “நம்மையுமோர் 
       
      பொருளாக்கி“ என்பனவாதி திருவாசகங்களையும்,  
      “என்னையுமடியனாக்கி“ - என்ற கந்தரபுராணத்தையும் காண்க.  
       
           கேளீர் 
      - நீங்கள் பழ அடியீர்கள். திருவாரூரிலே பிறக்கும்  
      பெருமைத் தவமுடையீர்கள்; எனது தகுதியின்மை நோக்கி இகழாது,  
      உங்கள் உரிமையாலே உங்களது விண்ணப்பத்திற் கிணங்கி, என்னை  
      ஆள்வரோ? அதைப் பழகிய நீங்கள் அவரிடம்கேட்டுச்  
      சொல்லுங்கள் என்ற குறிப்பாம். 
       
           இவ்வாறே திருஞான சம்பந்த சுவாமிகள் திருவாரூரைத் 
       
      தரிசிக்க எழுந்தருளியபோது தம்மை எதிர்கொண்ட அடியார்களை  
      நோக்கி, உங்கள் இறைவனாகிய “திருவாரூரான் வருந்தும்  
      போதெனை வாடல் எனுங் கொலோ“ என்று வினவித் திருப்பதிகம்  
      பாடியருளினர். அப்பர் சுவாமிகளும் இவ்வாறே அடியவர்களை  
      வினவி “நமக்குண்டு கொலோ ... ஆரூர் அவிர்சடையான் ...  
      தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே“ என்று பாடியருளினர்.  
      அடிமைத் திறத்தின் சிறப்புப் பொருந்திய தலம் திருவாரூர் என்பது  
      இங்கே. “திருத்தொண்டத் தொகை“ பாடியருளப் பெற்றமையாலும்,  
      “நிலவு தொண்டர்தங் கூட்ட நிறைந்துறை“யத் தேவர்கள் வணங்கி  
      நிற்கும் தேவாசிரியன் விளங்குகின்றமையாலும் காணப்பெறும்.  
      இத்தலத்தே வாழ்வாராம் அடியார்களின் சிறப்பாவது இறைவனால்  
      முன்னமே ஆட்கொள்ளப் பெற்று இனியுமோர் பிறப்பில்லாத  
      பக்குவான்மாக்களே இங்குப் பிறக்கும் பேறுபெறுகின்றார் என்பதாம்.  
      இங்குப் பிறப்பிற் செலுத்துகின்றமையாலே இறைவன் இவர்களை  
      முத்தியிற் செலுத்துகின்றான். இதனாலே “திருவாரூர்ப் பிறந்தார்கள்  
      எல்லார்க்கு மடியேன்“ என இவர்கள் திருத்தொண்டத் தொகையிலே  
      தனியாகத் துதிக்கப்பெற்றனர். ‘ஆரூர்ப் பிறக்க முத்தி' என்பது  
      பழமொழி. “பிறந்தவர் பிறவாப் பெரும்பதி யகத்தும்“ என்றார்  
      கல்லாடனாரும். இவர்கள் முன்னமே இறைவனால்  
      ஆட்கொள்ளப்பெற்ற முத்தான்மாக்களாதலின் மேலே காட்டியபடி  
      மூன்று ஆசாரியன்மார்களும் இந்த அடியவர்களை வினவிப் பதிகம்  
      பாடிப் பின்னரே தலத்துட் சென்று ஆண்டானைப் பாடி யருளினர்  
      என்க. 
       
       
      
         
          “பத்துடையீர்! 
            ஈசன் பழவடியீர்! பாங்குடையீர்! 
            புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ?“ | 
         
       
       
      என்ற திருவாசகக் கருத்தையும் 
      இங்கு வைத்துக் காண்க. 
       
           சந்த இசைத் திருப்பதிகங்கள் 
      - பதிகமாவது பத்துத்  
      திருப்பாட்டுக்களின் தொகுதியாதலின் பன்மையாற் கூறினார்.  
      மேற்கூறிய சிறப்புப் பற்றிய பன்மை என்று கொள்ளலுமாம். தேவாரப்  
      பதிகத்தின் ஒவ்வோர் திருப்பாட்டையுமே பதிகம் என்றும், பனுவல்  
      என்றும் கூறும் வழக்கும் உண்டு. “திருப்பதிகம் விண்ணப்பம்  
      செய்வார்“ என்று தேவாரம் ஓதுபவர்களைக் கல்வெட்டுக்களிற்  
      குறித்தமையும் காண்க. சந்தமும் இசையும் கூடிய திருப்பதிகம் என்க.  
      “சந்த மிசையொடும் வல்லார்“ என்று இப்பதிகத்தின் திருக்கடைக்  
      காப்பில் நம்பிகள் அருளியதை ஆசிரியர் இவ்வாறு எடுத்துக்  
      காட்டியபடி.  
       
       
      
         
          | பதிகம் | 
          (பண் 
            - காந்தாரம்) | 
          திருவாரூர் | 
         
       
       
      
       
      
         
          கரையுங் 
            கடலு மலையுங் காலையு மாலையு மெல்லாம் 
            உரையில் விரவி வருவா னொருவ னுருத்திர லோகன் 
            வரையின் மடமகள் கேள்வன் வானவர் தானவர்க்  
                                                  கெல்லாம் 
            அரைய னிருப்பது மாரூ ரவ ரெம்மையு மாள்வரோ  
                                                   கேளீர். | 
          (1) | 
         
         
          |   | 
            | 
         
         
          ‘எந்தை 
            யிருப்பது மாரூ ரவ ரெம்மையு மாள்வரோ'  
                                                   வென்று 
            சிந்தை செயுந்திறம் வல்லான் றிருமரு வுந்திர டோளான் 
            மந்த முழவ மியம்பும் வளவய னாவலா ரூரன் 
            சந்த மிசையொடும் வல்லார் தாம்புக ழெய்துவர் தாமே.  | 
          (11) | 
         
       
       
       
           பதிகக் 
      குறிப்பு :- மேலே குறிக்கப் பெற்றது. அரையன் -  
      இனியன் - எல்லை - இறைவன் - ஆதி - அருத்தன் - எந்தை -  
      அண்டன் - அமரன்- ஈசன் - இருப்பதுவும் இத் திருவாரூர். அவர்  
      எம்மையும் ஆள்வாரோ? அவருடன் பழகிய நீங்கள் கேட்டு  
      எமக்குச் சொல்லுங்கள் என்பதாம். 
       
           பதிகப்பாட்டுக் குறிப்பு 
      :- (1) கரை - கடல் - மலை - கரை  
      - மருதத்தையும் முல்லையையும், கடல் - நெய்தலையும், 
      மலை -  
      குறிஞ்சியையும், காலையும் மாலையும் - கால 
      வரைகளையும்  
      குறிக்கும். எல்லாம் - எல்லா இடத்திலும் 
      எல்லா காலத்தும், நம்பிகள் 
      மறவா மனம் பெற்றதும், தவநெறி பெற்றதும் ஆகிய முன் சரிதங்  
      காண்க.  
       
           உரையில் விரவி வருவான் - பேச்செல்லாம் 
      அவன்  
      புகழேயாம். 
       
           வானவர் 
      - தேவர்க்கு அரையனானமை தேவலோகத்தில்  
      இறைவனாய் எழுந்தருளியதாற் காண்க. தானவர்க்கரையன் என்பது  
      சூரபதுமன், இராவணன் முதலியவர் வலிமை எல்லாம் இறைவ  
      னருளினாற்பெற்ற வரத்தின் வலிமையே என்பதாம்.  
       
           எல்லாம் 
      - எல்லா வகையாலும்; ஏனை எல்லாருக்கும்  
      என்றலுமாம். (2) தனியன் என்று எள்கி யறியேன் - நகைச் சுவை.  
      இறைவன் தனித்தவன். “நின்னாவார் பிறரின்றிநீயே ஆனாய்“,  
      “ஏகமேவாநத்துவிதீயம்“ முதலிய வேதங்கள் காண்க. உகப்பன் 
      -  
      இகழாமையே யன்றி உகத்தலும் பெரிதும் செய்வன்; அன்றியும்,  
      எள்கி -இகழ்ந்து - முனிபவர் தம்மை முனிவன் - இகழ்வாரை  
      முனிந்து இகழ்வேன். சத்தி நாயனார், சண்டீச நாயனார் முதலிய  
      பெரியார் சரிதங்கள் காண்க. முகம் - முகமண். 
      உண்மையற்ற  
      உபசாரமொழி. கமுகின் சோலை ஆரூர் என்று கூட்டுக. (3) குலா -  
      பெருமகிழ்ச்சியினையும் அதன் மெய்ப்பாட்டையும் காட்டுவதோர்  
      சொல். “குலாத்தில்லை யாண்டான்“, “குலாப்பத்து“ என்பவை 
       
      காண்க. இங்கு ஆடம்பரமொழி என்ற பொருளில் வந்தது. கற்ற 
       
      பெரும் புலவாணர் - மனமடங்கக் கற்றுத் தம்மை யடையும்  
      புலத்திற் சிறந்தோர். எல்லை - மறைகளால் 
      எல்லாப்  
      பொருள்கட்கும் எல்லையாக - முடிந்த இடமாகக் - கூறும் பொருள்,  
      “உலகுய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார்“ (திருநாபைப்  
      புரா - 35) “அலகின் கலையின் பொருட்கெல்லை யாடுங்கழலே“  
      (சண்டீசர் புராணம் - 15) (4) நெறி - அறிவு - செறிவு - நீதி -  
      மக்கள்பால் அமைய வேண்டுவனவாகிய நல்லன. பொல்லேன் 
      -  
      இவைகள் என்பால் நன்மையாய் அமையாது தீநெறி முதலியனவாக  
      நின்றேன். “சீலமின்றி நோன்பின்றிச் செறிவேயின்றி யறிவின்றி“ - 
       
      திருவாசகம், ஆனந்தமாலை, 3. மிறை - தறி - சொல், செயல்களின்  
      இழிபு. வேண்டிற்று - மனம் போன போக்கு. (5) 
      நிட்கண்டகம் -  
      ஒருபாற் கோடாமை. நமர் பிறரென்பதறியேன். (9) என்பதும் காண்க.  
      (8) மிண்டர்க்கு மிண்டலாற்பேசேன். “இட்டார்க் கிட்டபடி“ என்பது 
      பழமொழி. இது நம்பிகளது உள்ள நிலையையும், பேச்சு நிலையையும்  
      உணர்த்தும். (10) ஆரையுமன்றி யுரைப்பேன் - “ஒருவரை மதியா  
      துறாமைகள் செய்து மூடியு முறைப்பனாய்த் திரிவேன்“  
      (திருமுல்லைவாயில்) (11) முதலிய நம்பிகளது தேவாரங்கள் காண்க.  
      என்று - பதிகக் கருத்தைக் குறித்தது.  
       
           தலவிசேடம் 
      - திருநகரச் சிறப்பின் இறுதியில் 163, 164  
      பக்கங்கள் பார்க்க. சோழ மன்னர்களின் தலை நகரங்களில் ஒன்று.  
      அவர்கள் முடிசூட்டிக் கொள்ளும்தலங்களான ஐந்து நகரங்களில்  
      ஒன்று. (சண்டீசர் புராணம் - 8) தேவாரங்களை வெளிப்படுத்திய  
      அபயகுலசேகர சோழரும் இப்புராணம் பாடுவித்த அநபாயச்  
      சோழரும் எழுந்தருளி ஆட்சி புரிந்த தலம். 123 
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |