271. புற்றிடங் கொண்ட புராதனனைப்
     பூங்கோயின் மேய பிரானை யார்க்கும்
 
  பற்றிட மாய பரம்பொருளைப்
     பார்ப்பதி பாகனைப் பங்க யத்தாள்
அர்ச்சனை செய்ய வருள்புரிந்த
     வண்ணலை மண்மிசை வீழ்த்தி றைஞ்சி
நற்றமிழ் நாவலர் கோனு டம்பா
     னன்மையின் றன்மையை மெய்மை
                               பெற்றார்.
125

     (இ-ள்.) புற்று ... புராதனனை - புற்றினைத் தாம் விரும்பி
வெளிப்பட வாழும் இடமாகக் கொண்டருளும் பழமையான
பெருமானை; பூங்கோயில் ... பிரானை - பூங்கோயிலிலே
எழுந்தருளிய பெருமானை; யார்க்கும் ... பரம்பொருளை -
எல்லாவுயிர்களுக்கும் பற்றுக்கோடாகிய முழுமுதற் கடவுளை;
பார்ப்பதி பாகனை - பார்வதியைப் பாகத்தில் வைத்தவனை;
பயங்கத்தாள் ... அண்ணலை - தாமரைபோன்ற தமது சீபாதங்களை
அருச்சிக்கும் பேற்றைத் தமக்குக் கொடுத்தருளிய
பெருமையுடையவனை; மண்மிசை .... பெற்றார் - தரையில் விழுந்து
வணங்கி நல்ல தமிழ் வல்லவராகிய திருநாவலூரர்பெருமான்
இவ்வுடம்பு எடுத்ததனால் அடையவேண்டிய நற்பயனை
உண்மையாகவே அடைந்தார்.

     (வி-ரை.) புற்றிடங் கொண்ட புராதனனை - புற்றிலே
என்றைக்கு வெளிப்பட எழுந்தளினார் என்றறியக்கூடாதபடி மிகப்
பழமையாயுள்ளவன். “மாடமொடு மாளிகைகண் மல்கு தில்லை
மணிதிகழு மம்பலத்தே மன்னிக் கூத்தை ஆடுவான் புகுவதற்கு
முன்னோ பின்னோ அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே“
“தேசமுமை யறிவதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக்
கொண்ட நாளே“ எனவரும் திருத்தாண்டகங்களின் பொருளை
உற்று நோக்குக. புராதனன் - மிகப் பழமை வாய்ந்தவன்.
“முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி“ -
(திருத்தாண்டகம்) “முன்னைப் பழம்பொருட்குப் முன்னைப்
பழம்பொருளே“ - (திருவாசகம்). புற்றிடங் கொண்டவனும்
பழமையுடையவனும் என்றுரைத்தலுமாம்.

     யார்க்கும் பற்றிடமாய பரம்பொருள் - மக்கள், தேவர்,
நரகர் முதலிய எவ்வுயிர்க்கும் தன்னையன்றி வேறு பற்றுக்கோடு
இல்லாத பெரும் பொருளாவான்.

     பங்கயத்தாள் அர்ச்சனை செய்ய அருள்புரிந்த அண்ணல் -
முன்னே கயிலையில் மலர்மாலையும் நீறும் எடுத்து அணைந்து
அருச்சிக்க அருளினார்; இங்கு வழிவழியடிமை செய்யும் வேதியர்
குலத்திற்றோன்ற அருளினார்; ‘பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை
பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக'
என்று அருளிப் “பித்தா“ என்று தொடக்கமும் கொடுத்து
அருளினார்; பின்னர்த் தவநெறி தந்து தம்மைப் பூசை செய்ய
அருளினார்; இவ்வகையாக அருள்புரிந்த பெரியவன் - இவ்வாறு
எண்ணி யிறைஞ்சிய வழியே பின்னரும் “மன்பெ ருந்திரு மாமறை
வண்டுசூழ்ந்தன்பர் சிந்தை யலர்ந்தசெந் தாமரை“, “பூத நாதநின்
புண்டரி கப்பதம்“ எனப் போற்றி யருச்சிக்கும்படிப் பெற்று
அத்துதியின் துணையானே, அவ்வழி நின்று, திருத்
தொண்டத்தொகை பாடியருளக் காரணமாயினமையும் குறிக்க. இனி
இவ்வாறன்றிப் பங்கயத்தாள் என்றதைத் “தாமரையினாள்“
எனக்கொண்டு இலக்குமி இத்தலத்தே தவஞ்செய்ய அவளுக்கு
அருள்புரிந்த அண்ணல் என்று உரைப்பினுமமையும். 86-ல்
மாமலராள் வழிபட்டது. என்றமை காண்க.

     உடம்பால் நன்மையை - உடம்புடன் கூடிய பிறவி
எடுத்ததனால் உளதாம் உறுதிப்பயனை. “ஊனடைந்த உடம்பின்
பிறவியே, தானடைந்த உறுதியைச் சாருமால்“ என்றது காண்க.

     மெய்மை - மெய்யி(உடம்பு)னது உறுதிப்பயன். இவ்வாறே
உள்ளத்தின் உறுதிப் பயனுக்கு உண்மை என்றும், வாயின் உறுதிக்கு
வாய்மை என்றும் வருவன காண்க. இவை மனம் வாக்குக் காயம்
என்ற மூன்றின் சத்திய நிலைகளுக்குப் பெயராகக் கூறப்படும்.
நம்பிகள் இவ்வுடம்பு எடுத்ததின் உறுதிப் பயனாவது “மாதவஞ்
செய்த தென்றிசை வாழ்ந்திடத் தீதிலாத் திருத்தொண்டத் தொகைதர“
வருதலாம் என்றறிந்தோம். அது இங்குத் திருவாரூரிலே தான்
இப்போது நிகழப்போவதாம். ஆதலின் நன்மையின் தன்மையைப்
பெற்றார் என்றவமயாது மெய்மை பெற்றார் என்றார்.

     உடம்பின் தன்மை பிராரத்தத்தை அனுபவித்தலும்,
சிவதருமங்களைச் செய்து மேலும் பிறவிவாராமற்
செய்துகொள்ளுதலுமாம். கருவுற்ற நாள் முதலாக அடையப்
பெறுதலால் பிராரத்தம் என்ற காரணப்பெயர் வந்தது. பிராரத்தம்
அனுபவித்த பின்னர் மேலும் வினைகள் ஏறாதிருக்கவேண்டும்.
ஆதலின் உடம்பின் முயற்சி யாவும் சிவதருமத்திலே செலுத்தப்
பெறவேண்டும் என்பதாம். ஆதலின் உடம்பால் (ஆன) தன்மையின்
தன்மையை மெய்மை பெற்றார் என்றார். 125