273.
|
வாழிய
மாமறைப் புற்றி டங்கொண்
மன்னவ னாரரு ளாலோர் வாக்குத்
‘தோழமை யாக வுனக்கு நம்மைத்
தந்தனம்' நாமுன்பு தொண்டு கொண்ட
வேள்வியி லன்றுநீ கொண்ட கோல
மென்றும் புனைந்துநின் வேட்கை தீர
வாழிமண் மேல்விளை யாடுவாயென்
றாரூரர் கேட்க வெழுந்த தன்றே.
|
127 |
(இ-ள்.)
வெளிப்படை. உயிர்கள் தம்மை வழிபட்டு
வாழ்வடையும் பொருட்டுப் பெரிய வேதங்களின் உருவாகிய புற்றை
இடமாகக்கொண்டு எழுந்தருளிய இறைவனது நிறைந்த
திருவருளினாலே நம்மையே தோழனாக உனக்குத் தந்துள்ளோம்;
நாம் முன்னே உன்னைத் தடுத்து ஆட்கொண்ட கல்யாணத்திலே
அன்றைக்கு நீ கொண்டிருந்த மணக்கோலத்தையே என்றைக்கும்
பூண்டவனாகி உனது ஆசை தீரும்படி இந்நிலவுலகத்திலே
விளையாடுவாயாக; நீவாழி என்று ஒரு வாக்கு நம்பியாரூரர் (பாடிய)
அப்பொழுதே கேட்டுகும்படி எழுந்தது.
(வி-ரை.)
வாழிய - வாழும்பொருட்டு. உயிர்கள் வாழ என்று
வருவித்துக் கொள்க. செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.
இதற்கு, இவ்வாறன்றி வாழிய - வாழ்க - நம்பியாரூரரை
வாழ்த்தியவாறு என்றும், பின்னரும். வாழிமண் மேல் என
வருதலால் இருமுறை வாழ்த்தினார் என்றும், கூறுவாரும்; வாழிய
என்பதனை அசை என்று ஒதுக்குவாரும்; மேன்மை பொருந்திய
என்றுரை கூறுவாரும் உண்டு. இருமுறை
வாழ்த்தவேண்டியதின்மையானும், இறைவனது வாக்கு ஒரு
தொடர்பாய் வருதலானும், பிறவற்றானும் இவை பொருளன்றென்க.
மாமறைப் புற்று
- மா - பெரிய. தமக்குமேற்
பிரமாணமில்லாமல் தமக்குத்தாமே பிரமாணமாயுள்ளது.
வேதங்களாகிய புற்று. இறைவன் வேதங்களுட் குடியிருந்தருளுவன்
என்பது கருத்து. மாமறைப் புற்று வாழிய இடங்கொள் - என மாற்றி
மறைப்புற்றைத் தாம் வாழுமிடமாகக் கொண்ட என வுரைப்பினுமாம்.
புற்று இடங்கொள்
- உள்ளிருக்கும் பொருளை மறைத்துப்
பொதிந்து மேல் மூடியிருப்பது புற்றினது இயல்பு. அவற்றை
இறைவனது இருப்பிடமாக உணராதார்க்கு அவை
உண்மைப்பொருளை உணர்த்தாமையின் மறைப்புற்று என்பதாம்.
"வேத மோதிலென்?
சாத்திரங் கேட்கிலென்? - நீதி நூல்பல
நித்தல் பயிற்றிலென்? ஓதி யங்கமொ ராறு முணரிலென்? -
ஈச னயுள்கு வார்க்கன்றி யில்லயே"
என்ற அப்பர்
பெருமானது பாவநாசக் குறுந்தொகைப் பதிகக்
கருத்தை உன்னுக. புற்றின் உள்ளே வாழும் பொருள் நீலகண்ட
மணியாகித் துன்பத்துக்கும் இன்பத்துக்கும் காரணமாயிருத்தலால்
மறைப்புற்றென்று உபசரிப்பர். துன்பமு மாயின்ப மாயினார்க்கு -
திருவாசகம்.
மன்னவனாரருள்
- இறைவனது நிறைந்த திரு அருள்.
மன்னவனாரது அருள் என்றலுமாம்.ஓர் வாக்கு - அசரீரியாக வானில்
எழும் நாதம். 254 பாட்டுக் காண்க. வழுவா வோசை முழுதுநின்
வாய்மொழி என்று பட்டினத்தடிகள் அருளிய பதினொராந்
திருமுறை காண்க.
தோழமையாக உனக்கு
நம்மைத் தந்தனம் - நாம் உனக்கு
நம்மைத் தோழமையாகத் தந்தனம் என மாற்றிக்கொள்க. நம்பிகள்
தமக்கு இறைவனைத் தோழமையாகப் பெற்ற வரலாறு அவர்
தேவாரத்துப் பலவிடத்தும் காணலாம்.
என்னுடைய
தோழனுமாய் - திருவாரூர் - பழம்பஞ்சுரம்
- 10. என்றனையாள் தோழனை - திருக்கானப்பேர் - புறநீர்மை -
9. தன்னைத் தோழமை யருளித், தொண்டனேன் செய்த துரிசுகள்
பொறுக்கும், நாதனை - திருநள்ளாறு - தக்கேசி - 8. முதலிய
பலவும் காண்க. இக்காரணம் பற்றியே நம்பிகளைத் தம்பிரான்
தோழர் என்ற பேரால் அடியவர்கள் வழங்கினார்கள் என்பது 275-ம்
பாட்டிற் காண்க. சைவ நால்வழிகளிலே நம்பிகள் தோழர்நெறியை
விளக்க வந்தவர் என்பதும் காண்க. தந்தனம் - தாவென் கிளவி
ஒப்போன் கூற்றே (தொல் - சொல் - ஏச்சவியல் - 50) என்பது
விதி. தோழமை என்பது ஒப்புமைபற்றி உண்டாகும் உரிமையாதலின் தந்தனம் என்ற சொல்லாற்
கூறினார். நம்பிகள் இறைவனது
திருவுருவேயாய் வந்தமை 26-ம் பாட்டின் கீழ்க் காண்க. தந்தனம் -
‘அவனருளாலே அவன்றாள் வணங்கி' என்றும், ‘தந்ததுன் றன்னை'
என்றும் அருளியபடி அவரே தாராவிடில் உயிர்கள் பெறுமாறில்லை;
ஆதலின் நம்மைத் தந்தனம் என்றார்.
எவ்வுயிர்க்கும் ஈசன் தோழனாய் உடனிருப்பார்;
ஆயினும்,
தாவியவனுடனிருந்தும் காணாத தற்பரன் என்றபடி உயிர்கள்
அவனை அறிவதில்லை. அவ்வாறன்றி இவர் அறியும்படி தந்தது
இவர் பெருமையை உலகறிந்து உய்வதற்கு என்க. இறைவன்
தம்மையே ஆரூரருக்குத் தோழமையாகத் தந்துவிட்டாராதலின்
பின்னர்ப் பரவையார் திருமணம், சங்கிலியார் திருமணம், பரவையார்
ஊடல் தீர்த்தல் முதலியவற்றில் பாங்கற்கூட்டம் முதலிய
அகப்பொருட்டுறைகளிலே சரித நிகழ்ச்சிகளின் அமைவு
காணப்பெறும். பின்னும் இதனாலே நம்பிகள் செயல் தோழர்
செயலேயாதலுமாம்.
நாம் முன்பு தொண்டு
கொண்ட - முன்பு உன்னை நாம்
கிழவேதியராய் வந்து தடுத்துத் தொண்டனாகக் கொண்ட.
வேள்வியில்
- மனத்திலே. வேட்டற்குரியதாதலின் மணம்
வேள்வி எனப் பெற்றது. காட்டுநல் வேள்விக்கோலம்,
திருவேள்விக்குடியிற் றிகழ்மணவாளநற் கோலம் (திருஞானபுரா -
291) தென்னவர் கோன் மகளாரைத் திருவேட்டு (கழறிற்று - புரா -
92) முதலியவை காண்க. எனவே,வேள்வியில்லாதது மணமாகாதென்க.
அன்று நீ கொண்ட
கோலம் - மன்னவர் திருவும் தங்கள்
வைதிகத் திருவும் பொங்கக் கொண்ட திருமணக் கோலம். 163 -
164 பாட்டுக்கள் பார்க்க.
நின்வேட்கை தீர
- வேட்கை - வேட்டல் செய்யும் தொழில்.
தீர - இனி அத்தொழில் உனக்கு நிகழாதபடி (தடுத்தாட்கொள்ளப்
பெற்றமையால்). நீ மண்மீது இருந்தாலும் இனி அவ்விதமான வேள்வி
முதலிய உலகத் தொடக்குகள் நிகழாதபடி என்க. இனி, வேட்கைதீர
என்பதற்கு என்பால் வைத்த ஆசை எல்லாம் அனுபவித்து
மனஅமைதி உண்டாம்படி என்றுரைத்தலுமாம். ஆசைதீர - ஆசை
கொண்ட பொருள் போதும் என்று அமையும்படி. ஆசைதீரக்
கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார் (திருஞான - தேவாரம்
- காந்தாரம் - கடவூர் மயானம் (7) என்றது காண்க. மாதவஞ் செய்த
தென்றிசை வாழ்ந்திடப் போந்தனராவர் நம்பிகள் ஆதலின்
இப்பொருளில், மண் மேல் என்பதற்கு இந்தப்பூமி சிவனுய்யக்
கொள்கின்றவாறு என்ற ஆசையால் பூசனைக்குப் பொருந்துமிடம்
பலவற்றிலும் சென்று போற்றி வாழ்ந்து உலகத்தை வாழச்
செய்வதனாலே தம்முடைய ஆசை முற்றப்பெற என்க. இந்த
ஆசைகளாவன மணிவாசகனார் ‘ஆசைப்பத்திலே' சொல்லியருளிய
ஆசைகளேயாம்.
மண்ணின்மேல்
- கர்மபூமியாய் - மேன்மேலே கருமத்துக்குக்
காரணமாய் உள்ள இம்மண்ணுலகிலே. நீ அவ்வாறு
தொடக்குண்ணாமல் என்பது குறிப்பு.
விளையாடுதல்
- மண்ணிற் பிறப்புத் தீமை என்று
துன்பமுறாமல், இன்பமென்றுணர்ந்து, மனித்தப் பிறவியும்
வேண்டுவதே இந்த மாநிலத்தே என்று மகிழ்ந்து அனுபவித்தல்.
தந்நியதியில் நிற்றல் என்றலுமாம். ஈவிளையாட என்ற
திருக்கோவை (133)ப் பாசுரங் காண்க.
அன்றே
- தொழுது இன்னிசைபாடிய அன்றையதினமே. இதை
அசையாக உரைப்பாருமுண்டு. ஆழி மண் - கடல் சூழ்ந்த நிலவுலகம்
என்றலுமாம்.
இவ்வாறின்றி ‘வேட்கை தீர' என்பதற்குத்
திருக்கயிலைநந்தனவனத்தில் கொண்ட ஆசையாகிய காதல்
தீரும்படி என்று பொருளுரைப்பாருமுளர். அதற்கு மண்மேல்
விளையாடுதல் அவசியமின்மையாலும், இங்குப் புற்றிடங் கொண்டார்
வாக்கன்றியே திருக்கயிலை ஆணையின்படி அவை நிகழ்வன
ஆதலானும், நம்பிகள் உலக வாழ்வுற்று அவ்வாசைதீர
விளையாடுதல் பொருளன்மையானும், பிறவாற்றானும் அது
பொருந்தாமை உணர்க. 127
|