274. கேட்க விரும்பிவன் ரெண்டே ரென்றுங்
     கேடிலா தானை யிறைஞ்சி நின்றே
 
  “யாட்கொள வந்த மறையவனே!
     யாரூ ரமர்ந்த வருமணியே!
வாட்கயல் கொண்டகண் மங்கை பங்கா!
     மற்றுன் பெரிய கருணை யன்றே
நாட்கம லப்பதந் தந்த தின்று
     நாயினே னைப்பொரு ளாகவென்றார்.“
128

     (இ-ள்.) கேட்க...நின்றே - திருவாக்குக்கேட்டலும் நம்பிகள்
எக்காலத்தும் அழிவில்லாதவராகிய புற்றிடங் கொண்டாரை மிக்க
விருப்பத்துடன் வணங்கி நின்று; “ஆட்கொள ... ஆக“ - “(அன்று
உலகுக் காளாவதைத் தடுத்து) உனக்கு ஆளாக கொள்ளும்படி
வந்தருளிய மறையவனே! (இன்றும் அது போலவே ஆளாகக்
கொள்ளத்) திருவாரூரிலே விரும்பி எழுந்தருளிய அரிய
மணிபோல்பவரே! வாளின் தன்மையும் கயல் மீனின் தன்மையும்
தம்மிடத்தே வைத்துக்கொண்ட கண்களையுடைய உமை அம்மை
பங்கரே! நாய் போன்ற என்னையும் ஒரு பொருளாக மதித்து
(அன்று போலவே) இன்றும் உனது புதிதலர்ந்த பாத தாமரையாகிய
அருளைத் தந்த செயல் (எனது தகுதியாலன்றித்) தேவரீரது
பெருங்கருணையா லல்லவா நேர்ந்தது“?; என்றார் - என்று துதித்தார்.

     (வி-ரை.) கேட்க - விரும்பி - இறைஞ்சிநின்றுமறை யவனே
- மணியே - பங்கா தந்தது - கருணை யன்றே என்றார் என
வினைமுடிவு செய்க.

     விரும்ி - விருப்பம் மிகுந்தவராய்.

     என்றும் கேடிலாதான் - நித்தியமாக உள்ளவன் -
அழிவில்லாதவன். ஆன்மாக்களும் கேடிலாதவையாயினும் அவை
எடுக்கும் அழியும் தன்மை வாய்ந்த உடம்பின் சார்வுபற்றி அவையும்
கேடடையும் என்று உபசரிக்கப் பெறும். இறைவன் அவ்வாறு
கேடிலாதவன் என்க.

     ஆரூர் அமர்ந்த - திருவாரூரை விரும்பி எழுந்தருளியிருந்த.

“அமரர்நா டாளாதே யாரூ ராண்ட வயிராவணமே“
“மாதோர் பாகந் திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே“

                       - திருவாரூர் - திருத்தாண்டகம்

என்பனவாதி திருவாக்குக்கள் காண்க.

     அருமணியே - புற்றிலே அரவின் மணியிருத்தல்
இயல்பாதலின் மணியே என்றார்.

     வாட் கயல் கொண்ட கண - உயிர்களின் மலம் அறுத்தலால்
வாளின் தன்மையும், அருட்பார்வையாற் கட்டு நீக்கி (மீன் தனது
முட்டைகளைப் பார்த்த லாலே அவற்றுட் கட்டுண்டு இருக்கும்
குஞ்சுகளைக் கட்டு நீங்கி வெளி வந்து குஞ்சுகளாகக் குலாவச்
செய்தல் போல) நிலவச் செய்தலால் மீன் பார்வைத் தன்மையும்
ஒருசேரத் தன்னிடத்தே கொண்ட கண்களையுடையார் உமாதேவியார்.
பாசநீக்கமும் சிவப்பேறும் என்ற இரண்டும் தருவது திருவருளே
யாதலின் வாளும் கயலும் என இரண்டு உவமை கூறினார்.
உருவத்தால் வாள் போன்ற தாயினும் செயலால் கயலின் தன்மை
கொண்ட என்றுரைத்தலுமாம். முன் தடுத்தாட்கொண்டது
பாசநீக்கமாகிய வாளின் தன்மையும், தன்னையே தந்து அநுபவிக்கச்
செய்தது சிவப்பேறாகிய கயலின் தன்மையுமாதலின் இவற்றை
முறையே மேலே கூறிய மறையவனுக்கும் மணிக்கும் பொருந்திப்
பொருள் உரைத்துக் கொள்க.
வாள் - கயல் - இவ்விரண்டின்
நலத்தையும் கொண்ட கண் என்பது இராமநாதச் செட்டியார் குறிப்பு.

     மற்று உன் பெரிய கருணையன்றே பதம்தந்தது இன்று - (மற்று
- வேறாக. பொது நோக்காலன்றி என்மேற்) சிறப்பாக வைத்த உனது
பெருங்கருணையே நீ தோழனாய் இப்பெருமையாகிய உனது
திருவடித்துணையைத் தந்தது என்றபடியாம். நமது
தகுதியின்மையையும் சிறுமையையும், (அங்ஙனமாகவும்
பிழைபொறுத்து மீளா ஆளாக ஆளும்) அவரது கருணையின்
பெருமையையும் எண்ண வேதான் அவர்பால் அன்பு பெருகி நாம்
உய்ய ஏதுவாகும் என்பது.

“அத்தாவுன் னடியேனை யன்பா லார்த்தா
     யருணோக்கிற் றீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியைநீ எளியை யானாய்
     எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயே னாயேன்
     பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ? ஐய! வையோ!!
     எம்பெருமான் திருக்கருணை யிருந்தவாறே“

       - அப்பர் சுவாமிகள் - பொதுத் திருத்தாண்டகம்

“வெறுப்பனவே செய்யுமென் சிறுமையைநின் பெருமையினால் பொறுப்பவனே“       - திருவாசகம் - அடைக்கலப்பத்து

என்று வருவனவாதி திருவாக்குக்கள் காண்க.

     நாயினேனைப் பொருளாக
- நாய் போன்ற என்னையும்
ஒருபொருட்படுத்தி. பொருளில்லாத நான் ஒரு பொருள் ஆகும்படி
என்றுரைத்தலுமாம். “நாயினேனை நல மலி தில்லையுட்,
கோலமார்தரு பொதுவினில் வருகென“ (கீர்த்தித் திருவகவல்.)

“நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருளாக்கித்
தாயிற் பெரிதுந் தயாவுடைய  தம்பெருமான்“

                            -
 திருப்பூவல்லி - 3.

“நாயிற் கடையா நாயேனை நயந்து நீயே யாட் கொண்டாய்“                                - குழைத்தபத்து - 8.

“நாய்சிவிகை யேற்றுவித்த வம்மை“ - அச்சேர்ப்பத்து - 6.

எனவரும் திருவாசகங்கள் காண்க. உண்ணத் தக்க பொருள்
இருப்பவும், மலம் உண்பது நாய்க் குணம், இறைவன் தந்த அறிவும்,
நூலும், நற்சார்பும் இருக்கவும், தீச்சார்பாகிய உலகை அனுபவிக்கும்
உயிர் இயல்புபற்றி நாயை உவமிப்பது பெரியோர் கொள்கை. ஆனால்
நாய்க்குள்ளதொரு நற்குணமாகிய எசமான விசுவாசம் ஒன்றும்
தம்மிடமில்லை என்றும் வருந்துவர் பெரியோர்.

“நாய்வயி னுள்ள குணமுமில் லேனைநற்
 றொண்டுகொண்ட தீவயின் மேனியன்“

          - 
திருக்கோவையார் - 343.

     பதம் தந்தது - திருவடி அருட்சொரூபமாவது. இறைவனது
அருட்சத்தியே திருவடியாகக் கூறப்பெறும். ஆதலின் அருள்செய்த
தென்னாது பதந்தந்த தென்றார்.

“திருவடி யேசிவ மாவது தேரில்
 திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
 திருவடி யேசெல் கதியது செப்பில்
 திருவடி யேதஞ்ச முட்டெளி வார்க்கே“

    - திருமூலர் திருமந்திரம் - உபதேசம்-
26.

என்றபடி கருணையினால் உனது திருவருளையே தந்தாய் என்பதாம்.

     இன்று நான் உனைத் தரிசித்த இப்போதே. 128