275. என்று பலமுறை யால்வ ணங்கி
     யெய்திய வள்ளக் களிப்பி னோடும்
வென்றி யடல்விடை போன டந்து
     வீதி விடங்கப் பெருமான் முன்பு
சென்று தொழுது துதித்து வாழ்ந்து
     திருமா ளிகைவலஞ் செய்து போந்தார்;
அன்று முதலடி யார்க ளெல்லாந்
     தம்பிரான் றோழ ரென்றே யறைந்தார்.
129

     (இ-ள்.) வெளிப்படை. என்று துதித்துப் பலமுறையாலும்
வணங்கி, மிக்க மனமகிழ்ச்சியுடனே வெற்றிபொருந்திய போரேறு
நடப்பதுபோலத் (திருமூலட்டான நாதர் சந்நிதியிலிருந்து) நடந்து
சென்று வீதிவிடங்கராகிய தியாகேசர் சந்நிதியிற்போய், வணங்கியும்
துதித்தும் அதனால் வாழ்வடைந்தவராய்த் திருமாளிகையை வலஞ்
செய்து (நம்பிகள்) வெளிப்போந்தார். அதுமுதல் அடியார்கள்
எல்லாரும் நம்பிகளுக்குத் தம்பிரான்றோழர் என்ற பெயரையே
வழங்கினார்கள்.

     (வி-ரை.) என்று - மேற் சொல்லியவாறு துதித்து.

     பலமுறையால் - அட்டாங்கபஞ்சாங்கமாகப் பலமுறையாலும்.
முற்றும்மைதொக்கது.

     எய்திய - அவ்வணக்கத்தால் உண்டாகிய.

     வென்றி அடல்விடைபோல் நடந்து - அடையாதாரைப்பொருது
வெற்றிகொண்டு அடைந்தாரைக் காக்கும் (பெருமானது) இடபத்தின்
நடைபோல நடந்தார். இது சிவ பெருமானைத் தமக்கு உற்ற (என்றும்
நீங்காத) தோழராகப் பெற்ற பெருமைகொண்ட உள்ள நிகழ்ச்சியினால்
உளதாகிய புறநிகழ்ச்சி. “ஏறுபோற் பீடுநடை“ - என்ற திருக்குறளுங் காண்க.

“அண்ணல் அரண் முரன் ஏறும்“ 
      - அப்பர் சுவாமிகள் - திருவதிகை.

     “போரேற்றை விலங்கவருள் புரிந்தருளிப் புலப்படுத்தார்“ -
திருநாளை - புரா - 17 எனவரும் திருவாக்குக்களின் கருத்துக்களை
உன்னுக. அடல் - அடுதல்; போர்செய்து விலக்கல். அடலினால்
வென்றிதரும் விடை. வென்றி விடை - அடல்விடை - எனக்கூட்டுக.
“அடல் வேண்டு மைந்தன் புலத்தை“ (குறள்). அடல் - வலிமை
எனக்கொண்டு வென்றி தரும் வலிமையுடைய விடை
என்றுரைப்பதுமாம்.

     நடந்து - இன்ப வெள்ளத்திடைத் திளைத்து மூழ்கி அவ்வாறே
பெயராது நின்றவர் இப்போது அதினின்றும் பெயர்ந்து நடந்தனர்.
மூழ்கி நின்ற நம்பிகளை இறைவன் கேட்பித்த வாக்கு எழுப்பி
நடக்கச்செய்யவே, புற்றிடங் கொண்டாராகிய திருமூலட்டானர்
சந்நிதியிலிருந்து தியாகேசர் சந்நிதிவரை சென்ற நிலையை நடந்து
என்று குறிப்பித்தார்.

     வீதிவிடங்கப் பெருமான - தியாகேசர். திருமூலட்டானத்திலே
இறைவனது அருவுருவத் திருமேனியைத் தரிசித்து அதன்பின்
உருவத் திருமேனி தாங்கிய தியாகேசரைத் தரிசிப்பது முறை.
அருவுருவத்தினின்று உருவந் தோன்றுமென்பது சாத்திரம்.
இத்திருவுருவம் சிவபெருமானது 25 மூர்த்தங்களிற் சிறப்பாக
வைத்தெண்ணப் பெறுவதாகிய சோமாஸ்கந்த மூர்த்தமாம். வீதியில்
எழுந்தருளி அடியார்களுக்கு அருள்புரியும் தியாகேசர் “விடைமருவும்
பெருமா“னாய் வருவாராதலின், அவரைத் தரிசித்துத் தமக்குள்
இருத்திக்கொள்ளச் செல்லும் நம்பிகள் விடைபோல் நடந்து சென்றார்
என்ற சிறப்பை நோக்குக. அவரைத் தமக்குள்ளே எப்போதும்
எழுந்தருளுவித்துத் தாங்கிக்கொண்டு உலகுக்கு உபகரிக்க
வருகின்றார் நம்பிகள் என்பது குறிப்பு. 130-ம் பாட்டின் உரை காண்க.

     தொழுது - துதித்து - வாழ்ந்து - தொழுதல் - உடம்பின்
செயல்; துதித்தல் - வாக்கின் செயல்; வாழ்தல் - இவரை
அடையப்பெற்றோம் என்று மகிழும் மனத்தின் நிகழ்ச்சி; மனம்
வாக்குக் காயமாகிய மூன்றின் செயலும் கூறியபடி. ‘இவரை அடையப்
பெறாது பலர் தமது பொய்வாழ்வை மெய்யாக் கருதி இறக்கின்றார்;
நாம் இவரை அடைந்து வாழ்ந்தோம்' என்ற அனுபவம் குறித்ததாம்.
“உன் பொற்பாத மடையப் பெற்றால் அல்லகண்டங் கொண்டடியே
னென்செய் கேனே“ (திருவானைக்கா - திருத்தாண்டகம்);
“வாழ்ந்தனம் என்று ... ஏனையோர் வாழும் வாழ்க்கையும்“
(திருவிடை மருதூர் மும்மணிக்கோவை) முதலியவற்றின்
கருத்துக்களை நோக்குக. “இம்மையும் பயவா தம்யையு முதவாது,
செச்சைக் ஏண்டத் தொத்தூன் போல, வாழ்வோர் வாழ்க்கையும்
உலகுடைத்து“ - (ஞானாமிர்தம்).

     திருமாளிகை வலஞ் செய்து - 270-ல் கூறி திருமாளிகையாம்.
திருமாளிகையை வலம் வந்தபின்பு உள்ளே சென்று பெருமானைத்
தரிசித்தலும், தரிசித்ததன் பின்பு அவ்வாறே வலம் வந்து
வெளிப்போதலும் சிவாலதயரிசன விதியாம்.

     தம்பிரான்றேழர் - தமது முதல்வனையே தமக்குத்
தோழனுமாகப் பெற்றவர். தம்பிரானுக்குத் தோழர் -
என்றுரைப்பாருமுண்டு. 129