276.
|
மைவளர்
கண்ட ரருளி னாலே
வண்டமிழ் நாவலர் தம்பெ ருமான்
சைவ விடங்கி னணிபு னைந்து
சாந்தமு மாலையுந் தாரு மாகி
மெய்வளர் கோலமெல் லாம்பொ லிய
மிக்க விழுத்தவ வேந்த ரென்னத்
தெய்வ மணிப்புற்று ளாரைப் பாடித்
திளைத்து மகிழ்வொடுஞ் செல்லா நின்றார். |
130 |
(இ-ள்.)
வெளிப்படை. இறைவனது திருவருளினாலே நம்பிகள்
ஆதிசைவருக்குரிய சுந்தர வேடங்களை மேற்கொண்டு, சந்தனம்,
மணிமாலை, பூமாலை என்ற இவற்றையும் பூண்டு, இவ்வாறு
மெய்வளர் கோலங்களெல்லாம் விளங்க, மிக்க தூய தவவேந்தர்
இவரேயென்று சொல்லுமாறு தெய்வ மணிப் புற்றிடங்கொண்டாரை
அன்றுமுதல் நாள்தோறும் சென்று வணங்கிப் பாடித் துதித்து
அதனாலுண்டாகிய இன்பத்திலே மூழ்கி வாழ்ந்து வருகின்றார்.
(வி-ரை.)
வண்டமிழ் - விரும்பியவர் விரும்பியவற்றை
வரையாது கொடுக்கும் வள்ளற் றன்மையுடைய தமிழ். (இதனை
நம்பிகள் சரிதத்திற் பின் நிகழ்ச்சிகளால் அறிக.) நம்பிகளுக்குத்
தந்ததோடு அன்றுமுதல் இன்றுவரை அதனைப் பத்தியாற் பயிலும்
அன்பர் எல்லாருக்கும் அவ்வாறே கொடுத்து வருதல் கண்கூடு.
மீளா அடிமை எனும் திருப்பதிகத்தை முறையாகப் பயின்று கண்
பெற்றாரையும், தம்மையே புகழ்ந்து என்ற பதிகத்தாற்
பொன்பெற்றாரையும், இவ்வாறே பிறர் பலரையும் இன்றைக்கும்
காணலாம்.
சைவ விடங்கின் அணி
- திருநீறு, உருத்திராக்கம்,
மகரக்குழை முதலிய ஆதி சைவத் திருவேடங்கள், பூணூல்
முதலியன. இவை வைதிகவேடம். விடங்கு - அழகு. சுந்தர
வேடங்களாற் றுரிசேசெயுந் தொண்டனெனை, விடங்கராகித்
திரிவதென்னே என்ற நம்பிகள் தேவாரங்கள் காண்க.
சாந்தமும் எல்லாம்
- சந்தனம், மணிமாலை, பூமாலை,
பொற்பட்டு முதலியன. இவை வேந்தர்க்குரிய வேடம்.
இவை
இரண்டுமே புனைந்து முன்னர்த் திருமணத்திலே
விளங்கினார். மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும்
பொங்க என்றமை காண்க. அன்று கொண்ட கோலத்தையே
புனைந்து மண்மேல் விளையாடுமாறு இறைவன் ஆணையிட்டமையின்
அதன்படி ஆரூரர் வாழ்ந்ததை அறிவித்தவாறு.
மெய்வளர் கோலம் - நம்பிகள் கொண்டது
சத்தாகிய
கோலங்கள். கண்டார் உள்ளத்தே மெய்மையே (சத்துப்பொருளை)
வளர்த்தற்குத் துணையாயுள்ள கோலம். பிறர் செய்யும் உடம்பின்
அலங்காரங்கள் எல்லாம் கண்டாரை உலக இன்பத்தில் வீழ்த்த
வல்லனவேயன்றி உண்மையை உணர்த்தமாட்டா.
மிக்க விழுத்தவவேந்தர்
- தவமானது சிவபூசையே யாதலின்
சைவவிடங்கின் திருவேடத்தாரைத் தவவேந்தர் என்றார்.
தவவேடமும் மன்னவர் திருவும் கொண்ட கோலமாதலின்
தவவேந்தர் என்ற பெயராற் கூறினார். அழியத் தக்கவையாகி,
அடியவரால் அருவருத்துத் தள்ளப்படும் பயன்களைத் தரும் ஏனைய
தலங்கள் போல மலநடையாய்க் கழியாது, இறவாத
இன்பவெள்ளந்
தரும் அருள்நடையாகிய பரனுணர்வினா லுணரும்
மெய்த்தவமாதலின்விழுத்தவம் என்றும், அத்தவமுடையாரெல்லாம்
எமது குலதெய்வமனெப் போற்றுந் தலைமை பெற்றவராதலின்
நம்பிகளைத் தவவேந்தர் என்றும் கூறினார் என்றலுமாம்.
உள்ளே
தவமும், புறத்தே கோலமும் உடையார்
என்பாருமுளர். தவஞ்செய்வரில்
தலைமை பெற்றவர் என்று
உரைத்தலுமாம். பெருமிழலைக் குறும்பரெனும் பரமயோகியார்
இவரை வழிபட்டதனாலே இறைவனை யடைந்தமையாலும்,
பிறவாற்றாலும் இது அறியப்படும். துறந்த முனிவர் தொழும்பரவை
துணைவா என்ற சிவப்பிரகாசர் திருவாக்கும் காண்க.
தெய்வமணிப்புற்று
- மணித்தெய்வம் உள்ள புற்று
என்றுரைத்தலுமாம். அதில் உள்ளார் திருமூலட்டானநாதர். வன்
மீகநாதர் இவரென்றும், தியாகேசப் பெருமான் இவரென்றும் பிரித்து
வேறாய்த் தரிசிக்க உள்ள மூர்த்திகள். இவ்விரண்டு மூர்த்திகளையும்
ஒன்றாக மயங்கி உரை கூறுவாருமுண்டு.
திளைத்து மகிழ்வொடும்
- திளைத்தல் இன்பத்திலே
மூழ்குதல் அப்போது யான் மகிழ்கின்றேன் என்ற உணர்ச்சி
உண்டாகாது. அதன் பின் அஃது உணரப்பெற்று மகிழ்ச்சியை
விளைவிக்குமாதலின், திளைத்து அதனாலுளதாம் மகிழ்ச்சியுடன்
என்க.
செல்லா
நின்றார் - இவ்வாழ்வு பல நாளும் நிகழ்ந்து
வருகின்றதாதலின் நிகழ்காலத்திற் கூறினார். 130
|