277. இதற்குமுன் னெல்லை யில்லாத் திருநக
                             ரிதனுள்
வந்து
 
  முதற்பெருங் கயிலை யாதி முதல்வர்தம்
                          பங்கி னாட்குப் 
பொதுக்கடிந் துரிமை செய்யும் பூங்குழற்
                            சேடி மாரிற்
கதிர்த்தபூ ணேந்து கொங்கைக் கமலினி யவத
                               ரித்தாள்
.
131

     (இ-ள்.) வெளிப்படை. நம்பிகள் திருவாரூர்க்கு
எழுந்தருளுதற்கு முன் காலத்திலே, அளவுட்படாத இத்திருவாரூர்
நகரத்திலே வந்து, ஆதிகயிலையில் இறைவனது பங்குடையாளாகிய
உமாதேவியார்க்குச் சிறப்பாக ஏவல்செய்யும் இரண்டு சேடிமாருள்ளே,
கமலினியார் அவதரித்தார்.

     (வி-ரை.) எல்லையில்லாத் திருநகர் இதனுள - காலத்தாலும்
பிறவாற்றாலும் அளவிடமுடியாத இத்திருநகரத்தினுள்ளே. இதன்
அளவுபடாத் தன்மை முன்னே உரைக்கப்பட்டது. இத்தலத்
திருத்தாண்டகத்தும் திருநகரச் சிறப்பிலும் பிறாண்டும் காண்க.
சிவஞானப் பெருமை அளவின்றி நிறைந்த இந்தத் தலத்திலே என்பர்
மகாலிங்கையர்.

     முதற்பெருங்கயிலை - முதன்மையாகிய பெருமையுடைய
கயிலாயமலை. எல்லாத் தேவரிடங்களுக்கு முதலாய்ப் பெருமை
பொருந்திய கைலாசகிரி என்பாருமுண்டு.

     ஆதிமுதல்வர் - “மூல முதல்வர் சிவலோக மெய்தப்
பெற்றான்“ (சண்டீசர் - புரா - 58) என்றது காண்க. ஆதிகாரண
ராகிய சிவபெருமான். அந்தத்திற்குக் காரணராயிருக்கும் அதனாலே
ஆதி - தொடக்கத்தும் - காரணரானவர். ஆதிபகவன் என்புழிப்
போல இருபெயரொட்டுப் பண்புத்தொகை. இனிச், “சிவமெனும்
பொருளு மாதி சத்தியொடு சேரி னெத்தொழிலும் வல்லதாம்“
என்பதுபற்றி ஆதிசத்தியொடு கூடிய முதல்வன் என்பாருமுளர்.

     பங்கினாள - ஒரு பாகத்தையுடைய உமாதேவியார்.

     பொதுக் கடிந்து உரிமை செய்யும் பூங்குழல் சேடிமார் -
பணிசெய்தல் தமக்கும் பிறர்க்கும் பொதுவாய் உரியது என்றதை
நீக்கித் தமக்கே சிறப்பாய் உரியதாக்கிக் கொண்டு பணிசெய்யும்
சேடியர்கள் இருவர். அவர்கள் அநிந்திதை, கமலினி என்பார்.
பொதுக்கடிந்து என்பதற்கு உமாதேவியார்க்கே பணிவிடைசெய்து
மற்றையோர்க்குச் செய்தலை யொழிக்கும் என்றலுமாம். “பொதுநீக்கித்
தனைநினைய வல்லார்க் கென்றும் பெருந்துணையை“ என்பது
திருத்தாண்டகம். “வையம் பொதுக்கடிந் தினிது காக்கும்“ 85.

     கதிர்த்த - (கதிர்) ஒளிவீசும் பிராகசிக்கின்ற. கதித்த - என்று
பாடங்கொண்டு பெரிதாய் ஓங்கிய என்று பொருள் கூறுவாரு முண்டு.
இப்பொருள் ஏந்து என்றமையாலே பெறப்படும்.

     கமலினி - கமலையாகிய ஆரூரில் கமலினியார்
வந்தவதரித்தல் பொருந்துவதே.

     இரு சேடியர் திருக்கயிலையிலிருந்து ஆணையின்வழிப்
பூவுலகில் வந்த வரலாறு முன்னர்த் திருமலைச் சிறப்பிற் காண்க.
இவர்கள் வந்த காரியம் நிறைவேறி மீண்டும் திருக்கயிலையில்
அம்மையாரது சேடியர்களாய் அமர்ந்தனர் என்பது வெள்ளானைச்
சருக்கம் 50-வது பாட்டிற் காண்க. இவ்விரு சேடியர்களில்
மற்றவராகிய அநிந்திதை யார் திருவொற்றியூரிலே சங்கிலியாராய்
நிகழ்ந்த வரலாறு ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணத்துட் (206
- 269) காண்க. 131