278. கதிர்மணி பிறந்த தென்ன வுருத்திர கணிகை
                                மாராம்
 
  பதியிலார் குலத்திற் றோன்றிப் பரவையா ரென்னு
                                நாமம்
விதியுளி விளக்கத் தாலே மேதகு சான்றோ
                                  ரான்ற
மதியணி புனித னன்னான் மங்கல வணியாற்
                                 சாற்றி,
132

     (இ-ள்.) கதிர்....தோன்றி - (அவ்வாறு அவதரித்த அவர்)
கதிர்மணி பிறந்ததுபோல உருத்திர கணிகைகள் என்று
சொல்லப்பெற்ற பதியிலாளர் குலத்திலே அவதரித்து; பரவையார் ....
சாற்றி - பரவையார் என்கிற நாமத்தைச் சாத்திரவிதிப்படி வந்த
விளக்கத்தினால் மிக்க பெரியோர்கள், பிறையணிந்து தூய
இறைவனது நாளாகிய திருவாதிரை நாளிலே, மங்கல அணிகள்
செய்து சாற்றக்கொண்டு.

     (வி-ரை.) இப்பாட்டிலே, பேரிடுதல் - நாட்செய்தல் என்ற
சடங்குகளைக் கூறினார். இவற்றை நாமகரணம், சாதகர்மம் என்பர்
வடநூலார்.

     சுதிர்மணி பிறந்ததென்ன - (குலத்திலே) சிறந்த ஒளியுடைய
மணிபிறந்தது போல, உருத்திரகணிகையர் குலத்தவர் யாவரும்
அரன்சார்பும், அடியார் சார்பும் உடையர் ஆதலின் அவரனைவரும்
மணிகளே. அவர்களுள்ளே சிறந்தமணி பிறந்ததுபோலத் தோன்றி
என்க. ‘முறுக வாங்கிக் கடைய' மணியிற் சோதி (கதிர்)
பிறப்பதுபோல, இவர் அக்குலமாகிய மணியின் தவத்தாற் பிறந்தார்
என்றுரைத்தலுமாம்.

     உருத்திரகணிகைமாராம் பதியிலார்குலம் -
உருத்திரகணிகையர் என்ற பேருடைய பதியிலாதார் மரபு. இவர்கள்
மரபு வேறு; சேரிப்பரத்தையர் மரபு வேறு. இவர்கள் செய்து வந்த
கோயிற்பணிகளிற் சிலவற்றைப் பின்னாளிற் பரத்தையர்
கைக்கொண்டனர் என்று சொல்ல இடமுண்டு.1 விரிவு காமிகாகமம்,
ஆசாரிய லட்சணப் படலம் 225 முதல் 350 வரை சுலோகங்களிலும்,
பிற உரிய நூல்களிலும் காண்க.       

     இச்சை ஞானம் கிரியை என்ற சிவசத்திகள் மூவரின் நூபுரச்
சத்தத்திலிருந்து முறையே உருத்திரகணிகை, உருத்திரகன்னிகை,
உருத்திரதாசி என்ற மூவகையார் உண்டானார்கள் என்று
காமிகாகமம் பேசும். இவர்களது இலக்கணங்களையும்
ஒழுக்கங்களையும், இவர்கள் ஆலயங்களில் முறையே செய்ய
வேண்டிய திருப்பணிகளையும், ஆங்கு விரிவாய்க் காணலாம்.
உருத்திரகணிகை, மகாமண்டபம் முதல் கருப்பாவரணப்பிராகாரம்
வரை திருவலகு திருமெழுக்கு இட்டுப் பஞ்சசூர்ணங்களினால்
அலங்கரித்துச், சுத்தமாயிருந்து, பூசை நேரங்களில் தீபங்களை
ஏந்தியும், கானம் செய்தும், நிர்த்தனம் செய்தும், உபசரிக்கத்தக்கவள்.
சுத்தம், மிசிரம், கேவலம் என்ற மூவகை நிர்த்தனங்களிலே
சுத்தநிர்த்தனமே உருத்திரகணிகைக்கு விதிக்கப்பெற்றது.
ஆசாரியனால் பொட்டு அணியப் பெற்று அவனை
நாயகனாகக்கொள்வதும் இவளுக்கு உரியதாம். இன்னும் இவ்வாறே
தூர்க்கை இலக்குமி சரச்சுவதி என்ற இவர்களுடைய பாதச்
சிலம்பொலியினின்றும் முறையே இராசகணிகை, கிராமகன்னிகை,
தாசி என்பவர்கள் உண்டானார்கள் எனவும் இவர்கள் இலக்கணம்,
கடமை, வாழ்க்கைத் திறம், மரபுவளர்ச்சி முதலியவை இன்ன எனவும்
ஆங்கே விரிவாய்க் கூறப்பெற்றுள்ளன.

“உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
     உன்னடியார் தாள்பணிவோ மாங்கவர்க்கே
                                  பாங்காவோம்
அன்னவரே யெங்கணவ ராவா ரவருகந்து
     சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்“
(9)
“எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
     எங்கை யுனக்கல்லா தெப்பணியும் செய்யற்க“
(10)

என வரும் திருவெம்பாவைத் திருவாசங்களையும் காண்க.

“வெண்மதியின் கொழுந்தணிந்த வீதிவிடங்கப் பெருமான்
ஒண்ணுதலார் புடைபரந்த வோலக்க மதனிடையே
பண்ணமரு மொழிப்பரவை யார்பாட லாடறனைக்
கண்ணுறமுன் கண்டுகொண்டார் போலக் கருதினார்“
 
                              -
ஏயர் - புரா - 271   

என்றதனால் இம்மரபினர் செய்யும் கோயிற் பணி விளங்கும்.
பின்னர்ப் பரவையாருக்கும் நம்பிகளுக்கும் கலியாணம் நிகழ்த்தும்படி
அடியார்களை ஏவ, அவ்வாறே மணம் நிகழ்ந்தது என்பதனால்
இத்தகைய கலியாணங்கள் இக்குலத்திலே அந்நாளில் வழங்கி
வந்தமை உணரப்பெறும். “அன்றங் கவர்மன் றலைநீர் செயும்“,
“மங்கை பரவை தன்னைத் தந்தோம்“, “அணியஃ தாரூ ரன்பான்
மணம்“, “பரவை வதுவை தகுநீர்மையினால் நிகழச் செய்தார்“ என
வருவன காண்க.

     உண்மை இவ்வாறாகவும், பண்டைநாளில் இவர்களுக்கு மரபு
வளர்ச்சி கிடையாது என்றும், உலக வாழ்விற்குத் தகுதியற்ற
பெண்கள் இறைவனையே பதியாகக் கொண்டொழுகினர் என்றும்,
பின் மற்றும் சிலர் அவர்களோடு கலத்தலாகி உலக இன்பம்
துய்த்துக்கொண்டு இறைபணி செய்ய எண்ணினர் என்றும்,
பின்னாளிற் கோயிற்றலைவர்களின் அடக்குமுறையால் கொடுமைக்கு
ஆளாகி நாளடைவில் வேசையராயினர் என்றும் இவ்வாறு எழுந்த
ஆராய்ச்சிகள் உண்மை நிலைக்கு மாறானவை என்று காணலாம்.

     பதியிலார் குலங்கள் மேற்கூறியவாறு பலவாதலின் அவற்றினுள்ளே பிரித்துக் காட்ட உருத்திர கணிகைமாராம் என்று கூறினார்; பிறிதி னியைபு நீக்கிய விசேடணம். பதியிலாளர் - என்பது
கல்வெட்டுக்களிற் கண்ட பெயர்.

     “உருத்திரகணிகையர் பரமசிவனுக்குத் தாங்கள் செய்ய
வேண்டிய ஊழியஞ் செய்துகொண்டு மணமின்றி ஒருவரையே
கணவராக வுடையவர்கள். இக்காலத்தில் அந்த நடை தவறிற்று“
என்பது திரு. மகாலிங்கையர் உரை. “தனக்கொரு நாயகனில்லாத
உருத்திரனைப்போல் இவ்வுலகில் தமக்கு நாயகனைக் கொள்ளாமல்
உருத்திர நாயகியை நாயகமாகக் கொண்டிருக்கும் உருத்திர
கணிகையர்களுடைய குலம்“ என்பர் திரு. ஆலாலசுந்தரம் பிள்ளை
அவர்கள். “உருத்திரகணிகையர் - வேசியர்க்கு வேறாய் மணமின்றி
உயர்ந்த சாதியர்களில் ஒருவனைக் கணவனாகக் கொண்டு பூசா
காலத்தில் சுத்த நிருத்தஞ் செய்யும் மகளிர்கள்“ என்பது
ஸ்ரீ ஆறுமுகத் தம்பிரானார் உரையிற் கண்டது. பதியிலார் குலம்
என்பதற்குத் “தங்கட்கு ஒரு நாயகனையும் எய்தாதவர்களாகிய
உருத்திர கணிகையர் குலம்“ என்று பொருள்கூறி “இதனாற் பல
புருடரைச் சேர்ந்து விபசரிக்கும் வேசியரையே உருத்திர கணிகையாக
மயங்கியது அஸங்கதமாயிற்று. விபசாரஞ் செய்வோர் வேசியரே
யன்றித் தாசியரன்று. அவ்வேசியரைத் தாசியராகக் கோடல் தவறு.
காலகதியால் பிரகிருதத்தில் வேசியரே தாசியரராக
நியமிக்கப்படுகின்றனர். தாசியரும் வேசித் தொழில் புரிகின்றனர்.
இவ்வநிஷ்டாசாரம் பிரமாண மாகாது...“ என்று மேற்கோளும்
காட்டினர் திரு. கு. சுப்பராய நாயகர் அவர்கள். இவ்வுரைகளை
மேலே காட்டிய முதனூற்பிரமாணங்களுடன் ஒப்புநோக்கி உண்மை
தெளிக.

     குலத்தில் தோன்றி - குலத்தில் ஒருவருக்கு மகளாய்
அவதரித்து. இவரது தாயார் பெயர் கூறப்படாததாலும் குலத்தில்
என்றமட்டிலே கூறப்பெற்றதன்றி ஒருத்தி வயிற்றில் என்று
கூறப்பெறாததாலும் பாவையார் ஒரு தாய்வயிற்றினல்லாது அயோ
நிசராக அவதரித்தார் என்று கொள்வாருமுண்டு. முன்னர்க்கூறிய
நம்பிகள் திரு அவதாரமும், அதுபற்றிய அவர்களது தேவாரங்களும்,
பின்னர் வருஞ் சங்கிலியார் திரு அவதாரமும் ஒப்புநோக்கிக்
காணப்புகின் இக்கொள்கை வலியுடைத்தன்று என்பதாம்.

     விதியுளி விளக்கத்தால் - நூல்களில் விதிப்படி
விளங்கினவாறு. இவை நாம கரணத்துக்கு உரிய நூல்விதிகள்.
இதனை இடைநிலைத் தீவகமாய்ச் சாதகருமத்துக்கும் கொள்க.

     மேதகு சான்றோர் - மேன்மை பெற்ற தக்க பெரியோர்.
பேர்வைத்தலும் சாதகருமம் செய்தலும் கற்றுத் தேர்ந்த பெரியாரைக்
கொண்டு செய்தல் முறை. சுற்றத்தார்கள் பிள்ளைக்குரிய பிற
பருவவிழாக்கள் செய்தற்குரியர் என்பது வரும்பாட்டிற் காண்க.

     மதியணி புனிதன - சிவபெருமான். நன்னாள் -
அவனுக்குரிய நாள் - திருவாதிரை. உருத்திரகணிகையாதலின்
உருத்திரனுக்குரிய இந்நாளைக் குறித்தனர் என்பர்.

     நாமம் - நாமகரணச்சடங்கினையும், நன்னாள் - அது
செய்த நாளையும் குறிக்கும். சாற்றி - சாற்ற. “நாமகரணத்தழகு
நாள்பெறநிறுத்தி“ திருஞான - புரா - 41 என்றது காண்க. 132.


     1இவைபற்றிப் பற்பலவாறு ஆராய்ச்சிகள் எழுந்து
பெருமயக்கிற் கிடந்தந்தன. இவ்விருசாராரையுமின்றிப் பெண்கள்
தம்மை இறைவன்
பணிக்கே ஒப்புவித்துத் துறவு பூண்டு
ஒழுகியவர்களுமுண்டு. அன்னார் எக்குலத்தாராயினும் ஆகலாம்.
அவர் மேற்கூறிய இருமரபினருடன் மயங்கியறிதற்பாலரல்லர். முதலிற்
பெண்டிர் துறவிகளாயிருந்து, பின்னர் மரபு வளர்ச்சிக்குரிய
உருத்திரகணிகையராகி, அதன்பின் அவர்களே நாளடைவில்
பரத்தையர் குலத்தவராயினர் என்று கூறுவாருமுண்டு.
இவையெல்லாம் ஒரு கருத்தை வைத்துக் கொண்டு அதற்கேற்பச்
செய்திகளைப் பொருத்தி முடிபுகள்செய்யும் தவறான
ஆராய்ச்சிமுறையாம். பரத்தையர் சேரியும், பரத்தையிற் பிரிவும்
தொல்காப்பிய முதலிய மிக்க பழந்தமிழ் நூல்களிற் பல்லாயிர
ஆண்டுகளின் முன்னரே பேசப்பெற்றன. “ஏமப்பேரூர்ச் சேரியுஞ்
சுரத்துந், தாமே செல்லுந் தாயரு முளரே“, “.... பரத்தையி னகற்சியிற்
பரிந்தோட் குறுகி, யிரத்தலுந் தெளித்தலு மெனவிரு வகையோ,
டுரைத்திற நாட்டங் கிழவோன் மேன“ என்பன முதலிய
தொல்காப்பிய அகத்திணையியற் சூத்திரங்களையும், அவற்றின்கீழ்
ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரையையுங் காண்க. இவற்றிற்
கிலக்கியங்களாகிய திருச்சிற்றம்பலக் கோவையார் முதலியவற்றிற்
காணும் பரத்தையிற்பிரிவு முதலிய துறைகளையுங் காண்க.