279. பரவினர் காப்புப் போற்றிப் பயில்பெருஞ் சுற்றந்
                                 திங்கள்
 
  விரவிய பருவந் தோறும் விழாவணி யெடுப்ப
                                மிக்கோர்
வரமலர் மங்கை யிங்கு வந்தன ளென்று சிந்தை
தரவரு மகிழ்ச்சி பொங்கத் தளர்நடைப் பருவஞ்
                               சேர்ந்தார்.
133

     (இ-ள்.) பரவினர் ... எடுப்ப - பயின்ற பெருஞ்சுற்றத்தார்கள்
கூடி உரிய தெய்வங்களைக் (பிறந்த முதற்றிங்களிலே) குழலியைக்
காக்குமாறு துதித்து (அதன் பின்) அந்தந்த மாதங்களிற் கூடுகின்ற
அவ்வப் பருவங்களிலெல்லாம் உரிய விழாக்களை அணிபெறச்
செய்ய; மிக்கோர்....பொங்க - அறிவான் மிகுந்தோர் செந்தாமரை
மலரில் விளங்கும் இலக்குமியே இங்கு வந்து அவதரித்தனள் என்று
மனமிக மகிழ; தளர்...சேர்ந்தார் - தளர்நடைப்பருவத்தை
அடைந்தார்.

     (வி-ரை.) பாவினர் - பரவினராகி. முற்றெச்சம்.

     காப்புப் போற்றி - காப்பு - காவல்செய்வது. இப்பருவத்தில்
குழவிக்குச் சிறு தெய்வங்களால் இடையூறு நேராதபடி பலவகைக்
காப்புக்களிடுவர்; நெற்றியில் பல வகைத் திலகமும் இடுவர்.
அறிந்தோர் இவைகட்கெல்லாம் மேலான பெருங்காப்பாகிய
திருநீற்றை நெற்றியிலிடுவர்.

“வேறுபல காப்புமிகை யென்றவை விரும்பார்
நீறுதிரு நெற்றியி னிறுத்தி நிறைவித்தார்“
                   -திருஞான - புரா -
43

     “நந்தகோபரும் வந்து குழந்தையை (கண்ணனை)
எடுத்துக்கொண்டு கோமய சூர்ணத்தை அதன் சிரசில் காப்பாக
வைத்து“ என்ற விஷ்ணு புராணம்- பூதனையின் வதம். 307-ம் பக்கம்
வரி 11-12 காண்க. கோமய சூர்ணம் - விபூதி - என்று அதன் கீழ்க்
குறித்திருத்தலும் காண்க. “காப்பிட வாராய்! காப்பிட வாராய்!“
என்று நாலாயிரப் பிரபந்தம் பெரியாழ்வார் திருமொழி காப்பிடற்
பதிகத் தாலும் யசோதை கண்ணனுக்குத் திருநீற்றுக்
காப்பணிந்தமை புலனாம். திருநீற்றுக்கு உள்ள இரட்சை என்ற
பெயரும் இதனை விளக்கும்.

     இப்பருவத்தைத் திருமால் முதலிய தேவர்களை விளித்து
“இக்குழவியைக்காக்க“ என்று வேண்டித், தாயரும் தாதியரும்
துதிப்பதாகக், காப்புப் பருவம் என்று வகுப்பது பிள்ளைத்தமிழ்
நூல்களின் மரபு.

     திங்கள் விரவிய பருவம் தோறும - மூன்றாம் மாதம் முதல்
மூவெழு திங்கள் வரைச் செங்கீரை முதலியனவாக வரும் பருவங்கள்.
இவற்றின் விரிவு இலக்கண நூல்களுட் காண்க. கண்ணப்பநாயனார்
புராணத்தும், திருஞானசம்பந்த நாயனார் புராணத்தும் ஆசிரியர்
கூறுவதும் காண்க. “நவிலு முத்திங்கள் முதலா நயந்த மூவெழு
திங்க ளளவினிற் கேட்பிக்கு
நம்மையதெனப் புகல்வரே“
(அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ்.)

     விழா அணியெடுப்ப - அவ்வப் பருவங்களுக்குரிய
விழாக்களை அழகுறச் செய்ய.

     மிக்கோர் - அறிவின் மிகுந்தோர். விழாஅணி எடுப்போா
சுற்றத்தாராக,ஏனை அறிவோரும் மகிழ்ச்சி பொங்கினர் என்பது.

     வரமலர் மங்கை இங்கு வந்தனள - முன்னர் இத்தலத்தே
தவஞ்செய்து வரம் பெற்ற இலக்குமி தேவியே மீளவும் இக்குடியிலே
நேரே வந்திருக்கின்றனளோ என்ற மகிழ்ச்சி. உவம வுருபின்றிக்
கூறியது மகிழ்ச்சியின் மீக்கூர்தலைக் குறித்தது. “மன்னு மாமலராள்
வழிபட்டது“ என்று திருநகரச் சிறப்பைத் தொடக்கம்செய்து ஆசிரியர்
அறிவித்தமை காண்க.

     தளர்நடைப் பருவம - குழந்தைகள் தத்தடியிட்டுத் தள்ளாடி
நடக்கத் தொடங்கும் பருவம்.

“வளர்பருவ முறையாண்டு வளர்வதன்முன் மலர்வரிவண்
டுளர்கருமென் சுருட்குஞ்சி யுடனலையச் செந்நின்று
கிளரொளிக்கிங் கிணியெடுப்பக் கீழ்மைநெறிச் சமயங்க
டளர்நடையிட்ட டறத்தாமுந் தளர்நடையிட் டருளினார்“

50

என்று திருஞானசம்பந்த நாயனார் புராணத்தில் ஆசிரியர் இதனை வகைப்படுத்திச் சுவைபெறக் கூறியது காண்க. பிரபுலிங்கலீலையில் சிவப்பிரகாசர் இப்பருவங்களினியல்பை அழகாக எடுத்துக் கூறியதும் காண்க.

     (கமலினியார்) தோன்றி
- சான்றோர் நாமஞ் சாற்ற - சுற்றம் பரவினாகிப் போற்றி அணியெடுப்ப - மிக்கோர் மகிழ்ச்சி பொங்கப் - பருவஞ் சேர்ந்தார் என்று தொடர்ந்து முடித்துக்கொள்க.

     பருவஞ்செய்து - என்பதும் பாடம். 133