280. |
மானிளம்
பிணையோ? தெய்வ வளரிளமுகையோ?
வாசத்
|
|
|
தேனிளம்
பதமோ? வேலைத் திரையிளம் பவள
வல்லிக்
கானிளங் கொடியோ? திங்கட் கதிரிளங்
கொழுந்தோ?
காமன்
றானிளம் பருவங் கற்குந் தனியிளந் தானுவோ
வென்ன.
|
134 |
(இ-ள்.)
மானிளம் பிணையோ? - இளமையுடைய பெண்
மானோ?; தெய்வளர் இளம் முகையோ? - வளர்ச்சியைப் பெற உள்ள
தெய்வப் பூவின் இளம் அரும்போ?; வேலைத் திரை இளம்
பவளவல்லிக் கான்இளம் கொடியோ? - கடலின் அலைகளில் உள்ள
இளம் பவளக்கொடிகளில் விளைந்த அழகிய இளம் பவளக்
கொடியோ?; திங்கட் கதிர் இளம் கொழுந்தோ? - சந்திர
கிரணத்தின் முதலில் முளைக்கும் இளங் கொழுந்தோ?; காமன் தான்
இளம்பருவம் கற்கும் தனி இளம் தனுவோ? - மன்மதனே இளம்
பருவத்திற் றனது போர்தொழில் கற்கும் ஒப்பற்ற இளமையாகிய
வில்லோ?; என்ன - என்னும்படி.
(வி-ரை.)
இளம்பினை - இளமுகை - இளம்பதம் - இளங்கொடி
- இளங்கொழுந்து - இளந்தனு இவை பரவையாரின் இளம்பருவத்து
அவயவங்களுக்கு உவமப் பொருள்கள். இவை ஓகாரங்களால்
பிரித்துத் தெரிவிக்கப் பெற்றன. பிணை - கண்ணுக்கும், முகை -
முலைக்கும், பதம் - மொழிக்கும், கொடி - இடைக்கும், கொழுந்து -
நுதலுக்கும், தனு - புருவத்திற்கும் உவமப் பொருள்களாமென்பர்.
உவமேயங்கள் சொல்லப் பெறாமல் தொக்கி நின்றன. ஆயினும்
உவமப் பொருள்களின் தன்மையால் அவற்றை வருவித்து உரைத்துக்
கொள்க. தளர்நடைப் பருவத்தின் பின் பரவையாரை அவ்விளம்
பருவத்தே கண்ட சுற்றமும் மிக்கோரும், அவரது அந்தந்த
அவயவங்களின் அழகை வியந்து, இது கண்ணோ பிணையோ - இது
முலையோ முகையோ - என்றிவ்வாறு நாடும்படி அவரது அழகு
இருந்தது என, இவற்றை “என்ன - நாடு மின் பொற்பு“ என்று
வரும்பாட்டுடன் கூட்டி முடித்துக் கொள்க.
இளம்
- என்ற மொழியை எட்டு முறை இப்பாட்டில்,
அடுக்கிவருவது தெரியாத வண்ணம், அழகுற அமைத்து வைத்தது
மிக அழகிய சொற்பொருட் பின்வருநிலையணியாம். இவ்வமைப்புத்
தெய்வச் சேக்கிழார் பெருமானது தெய்வக் கவித்திறத்தைத்
திறம்பெறக் காட்டுவதொன்றாம். இளம் பவள வல்லி என்றது
இளங்கொடிக்கும், இளம் பருவங்கற்கும் என்றது இளந்தநுவுக்கும்
அடைமொழிகளாம்.
மான் இளம்பிணையோ?
- இளமான் பிணையின்
கண்ணோக்கமோ என்க. “மான் மாற விழிக்கும்“ என்ற திருவாக்கும்
காண்க.
தெய்வ வளர் இளமுகை
- தெய்வத்தன்மையும் வளர்ச்சியும்
கொண்ட கோங்கின் இள அரும்பு. இதனைக் கற்பகமலரின்
அரும்பென்றும், தாமரை அரும்பு என்றும் உரைப்பினுமாம். மிக
இளம் பருவமாகவே கொங்கை தோற்றா. ஆதலின் வளர் - இனி
வளர்வன என்றார். பெண்மைக்குச் சிறப்பாய் உரிய அவயவமாதலின்
வெளிப்படத் தோற்றாத போதும் உவமை கூறினார். “திருவளர்
தாமரை சீர்வளர் காவிகள்“ என்ற திருக்கோவையாரிற் “கோங்கு“
என்றதற்குப் பேராசிரியர் உரைத்தமை காண்க. இதன் முதன்மைபற்றி
இதற்குத் ‘தெய்வ' என்ற அடைமொழி கொடுத்துக் கூறினார்.
திருக்கயிலாய ஞான உலாவிலே (பதினொராந் திருமுறை.)
“பேதைப்
பருவம் பிரியாதள் வெண்மணலால்
தூதைச் சிறுசோ றடுதொழிலாள் - தீதில்
இடையாலு மெக்கழுத்த மாட்டா ணலஞ்சேர்
உடையாலு முள்ளுருக்க கில்லாள் - நடையாலும்
கௌவைநோய் காளையரைச் செய்யாள் கதிர்முலைகள்
எவ்வநோய் செய்யுந் தொழில்பூணாள் - செவ்வனேர்
நோக்கிலும் நோய்நோக்க நோக்காடன் செவ்வாயின்
வாக்கும் பிறர்மனத்தை வஞ்சியாள் - பூக்குழலும்
பாடவந் தோன்ற முடியா ளிளவேய்ததோள்
ஆடவர் தம்மை அயர்வுசெய்யாள் - நாடோறும்
ஒன்றுரைத் தொன்றுன்னி யொன்றுசெய் தொன்றின்கட்
சென்ற மனத்தனளாஞ் சேயிழையாள்“ |
எனவரும் பொருள்களை இத்
திருப்பாட்டின் கருத்துடன்
வைத்துன்னுக.
“விழியாற்
பிணையாம்“ - திருக்கோவையார்.
“துகிர்மேனி“ பவளம்போலும் நிறத்தினையும் - பட்டினப்பாலை
-
நச்
- 148.
“பவளப் பாவையின் இளங்கொடி“ - மணிமேகலை - 4 - 124 -
5.
“கோங்கு முகைத்தன்ன குவிமுலை“ - அகம் - 240 - 11.
“கோங்கின் குவிமுகி ழிளமுலை“ - திருமுரு - 34 - 5. |
என்றிவற்றை இப்பாட்டிற்
பொருத்திக் கண்டுகொள்க.
வாசத்தேன் இளம் பதமோ
- தேன் அவ்வப் பூக்களின்
வாசனையும், கூடுகட்டி ஈட்டப்பெறும் மரம் செடிகளின் வாசனையும்
கலந்துள்ளதாதலின் வாசத்தேன் என்றார். வேப்பமரத்தில் வைக்கும்
தேனுக்கு இளங்கைப்பும் அவ்வாசனையு முடைமை காண்க.
பிணையோ? முகையோ? என்பவைகட் கேற்ப மாற்றி இளம்பதத்
தேனோ என்று கூட்டுக. இங்குத் தேன் என்றது தேன் போன்ற
வாயூறலோடு கலந்து வரும் தேன் போன்ற சொல்லை.
“புண்ணியக்
கங்கை நீரிற் புனிதமாந் திருவாய் நீரில்
உண்ணனைந் தமுத மூறி யொழுகிய மழலைத் தீஞ்சொல்
வண்ணமென் குதலைச் செவ்வாய் குதட்டியே வளரா நின்றார்“
-
22 |
என்ற கண்ணப்ப நாயனார்
புராணம் காண்க. வாயினுக்கும் வாசனை
யுண்டென்பது “தீங்கனிவாய் கமழும் ஆம்பலம் போதுளவோ
அளிகாள்! நும் அகன்பணையே“ என்ற திருக்கோவையாரிற் காண்க.
பூவிலே தேன் இருப்பதும் இயல்பாம்.
வேலைத் திரை இளம் பவள வல்லிக் கான் இளங்கொடியோ?
- கடல் அலைகளில் விளங்கும் இளம் பவளத்தின் இளங்கொடியோ?
“துறைக்கொண்ட செம்பவள மிருளகற்றுஞ் சோதித் தொன்மயிலை“
என்ற நம்பிகளது திருத்தொண்டத்தொகைத் தேவாரமும் காண்க.
இளம் பவள வல்லி என்றது முதிராத இளஞ் சிவப்பு வாய்ந்த பவளக்
கொடியை. இளங் கொடி என்றது அப்பவளக் கொடியினின்று
கிளைத்து வந்ததொரு இளங்கொடியை. கான் - அழகு. “இளங்கொடி
போல் நுடங்குமிடை ஏழை“ என்ற திருஞான சம்பந்த நாயனார்
புராணம் காண்க. கான் - கூட்டம் - எனக்கொண்டு, பவளக்கொடிக்
கூட்டங்களினுள்ளே ஓரிளங்கொடியோ - என்பது இராமநாதச்
செட்டியார் உரைக்குறிப்பு. கொடியை இடைக்கு உவமானமாகக்
கூறுதல் மரபு. இவ்வாறன்றி இதனை இதழுக்கு உவமானமாகக்
கொள்வது மொன்று. அப்பொருளில் இளம்பவள வல்லி மேலிதழும்
அதனைத் தொடர்ந்து நிற்கும் கான் இளங்கொடி கீழ் இதழுக்கும்
ஆகுமென்க. வளைவாய் அசைந்து செல்லும் தன்மையால்
பவளக்கொடி இதழாம் என்பர். கான் - மணம் என்று கொண்டு
மணங் கமழ்கின்ற பவளக்கொடியோ என்றலுமாம்.
திங்கட்கதிர் இளங்கொழுந்தோ - திங்களின் கொழுந்து
-
பிறை. திங்கள் அதிலிருந்து வளர்வதாதலின் கொழுந்தென்ப.
கொழுந்தெனவே இளமை பெறப்படினும் இளங்கொழுந்து என்றது
மிக்க இளமையைக் காட்டிற்று.
காமன் தான் இளம்பருவம்
கற்கும் தனியிளம் தநுவோ?
- காமன் தானும் என்க. எதுகை நோக்கி உயர்வு சிறப்பும்மை
விகாரத்தாற்றொக்கது. சிவபெருமானையும் அவனடியார்களையுமன்றி
ஏனை எல்லா உயிர்களையும் அவன்பாற்பெற்ற ஆணை கொண்டு
ஆட்சி செய்வானாதலின் தானும் என்று சிறப்பித்தார்.
இளம் பருவம் கற்கும்
- இளம் பருவத்திலே கற்றற்குரிய.
“இளமையிற்கல்“ என்ற படி காமனும் தன் இளமையில் பின்னாள்
தனதாட்சிக்குரிய வில்வித்தை கற்பானாயினன்; என்ன - அதற்கு
உரிய வில் இதுதானோ என்றையுறும்படி. தனி இளம் தனு - ஒப்பற்ற
இளங் கரும்பு வில். மேலே கூறிய சிறப்பு நோக்கி அவனது
வில்லும் தனி என்று சிறப்பிக்கப் பெற்றது. இளம் பருவத்திலே பயில
உதவுதலேயன்றி, அவ்வில், தனது அடுதற் றொழில் செய்யவில்லை
யென்பார் கற்கும் என்றார். மேலே காட்டிய ஞானவுலாவின் வைத்து
இவற்றின் பொருள்களை எல்லாம் உய்த்துணர்க.
மான் இளம் பிணை
- அம்பும் (புருவம்), தனுவும் தகுதிபெற
ஆசிரியர் அமைத்தமை காண்க.
வில்லில் அம்பு பூட்டப்பெறாமல் அம்பு வேறு, வில்
வேறாக
வளர்ந்தன ஆதலின் இவை ஒருசேர வைக்கப்பெறாமல், இவை
வளர்ந்து சேரப் போதிய காலம் தரும் பொருட்டு இடையில் பல
பொருள்கள் வைக்கப்பெற்றனபோலும். கண்ணுக்குவமையாகிய
தாமரை, நீலம் முதலியன மன்மதன் மலரம்புகளாதல் காண்க.
சுற்றத்தாரும் மிக்கோரும் காணும் இளம் பருவத்திற், பூட்டப்பெறாத
இந்த விற்பூட்டு, வளர்ந்து தகுதி பெற்றுப் பின்னர் நம்பிகள்
காணும்போது ஒன்றுசேர்ந்து ஓரிடத்திலே பூட்டப் பெற்றதும் காண்க.
“கற்பகத்தின் பூம்கொம்போ“ என்ற 140-வது திருப்பாட்டிலே
“விற்குவளை“ என்று வில்லிற் குவளை சேர்ந்தது காணப்பெறும்.
இப்பாட்டிற் சொல்லிய, தொழில் செய்யாத இளம்
பொருள்கள்
அனைத்தும் அப்பாட்டிலே “வில் குவளை பவளம் மலர் மதி பூத்த
விரைக்கொடியோ“ என்று முதிர்ந்து தொழில் செய்தமையும் காண்க.
“இருநோக்கிவள் உண்கண் உள்ளது“ என்றபடி இளம் பிணைக்கு
இருநோக்கில்லாமையின் தனுவும் தனியிளந் தனுவாய்
ஒன்றேயாயிற்று. “செருவெழுந் தனுவ தொன்றுஞ் சேமவில்
லொன்றும்“ என்று பின்னர் வருவதுபோலச் சொல்லுதற்கு இங்குச்
செரு (போர்) எழுகின்றதில்லாமல், காமன் இப்போதுதான் இளம்
பருவம் விற்பிடித்துக் கற்கின்றானாதலால், போர் வில் இல்லையாகும்.
எனவே, சேம வில்லும் வேண்டப்படாதாயிற்று.
இப்பாட்டிற் கூறிய இளமை முழுமையும், என்றும்
இளையோனாகிய முருகனுக்கேயுரியதாம். அவனது என்றும் முதிராத
இளமையை “மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி“ என்று
திருமுருகாற்றுப்படை துதிக்கின்றது. அவ்விள நலத்தின் பிரதி
பிம்பமே இப்பாட்டிற் குறித்ததென்க. 286 முதல் 290 வரையுள்ள
பாட்டுக்களின் குறிப்புக்களைப் பார்க்க. இவ்வாறன்றி,
மானிளம்பிணை - இளமையாலும், பிள்ளையாயிருத்தலாலும், கண் -
இனியநாதத்(சத்தத்)தையும், [“வலைத்தலை மானன்ன நோக்கியர்
நோக்கு“ (நீத்தல் விண்ணப்பம் - திருவாசகம்) = மிக மருண்ட
பார்வையுடையார் என இளமுகை - முகம் - கற்பகத்தினது மலராது
இனி மலர இருக்கும் மலர் - கந்தத்தையும், இளம்பதம் - சொல் -
இனி முழுமையும் இனிக்க இருக்கும் சொல் - சுவையையும்,
இளங்கொடி - தேக காந்தி - உருவத்தையும், திங்கட் கொழுந்து -
நுதல் - பரிசத்தையும், குறிப்பாகக் கொண்டு “கண்டு கேட்டு“ எனும்
திருக்குறளுக்கு இலக்கியமாய் விளங்கியது பரவையாரது இளம்
பருவம் என்றும், தனு இவ்வைந்தும் சேர்ந்து தொகுத்த வகையைக்
காட்டிய தென்றும் கூறுவாரும், இவற்றிற் சில மாற்றிக் கூறுவாறும்
உண்டு.
தநு -
உடம்பிற்குப் பெயராதலுங் காண்க. 134
|