281. நாடுமின் பொற்பு வாய்ப்பு நாளுநாள் வளர்ந்து                                 பொங்க  
  ஆடுமென் கழங்கும் பந்து மம்மனை பூச லின்ன
பாடுமின் னிசையுந் தங்கள் பனிமலை வல்லி
                                  பாதங்
கூடுமன் புருகப் பாடுங் கொள்கையோர் குறிப்புத்
                                 தோன்ற.
135
    
     (இ-ள்.) நாடும் - (மேலே கூறியவாறு சுற்றமும் மிக்கோரும்
பிணையோ - முகையோ... என்று) நாடி யறியும்படி;
இன்பொற்பு .... பொங்க - இனிய அழகு பொருந்திய தன்மை நாளும்
நாளும் மேன்மேல் வளர்ந்து அதிகரிக்கும்படி; ஆடும் மென்கழங்கும்
- பந்தும் - அம்மனை - ஊசல் இன்ன - ஆடுகின்ற மெல்லிய
கழற்சிக் காய்களும், பந்தும், அம்மனையும் - ஊசலும் என்றிவை
முதலிய விளையாட்டுக்களிலே; பாடும் இன்னிசையும் ... தோன்ற -
அவற்றோடு சேர்த்துப் பாடப்பெறும் இனிய கீதங்களைத்
தங்களுக்குச் சிறப்பாய் உரிய நாயகியாராகிய இமய மலைக்கொடி
(உமாதேவி)யாருடைய பாதங்களைக் கூடுகின்ற அன்பினாலே ஊனும்
உயிரும் உருகும்படிப் பாடும் கொள்கையின் ஒரு குறிப்புக்
கேட்பாருக்குத் தோன்ற;

     (வி-ரை.) நாடும்மின் பொற்பு - நாடுகின்ற மின்னல் போன்ற
அழகு எனவும் கூறுவர். “வாய்ந்த மின்னை மடந்தைய ராக்கி“ -
நைடதம்.

     ஆடும் - பொதுவினை. கழங்கு முதலிய நான்கினோடும்
கூட்டுக. அம்மனையும் ஊசலும் என உம்மை தொக்கி நின்றன.
சிறப்பும்மையுமாம். ஆடுகின்ற இவ்விளையாட்டுக்களை ஆடும்போதே
பாடப் பெறுகின்ற இசையும் என்பார் பாடும் இன்னிசையும் - என்றார்.
கழல் முதலியவை ஆடும்போது பாடிக்கொண்டு ஆடுதல் வழக்கு.
கழல் - பந்து - அம்மானை - ஊசல் இவை மகளிர்
விளையாட்டுக்கள். இவை பெண்பாற் பிள்ளைத் தமிழ்க்குச் சிறப்பாய்
உரிய பகுதிகளாதல் காண்க. பாட்டு மனத்துக்கும், ஆடல்
உடலுக்கும், அன்பு உயிருக்கும் உறுதி கொடுப்பனவாமாறும் காண்க.

     பனிமலை வல்லி பாதங்கூடும் அன்பு உருகப்பாடும் கொள்கை
ஓர் குறிப்புத் தோன்ற(ப் பாடும் இசையும்) - அவ்வாறு பாடுவதும்
இக்குறிப்பு ஓரோர்கால் தோன்றுமாறு பாடும் என்க. பெண்கள்
விளையாடும் இந்த விளையாட்டுக்களின் போது இறைவனையும்
இறைவியையும் பாடிக் கொண்டு ஆடுதல் அக்கால வழக்கு.
இந்நாளிலும் பாட்டுண்டு. ஆனால் அவை பொருளற்றனவாய்,
உலகப்பற்றுக்களிலே செலுத்தவனவாய் இருக்கும்.

“தருந்தடக்கை முத்தழலோர் மனைகடொறு மிறைவனது தன்மை
                                             பாடிக்
கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப் பாட்டயருங்
                                         கழுமலமே“

என்ற திருஞானசம்பந்த நாயனார் மேகராகக் குறிஞ்சிப் பதிகத்தையும்,

“நாட்டார் நகைசெய்ய நாமேலை வீடெய்த
ஆட்டான்கொண் டாண்டவா பாடுதுங்கா ணம்மானாய்“

 

“குற்றங்க ணீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச்
சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் றொல்புகழே
பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான்
பற்றியபே ரானந்தம் பாடுதுங்கா ணம்மானாய்“

 
“அஞ்சொலாள் தன்னோடுங் கூடி யடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் றூய புகழ்பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூச லாடாமோ“

என்ற திருவாசகங்களையும் பிற திருவாக்குகளையும் காண்க.

     தங்கள் பனிமலை வல்லி - முன்னை அநிந்திதையாராகித்
தம்முடன் கூடிப் பனி செய்தாரையும் சேர்த்துத் தங்கள் என்றார்.
திருவாசகத்திற் குறிப்பித்தபடி தம் போன்ற பிற எல்லாரையும்
உளப்படுத்தியதுமாம்.

     பாதம் கூடும் - பிரிந்து வந்தாராதலின் அப்பிரிவு நீங்கிக்
கூடும் என்க.

     கொள்கைக் குறிப்புத் தோன்ற - ஓரோர்கால் இவர் பாடும்
பாடல்கள் பிள்ளைப் பருவத்திற் சொல்லும் மரபின் மட்டிலே
நில்லாமல், மேலும் இவ்வாறு அதற்கயலான ஒரு குறிப்பும் தோன்ற
நிகழ்ந்தன என்றபடி. ஓர் - ஓர்கின்ற - நினைக்கின்ற - என்றலுமாம்.
ஓர் கொள்கைக் குறிப்பு எனமாற்றி உரைப்பினுமமையும்.

“தொண்டினிலை தரவருவார் தொடர்ந்தபிரி வுணர்வொருகாற்
கொண்டெழலும் வெருக்கொண்டாற் போலழுவர் குறிப்பயலாய்“

என்ற திருஞான சம்பந்த நாயனார் புராணம் (55) காண்க.

     மென்கழங்கு - இலகுவான கழற்சிக்காய். பந்து - கழங்கை
விடச் சிறிது கனத்தது. அம்மனை - அதைவிடக் கனமுள்ளது. இவை
பருவ வளர்ச்சிக் கேற்றபடி அமைந்தமை காண்க. இவ்வாறன்றி,
ஆடும் - ஆடுவர்; பாடும் - பாடுவர்; பாடுங் கொள்கையோர் -
பாடுகின்ற பெரியோர் - என்று இப்பாட்டை முடித்துக் கூறுவர்
மகாலிங்கையர். 135