285. புற்றிடம் விரும்பி னாரைப் போற்றினர் தொழுது
                                செல்வார்
 
  சுற்றிய பரிசனங்கள் சூழவா ளுடைய நம்பி
நற்பெரும் பான்மை கூட்ட நகைபொதிந் திலங்கு
                                செவ்வாய்
விற்புரை நுதலின் வேற்கண் விளங்கிழை யவரைக்
                              கண்டார்.
139

     (இ-ள்) புற்று இடம் ... செல்வார் - புற்றையே தாம்
வாழுமிடமாக விரும்பி எழுந்தருளிய இறைவனைத் துதித்து
வணங்கிய பின், பரிசனங்கள் சுற்றிச் சூழ்ந்து வரச் செல்லும்
நம்பிகள்; நற்பெரும் பான்மை கூட்ட - பெரிய நல்ல ஊழ்வினை
கூட்டி வைத்தமையாலே; நகை பொதிந்து ... கண்டார் - மகிழ்ச்சிக்
குறியாகிய புன்முறுவலுடன் விளங்கும் சிவந்த வாயையும், வில்லை
ஒத்த நுதலின் கீழே வேலொத்த கண்களையும் உடைய ஒளிசெய்து
விளங்கும் ஆபரணங்களைப் பூண்ட பரவையாரைக் கண்டார்.

     பரவையார் போதும் போதில - தொழுது - சூழச்
செல்வாராகிய நம்பி அந்த விளங்கிழை யவரைக் கண்டார் என்று
இரண்டு பாட்டுக்களையும் கூட்டி முடிக்க. மேற்பாட்டில் பரவையார்
இறைவனை வணங்கப் போதலும், பின் பாட்டில் நம்பிகள் அவரை
வணங்கித் திரும்பி வருதலும், இடையில் இருவரும் ஊழாகிய
தெய்வங் கூட்டக் காணலும் கூறப்பெற்றன.

     (வி-ரை.) ஆளுடைய நம்பி - சிவபெருமானாலே
ஆட்கொள்ளப்பெற்ற பேற்றினை உடைய நம்பிகள இவ்வாறே
ஆளுடையஅரசு, ஆளுடையபிள்ளையார், ஆளுடையஅடிகள் என
வருவனவும் காண்க. “உடைய அரசுலகேத்து முழவாரப் படையாளி“, “என்றார் உடைய பிள்ளையார்“ முதலிய திருவாக்குக்கள்
காண்க. “யாவர்க்குந் தந்தைதாய் யெனுமிவரிப் படியளித்தார்,
ஆவதனா லாளுடைய பிள்ளையாராய்“ திருஞா - புரா - 69.

     போற்றினர் தொழுது செல்வார் - நம்பி - கண்டார் - போற்றித்
தொழுது செல்வாராகிய நம்பிகள் விளங்கிழையவரைக் கண்டார்.

     நற்பெரும் பான்மை - நியதி - தெய்வம் - பால் - பான்மை -
விதி - ஊழ் முதலியன ஒரு பொருள் கொண்டன. திருக்குறளில்
ஊழ் என்ற அதிகாரத்தில் ஆசிரியர் பரிமேலழகர் உரைத்தவையும்
பிறவும் காண்க. இதுபற்றியே.

“பண்டைவிதி கடை கூட்டப் பரவையா ருங்கண்டார்“ (288).
“மின்போன் மறையும் சங்கிலியார் தம்மை விதியாற்
கண்ணுற்றார்“
               - ஏயர்கோன் - புரா - 266

என்றமையும் காண்க.

     நல் - பெரும் - பான்மை - நல்ல பெரிய ஊழ்வினை. ஊழ்
நல்லவாதலாவது தீப்பயன் தராது நற்பயனை நிகழ்வித்தல்.
பெரும்பான்மையாவது யாராலும் விலக்கலாகாத பெரிய
வன்மையுடைமை. நற்பான்மையாவது ஈசன் அருள். இங்கே பான்மை
என்றது முன்னர்த் திருக்கயிலையின் நிகழ்ந்த இறைவனது
திருவாணையை. (திருமலைச்சிறப்பிற் காண்க.)

     கூட்ட - கயிலை ஆணை மண்ணிற் கூட்ட,
வெண்ணெய்நல்லூர் ஆணை பிற தலங்களிற் கூட்ட, தில்லையின்
ஆணை திருவாரூரிற் கூட்ட, திருஆரூரர் ஆணை தெருவிற் கூட்ட
இந்நிகழ்ச்சி கூடக் கூட்டிற்று என்றபடி.

     பான்மை கூட்டக் கண்டார் - “காட்டுவித்தால் ஆரொருவர்
காணாதாரே“ என்றபடி முன்னைய பான்மை கூட்டுவித்துக்
காட்டுவித்ததாதலின் அதன் வழியே கண்டார் என்க. இதனாலே அது
கூட்டியும் காட்டியும் வைக்காதவழிப் பிறர் ஒருவரை காதலின்வழிக்
கண்டாரல்லர் என்பதும் குறிப்பு. (சடங்கவியராது மகளாரையும்,
கோட்புலியாரது இரு மகளிர்களையும் அவ்வாறு காணாமையும் இங்கு
வைத்துக் காண்.)

     நகை - புன்முறுவல். இது மகிழ்ச்சியின் அறிகுறி. நகை என்பது
ஆகுபெயராய்ப் பல்வரிசையை யுணர்த்தியதென்று கூறுவாருமுண்டு.

     பொதிந்து - வெளித்தோற்றாமல் உள்ளே சேமித்துச் சிறக்க வைத்து.

     நகைபொதிந்து இலங்கு செவ்வாய் விற்புரை நுதலின் வேற்கண்
விளங்கிழையவர் - பரவையாரது இயற்கை செயற்கை என்ற
இருவகைத் தெய்வீக அழகுகளையும் காட்சிபெற வைத்தவாறு.
நம்பிகள் காட்சிக்குக் கவர்ச்சியுற முதலிற் புலப்பட்டது நகை. அதன்
பின்னரே அதற்கிடமாகிய செவ்வாய் தோன்றிற்று. இவை
யிரண்டினால் அக்காட்சியை அவர் உள்ளத்தே ஊன்ற வைத்தன
மேலே கண்ட வில்லும் வேலும் ஆம். ஆதலின் இம்முறை வைத்தார்.
ஊறுசெய்து உறுத்தியன ஆதலின் படையாகக் கூறியவாறு. வில்
கைவிட்டகலாது தொழில் செய்வதுபோல் நுதலும் தானிருந்தபடியே
செயல் விளைத்தது ஆதலின் வில் என்றார். வேல் உடையாரால்
எறியப்பட்டு ஏவப்பட்டாரிடம் போய்ச் செயல் விளைக்கும்; ஆதலின்
கண்ணை வேல் என்றார். இங்குக் கண் என்றது கண்ணின்
தொழிலாகிய பார்வையை. அந்தக் கண்ணால் பரவையாருங்
கண்டாராதலின் (288) “கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின்
வாய்ச்சொற்கள், என்ன பயனு மில“ என்ற திருக்குறளிற் கண்டவாறு
நிகழ்ச்சி உண்டாயிற்று என்க. இக்காரணம் பற்றியே வரும்பாட்டில்
விற்குவளை என ஒரு சேர வைத்து எண்ணியபடியாம்.

     இப்பாட்டுக் காட்சி என்னும் அகப்பொருட்டுறை. இத்துறைக்கு
ஞானார்த்தம் சற்குரு தரிசனம் என்ப. 139