286.
|
கற்பகத்தின்
பூங்கொம்போ? காமன்றன்
பெருவாழ்வோ?
|
|
|
பொற்புடைய
புண்ணியத்தின் புண்ணியமோ?
புயல்சுமந்து
விற்குவனை பவளமலர் மதிபூத்த
விரைக்கொடியோ?
அற்புதமோ? சிவனருளோ? அறியேனென்
றதிசயித்தார்.
|
140 |
(இ-ள்.)கற்பகத்தின்
பூங்கொம்போ? (இங்கே நான் காணும்
இப்பொருள்) கற்பக மரத்தினது பூக்களோடு கூடிய கொம்போ?;
காமன் தன் பெருவாழ்வோ? - மன்மதன் தனதுபெரிய
வாழ்வாய்க்கொண்ட பொருளோ?; பொற்புடைய புண்ணியத்தின்
புண்ணியமோ? - அழகு என்ற பொருள் செய்த புண்ணியத்தின்
பயனாய் விளைந்த புண்ணிய விளைவோ?; புயல் சுமந்து -
மேகத்தை மேலே சுமந்து கொண்டும்; வில் - குவளை - பவளம்
- லர் - மதி - பூத்த விரைக் கொடியோ? - வில்லையும், நீலோற்பல
மலரையும், பவளத்தையும், கோங்கையும், நிலாவையும் அழகு பெற
அங்கங்களாகக் கொண்டும் விளங்கு ஒரு வாசனைக் கொடியோ?;
அற்புதமோ - மேலே சொல்லிய இவைகளில் இன்னதென்றோ
அல்லது இவற்றோடு அடங்காமையின் வேறொன்றென்றோ துணியக்
கூடாத அற்புதப் பொருளோ?' சிவன் அருளோ - ஒன்றினாலும்
உவமிக்கப் பெறாத) இறைவனது திருவருள்தானோ?; அறியேன்
என்று அதிசயித்தார் - இது இன்னதென்று அறியேன் என்று
அதிசயங் கொண்டார்.
(வி-ரை.)இது,
காட்சியின் பின் அற்புதத்தால், அவ்வாறு
கண்ட பொருள் இவற்றுள் எதுவோ என்று ஐயப்பட்டுக் கூறுதலாகிய
ஐயம் என்ற அகப்பொருட்டுறையாம்.
முன் இளம் பருவத்தே பரவையாரைக் கண்ட சுற்றத்தாரும்
மிக்கோரும் மானிளம் பிணையோ என்பது முதலாகக் கண்ட
இளநலங்கள் யாவும் இப்போது அவ்வாறே முதிர்ந்து தத்தம்
தொழில்களைச் செய்யவல்ல நலங்களாய் விளங்கிய நிலையை
நம்பிகள் கண்டார். அவைகளை நம்பிகள் கண்டபடியை இப்பாட்டிற்
கூறுகின்றார்.
கற்பகத்தின் பூங்கொம்போ?
- தெய்வப் பூக்களின்
மணத்துடன் இப்பொருள் விளங்குதலின் கற்பகத்தினது இனிய
பூங்கொம்புதானோ? என்றார். இனி இக்காட்சி தெய்வத்தன்மை
வாய்ந்ததேயன்றி மண்ணுலகிலே காணக்கூடியதன்று; ஆதலின்
முதலில் கற்பகம் என்று நினைத்தார். கற்பகம் நினைத்ததெல்லாம்
தரும் மரம் ஆதலின் எனக்கும் அவ்வாறு அளிக்குமோ என்ற
விருப்பம் குறிப்பாகும் என்றும் கூறுவர். கற்பு + அகத்து + இன் + பூ
+ கொம்பு என்று பிரித்துக் கற்பினை அகத்தே கொண்ட இனிய பூ
மலர்தற் கிடமாகிய கொம்பு என்று ஒரு தொனிப் பொருளும்
பெறுதல் காண்க. கொம்பு என முதலிற் காட்சியிற்றோன்ற, அதன்
இலக்கணம் முழுதும் இங்குக் கொம்பு என்று கண்ட பொருளில்
அமையாமை காண்டார்க்கு, அதுவோ? அல்லது இது பெண்ணோ?
என்று பின் தோன்ற, இங்ஙனம் இருபொருளும் பெறக் கூறினார்
என்க.
காமன்தன் பெருவாழ்வோ
- காமன் தான்
பெருவாழ்வடைதற்குக் காரணமாகக் கொண்டொழுகும் பொருளோ?
காமன் இளம் பருவம் கற்கும் தளியிளந்தனு இவரிடத்துப்
பெற்றானாதலாலும், அதனையன்றி அவன் ஆணை நடத்துதல்
அமையாதாதலானும் அவனது பெருவாழ்வோ என்றார். வாழ்வுக்குக்
குறிக்கோளாக (இலட்சியமாக) உள்ள பொருளை வாழ்வு என்று
உபசரித்துக் கூறினார். மங்கலம் பெருக மற்றென் வாழ்வுவந்
தணைந்த தென்ன (மெய்ப்பொருள் - புரா - 12) என்று
கூறுதல்காண்க. காமன் வாழ்வு பெற்று நிலைப்பதற்குரிய பொருள்
பலவாயிருக்கவும், அவற்றுள் எல்லாம் இது தலைமை பெற்றது
என்பார் பெருவாழ்வு என்றார். திருக்கோவையா ருரையிலே உருவளர் காமன்றன்
வென்றிக் கொடி என்றது நுதல்விழிக்குத்
தோற்று உருவிழப்பதன் முன் மடியா வாணையனாய் நின்றுயர்த்த
கொடியை என்று பேராசிரியர் உரைத்த பொருள் இங்குப்
பொருத்திக் கண்டு சுவைக்கத்தக்கது.
பொற்பு உடைய புண்ணியத்தின்
புண்ணியமோ? - அழகிய
புண்ணியங்களின் விளைந்த பெரும் புண்ணிய விளைவோ? அல்லது
அழகு என்றதொரு பொருள் செய்த புண்ணியத்தின் பயன்
பலவாகவும் அவற்றுள்ளே சிறந்த புண்ணியப் பயனோ? என்றபடி.
மொய்த்துவளர்
பேரழகு மூத்தவடி வேயோ
அத்தகைய மூப்பென்னும் அதன்படிவ மேயோ (வரிசை 178) |
என்ற பாட்டின் பொருளையும்
அழகையும் இங்கே பொருத்திக்
காண்க.
புயல்சுமந்து
- வில் - குவளை - பவளம் - மலர் - மதி -
பூத்த விரைக்கொடியோ? - மேகத்தைத் தலையில் சுமந்துகொண்டு,
வில்லையும், குவளை மலரையும், பவளத்தையும், கோங்கையும்,
சந்திரனையும் போன்றவைகளைத் தனது பூக்களாகக் கொண்டு
பூத்ததொரு வாசனைக் கொடியோ? என்க. கொடியின் வேறாய்
அதன் அங்கமல்லாது, தலையிலே தாங்கி நிற்கும் சுமைபோல்வதால்
சுமந்து என்று பிரித்துக் கூறினார். சுமந்து என்றதனாற் கூந்தலின்
செறிவும், நிறைவும் குறிக்கப்பெற்றன. புயல் - ‘பயில்
வளர்க்குந்துளியவன் காண்' என்றபடி, கீழே கூறும் கொடி பூத்தற்கு
இன்றியமையாது முதற்கண் வேண்டப்படுவது எனுங் குறிப்பினால்
முதற்கண்ணே கூறியதுமாம். புயல் - கூந்தல்.
பின்னர் வருவன
கொடியின் அங்கங்களாய் அக்கொடியினின்று வேறாகாது ஒன்றாய்
விளைதலின் அவற்றைப் பூத்து என்றதாம். அவையே; வில்
-
புருவம்; குவளை - கண்; பவளம்
- இதழ் (வாய்); (கோங்கு) மலர்
- முலை; மதி (பிறைச்சந்திரன்) - நுதல்
என மேலே பெண்ணோ
என்ற ஐயத்திற்கு உரிய அங்க இலக்கணங்களுடன் பொருத்திக்
காண்க.
திருவளர்
தாமரை சீர்வளர் காவிக ளீசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண்
டோங்குதெய்வ
மருவளர் மாலையொர் வல்லையி னொல்கி.... |
என்ற திருக்கோவையாரையும்
அதன் கீழ்ப் பேராசிரியர்
உரைத்தவற்றையும் இங்குப் பூத்தவிரைக்கொடி என்றதின் வைத்துத் தமிழின்
சுவை கண்டு களிக்க.
விரைக்கொடி
- மேலே கண்ட அங்கங்களாகிய பொருள்கள்
உருவக் காட்சியாய்க் கண்ணுக்குப் புலனானவை. அன்றி இக்கொடி
வாசனையும் தந்தது என்பார் விரைக்கொடியோ என்றார். மணமிலாப்
பூக்கொடிகளைக் காட்சியளவில் கண்டுகளிக்கும் மக்களும்
உளராதலின் இது இவ்வாறன்றிப் பூத்தலுடன் விரையும் தரும் கொடி
என்றார்.
‘மலர்மதி' என்று கொண்டு நிறைவாய் மலர்ந்த முழுமதி
எனக்
கூறினுமாம். கொடி - அம்மையாரது உடம்பு. கொடியை இடையென்று
கொள்வாருமுண்டு. மேற்கூறியவற்றோடு ஒன்றாகாது அவற்றிற்கு
வேறாகிய இருப்பிடமாதல் வேண்டும் ஆதலின் அது உரையன்றென்க.
வில் முதலிய ஏனைய அங்கங்களாகிய பூக்களைப் பூத்துநிற்பதும்,
மணம் வீசுவதும் இக்கொடி என்பார் பூத்த விரைக்கொடி என்றார்.
அவ்வங்கங்களிலே முன்னர் (280) அம்மையாரது இளங்காட்சியில்
கண்ட மானிளம்பிணை - குவளையாகவும்; வளர் இளமுகை
-
மலராகவும்; வாசத்தேனிளம்பதம் - விரைக்
கொடியாகவும்;
வேலைத்திரையிளம் பவளவல்லிக் கானிளங்கொடி பூத்த
பவளமாகவும்; திங்கட்கதிர் இளங்கொழுந்து மதியாகவும்;
தனியிளந்தனு - போர்த்தகுதி பெற்ற வில்லாகவும் முதிர்ந்து
விளைந்து இப்பாட்டில் நம்பிகள் உள்ளத்தே தொழில் செய்தல்
காண்க. விற்பூட்டிற்குத் தகுதிபெற நின்றனவாய்ப் பூட்டாமல் நின்ற
முன்பாட்டிற் கண்ட இரு பொருள்களும் இங்குப் பூட்டிக்கொண்டு
விற்குவளையாயினமையும் காண்க. மலர் - தாமரை
எனக்கொண்டு
முகம் என்றுரைப்பாரு முண்டு.
அற்புதமோ
- பெருமிதமும் மகிழ்ச்சியும் தருவதொரு உள்ள
நிகச்சி. அது இன்னதென்றறியப்படாமல் அனுபவிக்கப்பெறும்போது
அற்புதம் என்று பெயர் பெறும். அற்புதம் அறியேனே என்ற
(திருவாசகம்) அற்புதப்பத்துக் காண்க. அதனாலே அறியேன்
என்று பின்னர்க் கூறினார் என்க.
சிவனருளோ?
- சிவனுக்கே ஆளாய்ப் பின்னர், அவன்
அருள் வழியே சென்று வாழ்கின்ற என்னை இவ்வாறு
அற்புதப்படுத்துவது அவனருளல்லாது பிறிது ஒன்றினாலும் இயலாது
எனும் துணிவு உடையாராதலின் சிவனருளோ? என்றார்.
அறியேன்
- இது ஐயம் என்ற துறையாதலின் ஐயத்தின்
இலக்கணமாகிய அறிவும் அறியாமையும் கலந்த உள்ள நிகழ்ச்சியைக்
குறிக்கின்றமை உணர்க. கொம்போ வாழ்வோ - புண்ணியமோ -
கொடியோ - அற்புதமோ - இவற்றில் ஒன்றோ, அன்றி முற்றும்
கலந்ததோ, பிறிதோ என்று அறிவும், துணிவுபடாமையின்
அறியாமையும், கூடி அறியேன் எனப் பெற்றது.
அதிசயித்தார்
- இதுவும் அற்புதம் போலவே பெருமிதமும்
இன்பமும் கலந்த தொரு உள்ள நிகழ்ச்சியேயாயினும் இன்னதென்று
அறிந்து அனுபவிக்கப் பெறும். அதிசயம் கண்டாமே என்ற
(திருவாசம்) அதிசயப்பத்து
முடிபுகளைக் காண்க.
மேலே சொல்லிய கருத்துக்கள் நம்பிகளது உள்ள
நிகழ்ச்சிகளாம். மனதுக்குப் புலனாய் அறிந்து உரைக்கப்படுதலின்
அதிசயித்தார் என்பதாம்.1
முதலில் தெய்வ மணமும், தெய்வ வொளியும், தெய்வ
அழகும் கொண்ட ஒரு பொருள் நம்பிகளது காட்சிக்குட்பட்டது.
அதனைக் கொம்போ என்றார். பின்னர் அதன் அழகு மிகுதி
நோக்கிக் காமன் வாழ்வோ என்றார். அந்த அழகு வெறுங் கீழ்
நிலைப்பட்டதாய்த் தோன்றாமல் புண்ணிய விளைவாய்ப்
புலனானமையின். புண்ணியமோ என்றார். இவ்வளவும்
நிருவிகற்பமாகிய பொதுக் காட்சியாம். இனி அவ்வாறு மணமும்
அழகும் ஒளியும் பிரித்துணர்ந்து இன்னின்னவற்றால் விளைந்தன
வென்று கூறுபடுத்தி அறியும் உள்ளநிலை உண்டானபடியால் ‘வில்
குவளை பவள மலர் மதிபூத்த விரைக் கொடியோ' என்ற
சவிகற்பமாகிய சிறப்புக் காட்சியாயிற்று. இவ்விரண்டினோடு
அமையாமையின் அற்புதமாயிற்று. அதன் பின்னர் அவனருளே
யன்றி வேறு பற்றுக்கோடு தமக்கின்மையின் முன்னினைவின்
குறிப்புத் தோன்றவே சிவனருளோ? என்ற மன நிகழ்ச்சியாயிற்று.
ஓகாரங்கள் ஆறும் ஐயப் பொருள் கொண்டன. இவையே மேலே
280 திருப்பாட்டில் வந்தமையுங் காண்க. சிவனருளோ என்றது
முன்னர்த் திருப்பாட்டில் ..... உள்ள மெய்த்தன்மை முன்னை
உண்மையும் தோன்ற வுய்ப்பார் என்ற (282) பொருளால் விளைந்த
ஐயப் பாடாகிய உள்ள நிகழ்ச்சி என்க. 140
1அற்புதம்
- அதிசயம் - இவற்றின் விரிவு எனது நீத்தார்
பெருமை அல்லது, மாணிக்கவாசகர் 185-ம் பக்கத்திற் காண்க.
|