289. கண்கொள்ளாக் கவின்பொலிந்த திருமேனி
                           கதிர்விரிப்ப
 
  விண்கொள்ளாப் பேரொளியா னெதிர்நோக்கு
                           மெல்லியலுக்
கெண்கொள்ளாக் காதலின்முன் பெய்தாத
                         தொருவேட்கை
மண்கொள்ளா நாண்மடமச் சம்பயிர்ப்பை
                          வலிந்தெழலும்.
143

     (இ-ள்.) கண்கொள்ளா....பேரொளியான - கண்பார்வைக்கு
அடங்காத (கண்காணக் கூசும்படி மிகுந்த) அழகு பொழிந்த
திருமேனியிலே வீசும் கிரணங்களின் விரிவு ஆகாயத்தினும்பட்டு
அடங்காது பெருகுகின்ற பெரிய ஒளி உருவமுடைய நம்பிகளை;
எதிர்நோக்கும் மெல் இயலுக்கு - அவர் கண்ட நோக்குடன்
ஒன்றுபட எதிரே நோக்குகின்ற மென்மையாகிய இயலை வாய்ந்த
பரவையாருக்கு; எண் கொள்ளாக் காதலின் - மனத்தில்
அடக்கமுடியாத காதலால்; முன்பு.....எழலும் - இதற்குமுன்
இவ்வுலகில் அனுபவத்தில் வராத ஒரு புதிய விருப்பமானது இந்த
உலகத்து உள்ளார் எவரும் இதுவரை காப்பாற்றிக்கொள்ளாத
அளவிலே தாம் கைக்கொண்டு ஒழுகிய; நாணம் - மடம் - அச்சம்
- பயிர்ப்பு என்ற பெண்மைக் குணங்கள் நான்கினையும் அடக்கி
மேலே எழுந்தவுடன்,

     (வி-ரை.) கவின் பொழிந்த திருமேனி கண்கொள்ளாக் கதிர்
விரிப்ப என்றது அழகிய மேனியானது கண் கூசுமாறு கதிர்களை
விரித்தலாலே. “உலகமுவப்ப வலன்ஏர்பு திரிதரு, பலர்புகழ் ஞாயிறு
கடற்கண் டாங்கு, ஓவற விமைக்குஞ் சேண் விளங் கவிரொளி“ என்ற
திருமுருகாற்றுப்படைக் கருத்தை நோக்குக.

      விண்கொள்ளாப் பேரொளியான
- கதிர் விரித்தலால்
சூரியன் முதலிய பெரிய ஒளிப்பொருள்களின் ஒளிக்கெல்லாம்
இடந்தந்திருந்த விண்ணும் இதைக் கொள்ள இடம் போதாது என்று
சொல்லும்படி மிகுந்த பேர் ஒளியை உடையவன். அநேககோடி
இளஞ்சூரியர் விளங்குவதுபோன்ற சோபை என்க.

      எதிர் நோக்கும - அவர் நோக்கொடு இவர் நோக்குப்
பொருந்த நோக்கியதால் எதிர் என்றார். “நோக்கொடு நோக்கு
ஒக்க“ என்க.

      வேட்கை, நாணம் மடம் அச்சம் பயிர்ப்பை வலிந்து எழலும்
- நாணம் முதலியவற்றை வேட்கை வென்று மேலெழுந்தது. ஒரு
பெண் நாயகனைப் பெறும் முறையிலே நாணம் முதலியவற்றை
இழத்தல் இழுக்காகாது என்க.

      வேட்கை - வேள - பகுதி. விருப்பம். இஃது எல்லாவகை
விருப்பத்தின்மேலும் செல்லுமாயினும், இங்கு ஒருவேனை ஒருத்தி
விரும்பும் மன விருப்பமாகிய காதலின் மேல் நின்றதைக் குறிக்க
எண் கொள்ளாக் காதலின் என்றார். எண் கொள்ளா - எண்ணத்திற்
கொள்ளப்படாத.

      முன்பு எய்தாதது ஒரு வேட்கை - இதற்கு முன்
இவ்விருப்பம் இவர் மனத்து நிகழ்ந்ததில்லை. எனவே தலைவன்பாற்
சென்ற காதலாகிய உள்ளநிகழ்ச்சி குறித்தவாறு.

      நாண் முதலிய நான்கும் மகளிர்க்கு இயல்பாயமைந்த
குணங்களாம். நாணம் - மகளிர் இயற்கை. மடம் - அறிவிக்க
அறிதலும், அவ்வாறு அறிந்ததை விடாது பற்றுதலும் ஆம் என்ப.
அச்சம் - வெளிப்படை. பயிர்ப்பு - முன் பயிலாத பொருளில்
அருவருப்பு.

      மண்கொள்ள - மேலே சொல்லியவாறன்றி, இதுவரை
மண்ணுலகத்துள்ளே எப்பொருளாலும் கவர்ந்துகொள்ளாப்பெறாத
என்றலுமாம். 143