290. “முன்னேவந் தெதிர்தோன்று முருகனோ?
                     பெருகொளியாற்
 
  றன்னேரின் மாரனோ? தார்மார்பின்
                      விஞ்சையனோ?
மின்னேர்செஞ் சடையண்ணன் மெய்யருள்பெற்
                       றுடையவனோ?
என்னே! யென் மனந்திரித்த விவன்யாரோ?“
                      வெனநினைந்தார்.
144

     (இ-ள்.) முன்னே.....பெருகு ஒளியால - என் முன்னே
பெருகி வளரும் பேரொளிப் பிழம்பாய்த் தானாகவே வந்து
தோன்றும் முருகப் பெருமானோ?; தன் நேர் இல் மாரனோ -
தனக்கு எவரும் நிகரில்லாத மன்மதனோ?; தார்மார்பின்
விஞ்சையனோ? - வாடாமாலை யணிந்த விஞ்சையர்களில்
ஒருவனோ?; மின்.....உடையவனோ? - மின்னலை ஒத்த சிவந்த
சடையையுடைய சிவபிரானது மெய்யருளைப் பெற்றவனோ? -
என்னே.......யாரோ - எனது மனத்தைத் திரித்த இவன் யாவனோ;
என நினைத்தார் - என்று பலவும் நினைந்தார் (பரவையார்).

     (வி-ரை.) இஃது ஐயம் என்ற அகப்பொருளமைந்த துறை.
286-ம் பாட்டில் நம்பிகள் மனத்தே நிகழ்ந்ததுபோல் இது பாவையார்
மனத்தே காட்சியின் பின் நிகழ்ந்ததாம். முன்னே வந்து - நான்
காணுமுன்னே தானே வலிய வந்து. என் முன் என்று
கூறுவாருமுண்டு. பின்னர் எதிர் தோன்றும் என்றமையால் அது
பொருளன்றென்க.

      எதிர் தோன்றும் முருகனோ? - முருகன்தான் இவ்வாறு
கண்கொண்டு காணமுடியாத அழகுடைய' கதிரை வீசும்
மேனியுடையான் என்ற நினைவினால் முருகனோ என்னும் உணர்வு
முதலில் உண்டாகியது கவின்பொழிந்த திருமேனியாதலின் முருகனோ
என்றார். “ஆயிரங்கோடி காமர் அழகெலாந் திரண்டொன்றாக
மேயின“ என்ற கந்தபுராணங் காண்க.

      தன்நேரின் மாரனோ? - பின்னர்ப், பெருகொளியின்கீழ்
அமைந்த அழகினைக் காணவே அழகுடைய உருவமுடையானொரு
மன்மதனோ? என எண்ணினார். முருகன் தமது பெண்மை நலம்
கவர எழுந்தருள ஏதுவில்லை; எனவே மாரனோ என்று அடுத்து
நினைந்தார். இவ்வழகு மாரனது அழகின் மேம்பட்டு உருவுடன் கூடி
விளங்குதலின் தன் நேரின் மாரனோ? என்றார்.

      தார்மார்பின் விஞ்சையேனா? - சைவவிடங்கின் அணியும்,
சாந்தமும், மாலையும், தாருமாகி (276) முன்பெய்தாத காதல் வேட்கை
எழச் செய்தமையின் தார்மார்பின் விஞ்சையனோ என்றார். விஞ்சை -
வித்தை; விஞ்சையன் - வித்தியாதரனுமாம். விஞ்சை - வித்தை -
போலி. தார் - மார்பின் மாலை. “உருள்பூந் தண்டார் புரளு
மார்பினன்“ - திருமுருகாற்றுப்படை. “வண்ண மார்பிற் றாருங்
கொன்றை“ - (புறம்) “இந்திர ஞாலம்போல வந்தருளி, யெவ்வெவர்
தன்மையும் தன்வயிற்படுத்துத், தானேயாகிய தயாபர னெம்மிறை“
என்பது விஞ்சையின் இயல்பு. உருத்திரகணிகையராய் அடியவர்க்கு
ஆளாம் தன்மையராயினும் இதுவரை எந்த அடியார்பாலும் எய்தாத
வேட்கை விளைவித்தமையின் இந்தச் சைவவிடங்கு விஞ்சையனோ?
என்ற குறிப்பாம். மேலே கண்டவாற்றால் முருகனுமன்று;
மாரனுமன்று; என்னவே இவன் வேறு விஞ்சை வல்லவனோ என்று
அடுத்து நினைந்தார்.

     மெய்யருள் பெற்று உடையவனோ? - தங்கள் பனிமலை
வல்லிபாதம் கூடும் அன்புருகப் பாடும் கொள்கையுடன், உள்ள
மெய்த்தன்மை முன்னை உண்மையும் தோன்ற வாழும் (282) என்னை
இந்நிலை செய்தலின் அவனருள் பெற்றவனே யாதல்வேண்டும்
என்றார். அருள்பெற்றார்க்கன்றி என் பெண்மையை வலிந்தெழ
இயலாது; ஆதலின் இவன் அருள் பெற்று அதனால் என்னை
உடையவனாதல் வேண்டும் என்பது குறிப்பு.

      என்னே! - ஆச்சரியக் குறிப்பு. இதுவரை திரியாது, நாண்
முதலியவற்றை மண் கொள்ளாவகை காத்து, இறைவனிடத்தே
செலுத்திய எனது மனத்தையும்என்றபடி. உயர்வு சிறப்பு உம்மை
தொக்கது. நாற்குணச் சிறப்பு விகாரத்தாற் றொக்கதற்கேற்ப அதனால்
நிறைவு பெற்றிருந்த மனத்தின் சிறப்பும்மையும் தொக்கது போலும்.

      இவன் யாரோ?
- முருகன் இச்செயலுக் கிசையான். மாரனும்
விஞ்சையனுமோ அடியாரிடத்துச் செயல் செய வலியிலர். ஆதலின்
அருள் பெற்றுடையார் ஒருவரேயாதல்வேண்டும். ஆயின் இவர்
இன்னார் என்ற துணிவு பெறமாட்டாமையின் யாரோ? என்றார். ஒரு
நாயகனைப் பலர் மணத்தல் இந்நாட்டுத் தொன்றுதொட்டு வந்த
நெறியாதலின இத்தலைவி, முன்னே ஒவ்வொரு தலைவியரை மணந்த
முருகன் மாரன் முதலிய ஒருவரோ என நினைத்தல் இழுக்காகாது.
ஆயின் ஒரு தலைவியைக் கண்டு காதல் கொள்ளும் தலைவன்
அவளைப் பிறர் நாயகிபோன்றாள் எனக் கருதுதல் தகாதது ஆம்.
அது கற்பிலக்கணத்திற்கும் காதல் முறைக்கும் வழுவாம். அதுபற்றியே
பேர் குறியாது முன்னர் (286) “கொம்போ!“, “வாழ்வோ?“,
“புண்ணியமோ?“, “கொடியோ?“ என்றமை காண்க. ஆதலின்
“கற்பகத்தின் பூங்கொம்போ.....“ என்ற பாட்டில் தெய்வயானை -
இரதி - முதலிய பொருள்களைக் கூட்டி யுரைத்தல் பொருந்தா உரை
என்க.

      ‘கற்பகத்தின் பூங்கொம்போ' என்று நம்பிகள்
நினைத்தமைக்கேற்பவே, பூத்தல் ஒழிந்து பாழ்பட்டுக் கிடந்த
அதனைப் பூக்கச்செய்தவன் விண் குடியேற்றிய முருகனே யாதலால்
முருகனோ என்ற நினைவு பரவையார் மனத்து எதிர் உருவமாய்க்
கிளம்பியது. “காமன் பெருவாழ்வு“ எனும் நம்பிகளின் நினைவு
மாரனைப் பரவையார் மனத்திற் புகுத்தியது. நம்பிகள் “பொற்பின்
புண்ணியமோ“ என்றமை (சிற்றின்பத்தைப் பேரின்பமாக்கும்
புண்ணியமுடையார் விஞ்சையராதலின்) விஞ்சையனோ என்ற
கருத்தை விளைத்தது. “யாழுடையார் மணம்“ என்ற திருக்கோவை
- 7. காண்க. சிவனருளே என்று நம்பிகள் முடித்தமையே அவர்
மெய்யருள் பெற்றுடையவனோ எனுந் தன்மையைப் பரவையார்
உள்ளப் பளிங்கிற் பதித்தது. இந்நினைவுகள் முன் இல்லாது,
இப்போது பளிங்கிற் பவளம் பதித்ததுபோல மனத்திற் பதித்தமையால்
மனந்திரித்த எனப் பெற்றதாம்.

      அவர் அறியேன் என்றபடி இவர் யாரோ என்றார். ஆயினும்
அருள் பெற்றவனே என்ற துணிபுபற்றி இதனை ஐயத்தின் முடிபாக
இறுதியிற் குறித்தார்.

      (கண்டாராய்ப்) பேரொளியான் எதிர் நோக்கும் மெல்லியலுக்கு
ஒரு வேட்கை எழலும்“ முருகனோ ? மாரனோ? விஞ்சையனோ?
உடையவனோ? இவன் யாரோ? என நினைந்தார் என இவ்விரண்டு
பாட்டையும் தொடர்ந்து முடித்துக் கொள்க. 144