294. “பேர்பரவை பெண்மையினிற் பெரும்பரவை
                             விரும்பல்கு
 
  லார்பரவை யணிதிகழு மணிமுறுவ லரும்பரவை சீர்பரவை  யாயினா  டிருவுருவின்  மென்சாப லேர்பரவை  யிடைப்பட்ட  வென்னாசை
                             யெழுபரவை“,
148

     (இ-ள்.) பேர்பரவை - இவரது பேர் நங்கை பரவை; பெண்மையினில் - இவரிடத்துக் காணும் பெண்மைக் குணங்களைக்
கூறுமிடத்து; பெரு உம்பர் அவை விரும்பு அல்குலார் பரவு ஐ -
பெரிய தேவர் சபை விரும்புகின்ற திலோத்தமை முதலிய
அரம்பையர்களும் துதிக்கத் தக்க தெய்வமாம்; அணிதிகழும்
மணிமுறுவல் அரும்பர் அவை - மேலே தொங்கிய மூக்கினணியில்
உள்ள முத்துக்களினும் மேம்பட்டு விளங்கும் அழகிய பல்வரிசையோ
முல்லையரும்புகளேயாம்; சீர் பரவு ஐ ஆயினாள் - (சீர் -
இலக்குமியும், பரவி - விரும்பும், ஐ - அழகு, ஆயினாள் -
உடையவர்) இலக்குமியும் விரும்பும் அழகுடையார்; திருவுருவு இன்
மென் சாயல் - கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கமுடைய
இவரது உருவத்துடைய இனிய மெல்லிய சாயலின்; ஏர் பரவை
இடைப்பட்ட - அழகிய பரவுதலிடையில் அகப்பட்ட; என் ஆசை
எழுபரவை - எனது விருப்பமானது எழுகடல் போன்றதாம்.     

     (வி-ரை.)பரவை - தலைவனுக்குத் தலைவியினது பெயர்
கேட்டலும் அதில் ஓர் விருப்பம் நிகழ்வது ஒரு அகப்பொருள்
உண்மை. பெயர் வினாதல் என்ற துறையில் வரும் பாட்டுக்களைக்
காண்க. அவ்வாறே பரவையார் என்ற பெயர் கேட்டலும் நம்பிகள்
நாவலர் காவலராதலின் அப்பெயரிற் சென்ற விருப்பத்தை இவ்வாறு
அறிவிக்கின்றார். ஒரு பாட்டில் எழுபரவை அடக்கிய நாவலர் என்று
சேக்கிழார் பெருமானை மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சி
சுந்தரம்பிள்ளை அவர்கள் பாராட்டியுள்ளார்கள். “முறையினொரு
சிறுதூக்கி னெழுபரவை யும்புக முடித்துற நிறுத்தா னிவன்
மொழியெங்க டம்பிரான் வல்லப முணர்ந்திலைகொல்“ - சேக்கிழார்
பெருமான் பிள்ளைத் தமிழ். இதில் உள்ள பரவை எழு என்பதை
ஆசிரியர் “என் ஆசை எழுபரவை“ என்று முடித்து இரட்டுற
மொழிந்து காட்டியதும் ஒரு அழகாம். கடல்கள் ஏழென்பர்.

     எழுபரவை - மதியைக் காண எழுகின்ற கடல் என்று
கொண்டு கரைகடந்து பொங்கும் கடல்போன்ற தென்பதுமாம்.
அழகின் பரப்பினுட்பட்ட ஆசை எழுகடல்போல் பரந்தது. எனவே
கடல் கரையினுட் படாததுபோல ஆசை அழகின்
பரப்பினுட்படாதென்பது.

      நடையும், முறுவலும், அழகும், சாயலுமே வெளித்
தோற்றப்படுவனவாய்த் தமது விருப்பத்தை முன்னமே கவர்ந்தன
ஆதலின் பெயர்கேட்ட விருப்பத்துடன் இவற்றையே நம்பிகள்
சேர்த்துக் கூறியவாறு முறுவல் தோன்ற இருத்தல் உள்ள நிறைந்த
மகிழ்ச்சியின் மெய்க்குறி.

      பரவையிடை - பரவுதலைக் கொண்ட தன்மையினிடத்தே. வலைப்பரப்பின் இடைமீன் படுதல்போல, என் ஆசை இவரது அழகின் பரப்பினுட்பட்டதாயினும் எழுகடல் போன்றது.

      இவள் பேர் பரவை. இவளது பெண்மைக் குணங்களைப்
பற்றிப் பேசின் இவர் திலோத்தமை முதலிய தேவப் பெண்களும்
தொழக்கூடிய தெய்வம்போன்றார். முல்லையரும்புபோன்ற
முறுவலுடையார். இலக்குமி விரும்பும் அழகும் பெற்றார். இவரது
சாயலாகிய பரப்பிலே பட்ட எனது ஆசை எழுகடலினும் பெரிதாய்
வளர்கின்றது என்பது திரண்ட பொருள். பெரு உம்பர் அவ்வை -
தேவர்களுக்குத் தாய் போன்றவள் என்றலுமாம். இப்பொருளில்
அவ்வை என்பது அவை என்றாயிற்று.

      விரும்பு அல்குல் ஆர்பு அரவு ஐ - விரும்பும் நிதம்பம்
பொருந்திய வளர்ச்சியிலே பரம்பின் அரசு போலும் என்று கூறுதலும்
ஒன்று. ‘அல்குல் அரவுலகை வென்ற துணிவு கொண்டார்ப்ப' என்று
முன்னர்க் கூறியதும் (284) காண்க. அரவுலகு என்பது வடிவத்திற்கும்,
உடன்பட்டார் படும் விடத்தன்மைக்கும் ஆம். இது வெளிக்
காணப்படா உறுப்பாயினும் பெண்மைக்குரிய அவயமாய்
நோய்செய்தல் பொருந்திய சிறப்பு இயல்பு பற்றியே எடுத்துக்
கூறப்படுவது தமிழ்க் கவியியல்களில் ஒன்று.

      சீர்பரவையாயினாள் என்பதற்குச் சிறப்புடைய பரவை என்ற
கூத்துடைய இலக்குமி போன்றாள் என்று பொருள் கூறுவாருமுண்டு.
இது பொருந்தாமை மேலே 290 பாட்டின் கீழுள்ள உரைக் குறிப்பிற்
காண்க.

      ஆர் பரவை - என்ற அடி முற்றுமோனை.

      அணிதிகழ - அணியிற்றிகழ் என ஐந்தனுருபு
விரித்துரைக்கப்பட்டது. முத்து மூக்கணியிற் றொங்குவதன் அழகைச்
சிவப்பிரகாசர்,

“தன்னை நிந்தைசெய் வெண்ணகை மேற்பழி சார
மன்னி யங்கது நிகரற வாழ்மனை வாய்தன்
முன்னி றந்திடு வேனென ஞான்றுகொள் முறைமை
யென்ன வெண்மணி மூக்கணி யொருத்திநின் றிட்டாள்“ 
                           -மாயை பூசைகதி - 18

என்று பிரபுலிங்கலீலையில், அழகிய கற்பனையின் மூலம்
அறிவித்திருத்தல் காண்க. அணி திகழும் - அழகு விளங்கும்
என்றலுமாம்.

      மணி முறுவல - மணி போன்ற பல் என்றுரைப்பதும் ஆம்.
மணி - முத்து.

      பரவையார் உருத்திர கணிகையராய் வீதி விடங்கப்
பெருமானது திருவோலக்கத்தில் பாடல் ஆடல்களுக்கே உரியவர்
என்பது பின்னர் ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் 271-வது
பாட்டில் காண்க. வீதிவிடங்கப் பெருமானாகிய தியாகராசர்
தேவருலகில் அரசு வீற்றிருந்தார். இவர்பால் அங்கு ஆடற்குரிய
பெண்கள் தேவமாதர்கள். அம்மையாரது சேடியராய் அருளின்வழி
இங்கு அவதரித்து இவர்முன்ஆடல் புரியும் பரவையாரை அவர்கள்
பரவுதல் இயல்பு என்பார் உம்பர் அவை பரவு ஐ (ஐ - தெய்வம்)
என்றார். இங்குத் தேவர்கள் வந்து தொழக் காத்திருப்பதும்
காண்க. 148