297. அவ்வாறு பணிந்தேத்தி யணியாரூர் மணிப்புற்றின்
 
  மைவாழுந் திருமிடற்று வானவர்பா னின்றும்போந்
“தெவ்வாறு சென்றாளென் னின்னுயிரா மன்ன“
                                  மெனச்
செவ்வாய்வெண் ணகைக்கொடியைத் தேடுவா
                                ராயினார்.
151

     (இ-ள்.) வெளிப்படை.. மெல்லியலார் தமை வேண்டிய
அவ்வகையிலே வணங்கித் துதித்து, அழகிய திருவாரூரில் மனிப்
புற்றிலே யிடங்கொண்ட திருநீலக்கண்டப் பெருமானிடத்திலிருந்து
சென்று, “எங்கே சென்றனள் எனது இனிய உயிர்போன்ற
அன்னமாகிய பரவை“ என்று, அந்தச் சிவந்த வாயையும், வெள்ளிய
நகையையும் உடைய கொடிபோன்ற பரவையாரைத் தேட முற்பட்டார்
நம்பிகள்.

     (வி-ரை.)அணியாரூர் மணிப்புற்று - “தரளமெறி புனன்
மறிதிரைப் பொன்னி, மடுத்த நீள் வண்ணப் பண்ணையாரூர்“ என
முன்னர்க் (276) கூறியதற்கேற்ப “அணியாரூர்“ என்றார். மணிப்புற்று
276-பாட்டில் தெய்வ மணிப்புற்றுள்ளார் என்ற இடத்து உரைக்
குறிப்புக் காண்க.

      மை வாழும் திருமிடற்று வானவர் - விடம்
வாழ்தற்கிடமாகிய திருக்கண்டத்தையுடைய தேவதேவன் என்க.
மை என்றது கருமைப்பண்பை யுணர்த்தும் பெயர்; கருமையுடைய
விடத்திற்கு ஆகு பெயராயிற்று. “கருகு மையிரு ளின்கணம்“
(இளையான்குடி - புரா - 15) என்புழி மிகக்கரிய இருள் என்பது
கருத்து.

      வாழும் என்னும் பெயரெச்சம் மிடறு என்னும் இடப்பெயர்
கொண்டது. மையினுக்கு வாழ்வாவது உயிர்கள் பயந்து அருவருத்து
ஒதுக்கும் பொருளாகுமியல்பு மாறிவிரும்பி வழிபடும் ஏற்றம்பெற்ற
பொருளாதல். இனித், திருநீலகண்டமானது விடந்தோன்றிய ஞான்று
தேவர்களை வாழ்வித்ததேயன்றி எஞ்ஞான்றும் உயிர்கள்
தன்னைக்கண்டு சிவபெருமானது முழுமுதற்றன்மையை
உணர்ந்துய்யுமாறு செய்து அவைகளை வாழ்வித்தலின், வாழ்விக்கும்
திருமிடற்று எனப் பிறவினை விகுதி தொக்கது என்பதும் ஒன்று.
மையினால் உயிர்களை வாழ்விக்கும் என்க.

“புவனங்க ளுய்ய வையர் பொங்குநஞ் சுண்ண யாஞ்செய்
தவநின்று தடுத்த தென்னத் தகைந்துதான் றரித்த தென்று
சிவனெந்தை கண்டந் தன்னைத் திருநீல கண்ட மென்பார்“
                  - திருநீலகண்ட நாயனார் புராணம் - 4

என்று பின்னர்க் கூறுதல் காண்க. இதனைப் “பேதியா ஆணை“
என்று திருநீலகண்ட நாயனார் கொண்டு வாழ்வுபெற்றமையும்,
திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் “அவ்வினைக்கிவ்வினை“ என்ற
திருநீலகண்டத் திருப்பதிகத்தால் ஆணையிட்டுக் கொங்கிற்
பனிநோய் தீர்ப்பித்து உலகிற்கு உறுதிகூறி வாழ்வு கொடுத்ததுவும்,
இங்கே நினைவு கூர்தற்குரியன. மலத்தைப் போக்கி மாணத்தைத்
தவிர்த்தல் இறைமைக்குணமாதலின் அதனைத் தேற்றம் பெற
உயிர்களுக்கு எப்போதும் நினைவூட்டுமாறு இதனை இறைவன் தமது
செம்மேனியிலே கண்டத்திற் றோன்ற மணிமறுப்போல வைத்தார்
என்பது நூற்றுணிபு. மை - ஆகுபெயராய்க் கரிய மேகத்தையும்
குறிக்கும். இதனாலே மேகமும் (காத்தற்றொழிலும்), விடமும்
(அழித்தற் றொழிலும்) சேர்ந்து வாழும் - என்ற சொல்லாற் குறித்துக்
காட்டியவாறு என்றுங் கூறுவர். “மிடறே, நஞ்சகந் துவன்றி யமிர்து
பிலிற்றும்மே“ என்பது பதினெராந் திருமுறை. (சிவபெரு -
திருமும்மணி - 4)

“இருளின் உருவென்கோ? மாமேக மென்கோ?
மருளின் மணிநீல மென்கோ? - அருளெமக்கு
நன்றுடையாய்! செஞ்சடைமேல் நல்கிங்கு வெண்மதியம்
ஒன்றுடையாய்! கண்டத்தொலி“
       - கரைக்காலம்மையார் - அற்புதத்திருவந்தாதி - 88

     மை என்ற விடத்தினால் தங்கள் வாழ்வுகளை இழக்க நின்ற
ஏனைத் தேவர்களினின்று பிரித்துணர்த்த ஆசிரியர் மைவாழுந்
திருமிடற்று வானவர் என்று அடைமொழி கொடுத்துச் சிறப்புரைத்தார்.

     உயிராம் அன்னம் - எவ்வாறு சென்றாள் எனத் தம்
உயிரையே தேடிப் பெற நின்ற ஆரூரர்க்கு உயிரைத் தரும்
இயைபுடைமையால் மைவாழும் திருமிடறு நினைவுக்கு வரும்
இயல்பும் காண்க. 151