299. உம்பர் நாயகர் தங்கழ லல்லது
 
  நம்பு மாறறி யேனை நடுக்குற
வம்பு மால்செய்து வல்லியி னொல்கியின்
ரெம்பி ரானரு ளெந்நெறிச் சென்றதே.
153

     (இ-ள்.) உம்பர்.......அறியேனை - தேவதேவராகிய
இறைவருடைய திருவடிகளையே அல்லாமல் பிறிதொன்றையும்
நம்பும்நெறி பயிலாத என்னை; நடுக்குற......ஒல்கி - நடுக்கம்
பொருந்தும்படியாக வலிந்த மயக்கத்தைத் தந்து கொடிபோல்
அசைந்து; இன்று........சென்றது - இன்று எம்முன் வந்த எமது
பெருமானது அருள் வண்ணமாகிய பரவை எந்த வழியே போயிற்று?;
(ஏ - அசை)

     (வி-ரை.) உம்பர் - மேலுலகத்தவர்; தேவர்கள்.

      கழல் - கழல்களையே என்க. கழல் - சாதியொருமை.
வேற்றுமை யுருபும் பிரிநிலை ஏகாரமும் விகாரத்தாற்றொக்கன.

      அல்லது அறியேனை - அல்லாமல் வேறொன்றையும்
அறியேன் என்று நம்புதற்குச் செயப்படுபொருள் வருவித்து உரைக்க.
கழலே அறிவேனை என்ற உடன்பாட்டிற் கூறுவதினும் கழலே
யல்லாது வேறு அறியேன் என இரண்டு எதிர்மறைகளிற் பெற்ற
உடன்பாட்டுப்பொருள் அதிக வலிமையுடைமையின் இதனால்
நம்பிகளது மன உறுதியின் வலிமை காட்டப்பெற்றதாம். “அரியறியா
மலர்க் கழல்கள் அறியாமை அறியாதார்“ (மானக்கஞ்சாறநாயனார்
புரா - 10) என்றதுபோலக் காண்க.

      வம்புமால் - வலிந்து தரப்பெற்ற மயக்கம். “வம்பு பழுத்து
உடலம்மாண்டிங்ஙன் போகாமே“ (குலாப்பத்து - 6 - திருவாசகம்)
“வம்பென ஆண்டுகொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து“
(ஏயர்கோன் - 392) முதலிய திருவாக்குக்கள் காண்க. வம்புக்காய்
என்பது காலமல்லாக் காலத்திற் றரும் காய் கனி முதலியவற்றிற்கு
வரும் உலக வழக்கச் சொல்லாதலும் காண்க. வன்பு என்பது வம்பு
என்றாயிற்று என்பர்.

      இவ்வாறன்றி வம்பு என்பதற்குப் புதிய - நிலையில்லாத -
என்று பொருள் கூறுதலுமாம். “வம்பமாரியைக் காரென“ என்ற
திருக்கோவையாகும். “வம்பென ஆண்டு கொண்டான்“ (ஏயர்கோ -
392) முதலிய திருவாக்குக்களும் காண்க.

      மால் செய்து - மயக்கத்தை மனத்தில் வரச் செய்து. செய்து
- செய்வித்து எனப் பிறவினைப் பொருளில் வந்தது.

      வல்லியின் ஒல்கி - கொடிபோல் துவளுதல் - அசைதல்.
“மதிபூத்த விரைக்கொடியோ“ (286), “செங்கனிவாய் இளங்கொடி“
(193) என்று முன்னர்க்கூறியதுங் காண்க. அருள், வல்லியின்
(கொடிபோல்) ஒல்கி எந்நெறிச்சென்றது என்க. மேற்பாட்டில்
பற்றறுப்பான் மிகும் ஆசைகொண்ட யான் அதன்பொருட்டு நாயகர்
கழலே நம்பி வாழ்வேன் என்ற கருத்தால் நம்புமாறறியேன் என்று
தொடர்ந்து நினைத்தார் என இப்பாட்டிற் கூறியபடியாம். இதனையே
தொடர்ந்து, வரும் பாட்டிலே, அவ்வாறு நம்பியதற்குப் பயன்
அவர்கழல் பந்தம் வீடுதரும் என்று கூறுவதும் காண்க. 153