301. என்று சாலவு மாற்றல “ரென்னுயிர்,
 
  நின்ற தெங்“கென நித்திலப் பூண்முலை
மன்றல் வார்குழல் வஞ்சியைத் தேடுவான்
சென்று தேவா சிரியனைச் சேர்ந்தபின்,
155

     (இ-ள்.) என்று.......என - மேலே குறித்தபடி பலவும் சொல்லி
மிகவும் தரியாராய் எனது உயிர் (பரவை) எங்குச் சென்று நின்றது
என்று; நித்திலம்......சேர்ந்தபின் - முத்துக்கள் அழுத்திய அணிகள்
பூண்ட முலையினையும், வாசனை பொருந்திய அழகிய கூந்தலையும்
உடைய வஞ்சிக்கொடி போன்றவராகிய பரவையாரைத் தேடுதற்காகப்
போய்த் தேவாசிரிய மண்டபத்தை அடைந்த பின்னர்,   

     (வி-ரை.) என்று மேலே கூறிய மூன்று பாட்டுக்களிலும்
குறித்தபடி சொல்லி. என் உயிர் நின்றது எங்கு என - எனது
உயிர்போன்ற பரவை எங்கு நின்றது என்று சொல்லி. எனது உயிரே
இப்போது என் உடலிலில்லாது புறம்பே வேறொன்றிற் சென்று
தங்கியது போன்றதாம். அவ்வொன்று எங்கு நின்றது என்பதும்
குறிப்பு. உயிர்போன்றாரை உயிர் என்று உருவகப்படுத்திக் கூறியதால்
நின்றார் என்னாது நின்றது என்றார். அப்படி என் உடலிலிருந்து
சென்றிருப்பதாகத் தோற்றும் என் உயிரைத் திருவாரூர் இறைவர்
எனக்கு அளித்துக் காப்பார் என்பார் ஆவி நல்குவர் என்றமையுங்
காண்க. உயிர்போன்ற பரவையாரைக் கொடுத்தால் எனக்கு உயிர்
கொடுத்தவராவர் என்பது.

      வஞ்சி - காட்சி காட்டி மறைத்தமையால் வஞ்சிக்கும்
தொழிலுடையவர் போன்றனர் என்பது குறிக்க வஞ்சி என்ற பெயராற்
கூறினார். “பஞ்சிற் றிருந்தடி நோவப் போயெனை, வஞ்சித்திருந்த
மணியறை யிதுவே“ (ஆளுடைய பிள்ளையார் - திருமும் மணி - 16)
என்ற பதினொராந் திருமுறையும் காண்க.

      தேடுவான் சென்று - தேடும் பொருட்டுப் போய்.

      தேவாசிரியனைச் சேர்ந்தபின - தேவாசிரிய மண்டபத்தை
அடைந்தபின். கொடியாகிய அது (அருள்) எந்நெறிச் சென்றதே (298
- 299 - 300) என்று தேடுவான் சென்று பின் தேவாசிரியனைச்
சேர்ந்தார்; அதன்பின். (தேவாசிரியன் - 137 பார்க்க).

      மன்றலங்குழல் - என்பது பாடம். 155