303. “நாட்டு ல்லிசை நாவலூ ரன்சிந்தை  
  வேட்ட மின்னிடை யின்னமு தத்தினைக்
காட்டு வன்கட லைக்கடந்“ தென்பபோற்
பூட்டு மேழ்பரித் தேரோன் கடல்புக,
157

     (இ-ள்.) வெளிப்படை. (உலகில்) நல்ல புகழை நாட்டும்
திருநாவலூரராகிய நம்பிகளது மனம் விரும்பிய மின்போன்ற
இடையினையுடைய பரவையாராகிய இனிய அமுதத்தைக் கடலைக்
கடந்துபோய்க் காட்டுவேன் என்று செல்வதுபோல, வெவ்வேறாகிய
ஏழு நிறக் குதிரைகள் பூட்டிய தேரில்வரும் சூரியன் மேல்கடலிற்
செல்ல (சூரியன் அத்தமிக்க),

     (வி-ரை.) நாட்டும் நல்இசை நாவலூரன் - நல் இசையை
(உலகில்) நாட்டும் திருநாவலூரர் என்று கூட்டிப் பொருள் உரைக்க.

     சிவபெருமானது புகழையும் அடியார் புகழையும் உலகில்
நிலவச் செய்வதற்கே அவதாரஞ் செய்தாராகலின் நல்லிசை நாட்டும்
நாவலூரன் என்றார். “மாதவஞ் செய்த தென்திசை வாழ்ந்திடத்,
தீதிலாத் திருத் தொண்டத்தொகை தரப் போதுவார்“ என்று முதலிற்
குறித்தமை காண்க. “பொருள்சேர் புகழ்“ என்ற குறளுக்குப்
பரிமேலழகர் உரைத்ததுபோல, ஏனையோர் இசைகள் ஒன்றும்
முற்றும் நல்லன ஆகாமையின் அரன் புகழும் அவன் அடியார்
புகழுமே நல்இசை எனப்பெறும். இவ்வாறன்றி (சிந்தை ஆரவும்
உன்னும்) என் சிந்தையில் வந்து மால் செய்து என்றதற் கேற்பச்,
சிந்தைக்கு அடைமொழியாக்கி, நல்லிசை நாட்டும் சிந்தை என்று
கூறுதலும் ஒன்று.

     மின்னிடை - அன்மொழித்தொகை.

     கடலைக் கடந்து அமுதத்தினைக் காட்டுவன - எனக்
கூட்டுக. (மிருதம் - மரணம்) அமுதம் - மரணத்தைப் போக்கி
உயிரைக் கொடுப்பது. அமுதமலை கடலுக்கு அப்புறம் உள்ளது
என்றும், அது வந்தால் இறந்தாரும் உயிர் பெறுவர் என்றும் பெரு
நூல்கள் பேசும். கந்தபுரராணம், இராமாயணம் முதலியவற்றிற்
காண்க. மின்னிடையமுதத்தினைக் கடலைக் கடந்து காட்டுவன்
என்பபோற் கடல்புக - என்க. உருவகமும் தற்குறிப்பேற்றமும் வந்த
கலவையணி. குரியன் இச்சமயம் நம்பிகளுக்குத் தன்னாலான பணி
செய்து அவரது அருளைப்பெற எண்ணினான் என்ற குறிப்பாம்.
வானவர் தொண்டர்களுக்குப் பின் நின்று பயன்பெறும் கூட்டத்தார்
என்பது இப்புராணத்துப் போந்த துணிபு.

“தேமரு தொடையல் மார்பன் திருமணக் கோலங் காணக்
காமுறு மனத்தான் போலக் கதிரவ னுதயஞ் செய்தான்“

என முன்னர் இப்புராணத்திற் (159) கூறிய குறிப்பும் நோக்குக.

     ஆரூரை ஆண்டவர் ஆவி நல்குவர் என்று நம்பிகள்
எண்ணிய போழ்தில் ஆவி நல்குதல் ஐந்தொழில் செய்யும்
அவ்விறைவனால் அன்றிப் பிறரால் இயலாது. ஆயினும் அதற்குத்
துணை செய்வோம் என்று சூரியன் கருதிக் கடல் புக்கான் என்பார்
காட்டுவன் கடலைக் கடந்து என்பதுபோல் - என்றார்.

“கைகாட்டு வான்போலக் கதிர்காட்டி யெழும்போதில்“
            - கண்ணப்ப நாயனார் புராணம் - 134
 
“தெருணெறி நீர்மையிற் சிரத்திற் றாங்கிட
வருணனுஞ் செய்தனன் முன்பு மாதவம்“

                   - திருநா. புரா - 130

முதலிய பல இடங்களும், வெள்ளையானைச் சருக்கத்தே நம்பிகளை
“இந்திரன் மால் பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம் வலஞ்செய்து
வந்தெதிர்கொ“ண்டு வெள்ளை யானையில் ஏற்றிக் கயிலைக்கு
அழைத்துச் சென்றதும் பிறவும் காண்க. “அலைகடலாலரையன்
னலர்கொண்டு முனவந்திறைஞ்ச“ என்ற நம்பிகள் தேவாரத்தில்
வருணன் நம்பிகளை வணங்கியமை அறிகின்றோம்.

     கடலைக் கடைந்து - என்று பாடங் கொண்டு, கடலைக்
கடைந்து அமுதங் காட்டுவன் என்று பாற்கடல் கடைந்து தேவர்
அமுதம்பெற்ற சரிதத்திற் கேற்பப் பொருள் கூறுவாருமுண்டு. ஒரு
வகையாற் கூறப்படுதலன்றிச் சூரியன் கடலைக் கடைந்தான் என்பது
அச்சரிதத்திற் கேட்கப் படாமையானும் பிறவாற்றானும் அது
பொருளன்றென்க. கடலைக் கடந்து காட்டுவன் - மேல்கடல்
கடந்தாற் கீழ்கடலிற் தோற்றுவன். அதுவே உதயம் எனப்படும்.
மறுநாள் பரவையார் மணம் நிகழ்தலின் கடல் கடந்து காட்டுவன்
என்பது குறிப்பாம்.

     என்பபோல் - என்பது போல. என்பது என்னும் தொழிற்பெயர்
கடைகுறைந்து என்ப என நின்றது.

     ஏழ்பரித் தேரோன - சூரியன் தேரில் ஏழு குதிரைகள்
பூட்டப் பெற்றுள்ளன என்றும், அவை ஏழுநிறமுடையயன என்றும்
புராணங்கள் கூறும். எழு நிறமுடைய சப்தா என்ற குதிரை
பூட்டப்பெற்ற தென்றும் கூறுவர். நீலம் முதல் சிவப்பு ஈறாகவுள்ள
எழுநிறங்களின் சேர்க்கையே சூரியனது வெண்கதிர் ஆகும்.
இவையே வானவில்லிற் காணப் பெறும் ஏழ்நிறங்களாம். கதிர்களாலே
உலகில் போந்து ஒளி செய்கின்றானாதலால் இவ்வேழ்பரித்தேர்
செல்வதாய் உபசரித்துக் கூறுவது தமிழ் நூல் மரபென்றர். பூட்டும்
ஏழ்பரி என்றதனால் அவை ஏழும் ஒன்றுசேர்ந்து கட்டப் பெற்றதாய்
உள்ளதாகும் ஞாயிற்றின் கதிர் என்பது குறிப்பாம். கைக்கிளையிற்
கவல்வார்க்கு இரவு கடல்போன்றதாம்; ஆதலின் நானும் (இரவாகிய)
கடல் கடந்து காட்டுவன் என்ற தொனிப் பொருள் பெறுமாறும்
காண்க.

     கடல்புக - உபசாரவழக்கு. கடலுட்புகுவது போலச் செல்ல 157