304. எய்து மென்பெடை யோடிரை தேர்ந்துண்டு  
  பொய்கை யிற்பகல் போக்கிய புள்ளினம்
வைகு சேக்கைகண் மேற்செல வந்தது
பையுண் மாலை தமியோர் பனிப்புற.
158

     (இ-ள்.) எய்தும்......செல - பிரியாமல் தம்மோடு பொருந்திய
மென்மைத் தன்மையுடைய பெட்டைகளுடன்கூடிப் பல இடத்தும்
இரைதேடி உண்டு பொய்கையிலே பகற் காலத்தை உண்டாட்டயர்ந்து
இனிதாகக் கழித்த பறவையினங்கள் தாம் தாம் ஒடுங்கும் கூடுகளைச்
சென்று அடையவும்; தமியோர் பனிப் புற -
(அப்பறவைகளைப்போலத் தத்தம் துணையுடன் கூடி
இனையாயின்றித்) தனித்துள்ளார் பயந்து நடுங்கவும்; பையுள் மாலை
வந்தது - பிரிந்தார்க்குத் துன்பஞ்செய்யும் தன்மையுடைய மாலைப்
போது வந்து கூடிற்று.

     (வி-ரை.) இப்பாட்டில் இயற்கை என்னும் தன்மை நவிற்சி
யணி ததும்பிச் சிறந்து விளங்குதல் அறிந்தனுபவிக்கத்தக்கதாம்.
மாலை - புள்ளினம் சேக்கை மேற் செலவும் - தமியோர்
பனிப்புறவும் - வந்தது என்று கூட்டுக.

      எய்தும் என்றமையாலே பறவைக்கூட்டம் தத்தம்
பெடைகளோடு கூடி இரை தேர்ந்துவாழும் இயல்பினையும்,
மென்பெடை என்றதனால் அவற்றிலே பெட்டைகளுக்குக்
காட்டப்பெறும் அன்பினியல்பையும், இரை தேர்ந்து உண்டு எனவே
பறவைகளின் இரையாகிய தானிய மணிகளும், மீன்முதலியனவும்
பிறவும் அங்கங்குச்சென்று இயல்பினையும், பொய்கையிற் பகல்
போக்கிய என்றமையால் உணவு கிடைக்குமிடம் பொய்கை என்னும்
இயல்போடு இக்காலத்தும் மக்கள் விரும்பிச்செல்வதுபோல்
வேனிற்கால இன்ப வாழ்க்கைக்கு உரியது பொய்கை எனும்
இயல்பினையும், வைகு சேக்கைகள் - என்றமையால் பறவைகள்
தத்தமக்கு வீடுகளாகக் கூடுகட்டி அவற்றிற் பள்ளி முதலியவையும்
அமைத்துச சுகவாழ்வு வாழும் இயல்பினையும், மேற்செல
என்றமையால் மாலைக்காலம் ஆனவுடன் பறவைகள் கூடுநோக்கிச்
செல்லும் இயல்பினையும், புள்இனம் என்றதனாலே அவை கூட்டம்
கூட்டமாய் வாழும் இயல்பினையும், இனமாய்க் கூடியபோதே
இன்பமுறும் இயல்பினையும், பிறவற்றையும், எடுத்துக் காட்டுவதாய்,
இவ்வாறு இயற்கை அழகு நிரம்ப இப்பாட்டுத் தன் சிறிய உருவத்திற்
கண்ணாடிபோலப் பெரிதும் விளங்குதல் கண்டு மகிழ்க.

      பையுள் மாலை - சேர்ந்தார் - பிரிந்தார் - என்பதின்றியே,
மாலையின் பொது இலக்கணம் இருள் தருவதாதலின் பையுள்மாலை
என்றார்.

      தமியோர் பனிப்புஉற - (தமி - தனி); தமியோர் -
துணையுடன் கூடாமல் தனித்து வாழ்பவர். அவரவர்
தனித்திருந்தாலும் தத்தம் துணையைப் பொருந்திய
உள்ளத்தாராதலாலும், அதுவே பனிப்புறுதற்குக் காரணமாதலாலும்.
தமியோர் என்று பன்மை விகுதிபெற்றது. தனித்து வாழ்வோர் பலரும்
என்று உரைத்தலுமாம். எல்லார்க்கும் பையுள் செய்வது மாலையின்
பொது இலக்கணமும், தமியோரைப் பனிப்புறச் செய்தல் அதன்
சிறப்பு இலக்கணமுமாம். தனித்து வழிச்செல்வோருங், வீட்டில்
துணையின்றித் தனித்து வாழ்வோரும் பொருள் வகையிலும்
நடுக்கமுறுதல் உலகியல்பிற் காண்க. தமியோர் என்பது இங்கே
தனித்து நின்ற நம்பிகள் - பரவையார் எனும் இவ்விருவரும் என்று
சிறப்பாலும் பொருள் தருவலும் காண்க.

      ஏழ்பரித் தேரோன் கடவுல்புக மாலை வந்தது என்க. காரண
காரியப் பொருளில் வந்ததாம். கடல்புகுதல் காலத்தின் ஒரு
பகுதியின் தொழில். மாலைவருதல் காலப் பகுதி மற்றொன்றின்
தொழில். இவற்றில் (கடல்புகுதலாகிய) ஒன்றையே (மாலை
வருதலாகிய) மற்றொன்றாக மயங்கி யறிதல் கூடாததாம்.
ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு குணமுடைமையின் இவை தனித்தனிக்
காலக் கூற்றின் வெவ்வேறு பொருள் ஆகிய பகுதிகள் என்பது.

“வருங்கறைப் பொழுது நீங்கி மல்கிய யாமஞ் சென்று
சுருங்கிட வறிந்த புள்ளின் சூழ்சிலம் போசை கேட்டு“
                           - கண் - புரா - 123

என்று பின்னர்க் கூறுமிடத்துங் காண்க.

     இவ்வாறே வடமொழியிலும் போசராசர் சபையில் ஒரு கவி
“சூரியன் மேல்கடல் விழுந்தான்“ என்ன, அதுகேட்ட ஒரு பெண்கவி
“பறவைகள் மரப்பொந்துகளில் அடைந்தன“ என்ன, இரண்டுங்
கேட்ட காளிதாச மகா கவி “மதனன் தனித்த யுவ - யுவதிகளிடம்
மெல்ல அடைவான்“ என்றார் எனக் கூறியதாக உள்ள கவியின்
அழகும் இங்கு வைத்துக் காண்க.

     மேற்செல - பனிப்பற - மாலைவந்தது - என்று இரண்டும்
சேரச் சொன்னமையின் மாலையாகிய ஒரு பொருளே அவரவர்
பக்குவ நோக்கிச், சேர்ந்தார்க்கு விருப்பும், பிரிந்தார்க்குப் பனிப்பும்
தருவதாம் எனக் குறிப்பித்த அழகு காண்க. இரண்டு செயலும்
செய்வது ஒரே பொருள் என்பார் மேற்செலவுக்கும்
பனிப்புறுதலுக்கும், இடையில் மாலையை வைத்துக் கூறினார். பிரிந்த
வழியே பனிப்புளதாம் எனும் அகப்பொருளைக் குறிக்க, இனம்
சேக்கை மேற்செல என்பதினின்றும் பையுள் மாலையை இடையிற்
கொடுத்துப் பனிப்புற என்று பிரித்துக் கூறினார்.

     பனித்தல - நடுக்கமுறுதல்; நோயுறுதல். புறத்தே மாலையின்
குளிராலும், அகத்தே வேட்கையின் வெப்பத்தாலும் நோயுறுதல்
ஈண்டுக் கருதப்பெற்றது.

     மேற்செல - இரைதேரும்போதும், உண்ணும்போதும்,
பொய்கையில் ஆடல்பாடல் புரியும்போதும் என்றிவ்வாறு
பகல்முழுதும், பின்னர் மாலையிற் சேக்கைக்குச் செல்லும்போதும்,
இரவிலும், எப்போதும் இணைபிரியாது ஆனந்தமாக வாழும்
பறவைகளின் வாழ்வு ஒரோர் காலத்துமட்டும் இணையாகக்கூடி
வாழும் மனிதர் வாழ்வை விட மகிழ்ச்சி தருவது என்ற பொருளும்
குறிப்பாற் பெறுவது காண்க. இணை பிரிந்தோர் - அவ்வாறு பிரியாது
கூடி மகிழ்வோரைக் காணில் தம் துன்பம் மிகப் பெறுவர் என்பது
உலக இயல். புள்ளினம் பெடையோடு பொய்கையிற் பகல் போக்கிச்
சேக்கை மேற்சொல்ல, அது கண்டு தமியோர் பனிப்புற -
என்றுரைத்தலுமாம்.

“சுற்றம் பலமின்மை காட்டித்தன் றொல்கழ
                               றந்ததொல்லோன்
சிற்றம் பலமனை யாள்பர மன்றுதிண் கோட்டின்வண்ணப்
புற்றங் குதர்ந்துநன் னாகொடும் பொன்னார்
                               மணிபுலம்பக்
கொற்ற மருவுகொல் லேறுசெல் லாநின்ற கூர்ஞ்செக்கரே“
(346)
   
“நீகண் டனையெனின் வாழலை நேரிழை யம்பலத்தான்
சேய்கண் டனையன்சென் றாங்கோ ரலவன்றன்
                                  சீர்பெடையின்
வாய்வண் டனையதொர் நாவற் கனிநனி நல்கக்கண்டு
பேய்கண் டனையதொன் றாகிநின் றானப்
                                பெருந்தகையே“
 (84)

என்ற திருக்கோவையார்த் திருவாக்குகளின் கருத்துக்களும்
காண்க. 158